ஒரு தாயின் வலி உணர்ந்து, அவரின் துயர் துடைக்க முன்வந்திருக்கிறார்கள் ஜூ.வி வாசகர்கள். கூடவே அந்தக் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்துதர உத்தரவு பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு!
கடந்த ஜூ.வி இதழில், ‘‘ஒரு முறையாவது அம்மானு கூப்பிடுங்க செல்லங்களா!’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். வேலூரில் ஒரு சிறிய வாடகை வீட்டில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் தாய், சுயநினைவில்லாத கணவர், மனவளர்ச்சி குன்றிய இரண்டு பிள்ளைகள், வயதான மாமனார், மாமியார் ஆகியோரை அரவணைத்தபடி கடுமையான வறுமையில் போராடிக்கொண்டிருந்த சுகந்தியின் துயரம் பற்றி எழுதியிருந்தோம். சுகந்தி அனுபவித்துவந்த துயரத்திலும், அவர் காட்டிவரும் அப்பழுக்கற்ற அன்பிலும் நெகிழ்ந்த வாசகர்களிடமிருந்து அவரது குடும்பத்துக்கு உதவிகள் குவிந்துவருகின்றன.

இதழ் வெளியான ஜூலை 31-ம் தேதி காலையிலேயே, உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது கட்டுரை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் தொடங்கி சேலம், பெங்களூரு எனப் பல்வேறு இடங்களிலிருந்தும் உதவிக்கரங்கள் நீளத் தொடங்கின. கட்டுரையை வாசித்த கையோடு வி.ஐ.டி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.வி.செல்வம், “அந்தக் குடும்பத்துக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய வி.ஐ.டி தயாராக இருக்கிறது” என்று நம்பிக்கை கொடுத்தார். வேலூர் அ.தி.மு.க நிர்வாகி எஸ்.ஆர்.கே.அப்பு, மாதந்தோறும் அந்தக் குடும்பத்துக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை தர முன்வந்திருக்கிறார். சத்துவாச்சாரியைச் சேர்ந்த சமூக சேவகர் தினேஷ் சரவணன், 2,000 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தார். பெங்களூரில் வசிக்கும் முத்துக்குமரன் 6,000 ரூபாயை உடனடியாக அனுப்பினார்.

அரசுத் தரப்பிலும் உடனடி ரியாக்ஷன்! வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், காட்பாடி தாசில்தார் சரண்யா தலைமையிலான டீம் ஒன்று சுகந்தியின் வீட்டுக்குச் சென்றது. குடும்ப நிலவரத்தை நேரில் பார்த்தவர்கள், சுகந்தி வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே வீட்டுமனைப் பட்டா வழங்கி, அரசுத் திட்டத்தில் வீடு கட்டித் தருவதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட ஆறுதல் தரக்கூடிய தீர்வாக, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள்துறை அதிகாரிகளை சுகந்தியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அப்போது, சுகந்தியிடம் அலைபேசியில் மிக அக்கறையாகப் பேசிய ஷில்பா, ‘‘அரசு மருத்துவமனையிலேயே இரு குழந்தைகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும். இந்த வாரத்துக்குள் ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணமும், தையல் மெஷினும் வழங்கப்படும். விரைவில், உங்களுக்கு சத்துணவுத்துறையில் பணி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்’’ என்று உறுதியளித்தார். மறுநாளே (ஆகஸ்ட் 2-ம் தேதி), சுகந்திக்கு 50,000 ரூபாயையும், தையல் மெஷினையும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஆகியோரின் ஆணைப்படி, திருமதி சுகந்திக்கு உதவிகள் வழங்கப்படுவதாக’ குறிப்பிடப்பட்டது.

நம்மைத் தொடர்புகொண்ட வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி, ‘‘சுகந்தியின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கும்படியும், அந்த விவரங்களை ஜூ.வி-க்கு உடனுக்குடன் அப்டேட் செய்யும்படியும் மாவட்ட நிர்வாகத்திடம் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்’’ என்றார்.

‘‘எங்க கண்ணீரைத் துடைக்க முதல்ல வந்தது ஜூனியர் விகடன். முதலமைச்சர் ஐயாவே எங்க நிலைமையைக் கேள்விப்பட்டு உடனடியா உதவி செய்ய சொல்லியிருக்கிறார்னு நினைக்கும்போது, ஏதோ கனவு மாதிரி இருக்குது. வாழணுமா வேணாமானு நினைச்சுக்கிட்டிருந்த எங்க வாழ்க்கை ஒரே நாளில் மாறிடுச்சு. எல்லாருக்கும் நன்றி!” என்று கண்ணீரோடு நெகிழ்ந்தார் சுகந்தி!