அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

செத்தவங்க குடும்பத்துக்கும் அரசு வேலை... கொன்னவங்க குடும்பத்துக்கும் அரசு வேலையா?

பென்னிக்ஸ், ஜெயராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
பென்னிக்ஸ், ஜெயராஜ்

- சர்ச்சைக்குள்ளான வாரிசுப் பணி நியமனம்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் 10 போலீஸாரில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையின் மகனுக்கு, கருணை அடிப்படையில் காவல்துறையில் பணி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரின் தாக்குதலால், 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தின் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரிக்கும் போலீஸார், குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வதாக எழுந்த குற்றச்சாட்டால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிடமிருந்து கைமாறி, தற்போது சி.பி.ஐ வசமிருக்கிறது.

பென்னிக்ஸ், ஜெயராஜ்
பென்னிக்ஸ், ஜெயராஜ்

இந்த வழக்கின் விசாரணை, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இவர்களில், எஸ்.எஸ்.ஐ பால்துரை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, 2020, ஆகஸ்ட் 9-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டபோதே, “கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுப்பதா?” என்று சர்ச்சையானது. இந்த நிலையில் பால்துரையின் மகன் பிரவானுக்கு கருணை அடிப்படையில், அதே காவல்துறையில் ‘தகவல் பதிவு உதவியாளர்’ பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஜெயராஜ் குடும்பத்தினர் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிஸ், “அப்பா, தம்பின்னு ஒரு குடும்பத்தோட ஆணிவேர்களா இருந்த ரெண்டு பேரையும் பறி கொடுத்துட்டு அநாதையா நிக்கிறோம். இறப்புக்கு நீதி கேட்டு நீதிமன்றப் படி ஏறி, இறங்கிட்டு இருக்கோம். ஆனா, கொலை செஞ்ச ஒன்பது பேரும் தவறு செய்துட்டோம் என்கிற எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாம நீதிமன்ற விசாரணைக்கு ஜாலியா வந்துட்டுப் போறாங்க. அவங்க முன்னால நாங்கதான் கூனிக்குறுகி நிக்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு விசாரணையிலயும் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட எல்லா போலீஸ்காரங்களும் சாட்சிகளைக் கலைக்கிற நோக்கத்துலதான் பேசுறாங்க. உயிரைப் பறி கொடுத்த எங்களுக்கும் கருணை அடிப்படையில அரசு வேலை, கொலை செஞ்ச போலீஸ்காரரோட மகனுக்கும் கருணை அடிப்படையில அரசு வேலையா... எப்பவுமே போலீஸ்காரங்க, போலீஸ்காரங்களைக் காப்பாத்தத்தான் நினைக்கிறாங்க. ஒரு தந்தையோட இழப்பு, அதுவும் வருமானம் ஈட்டுகிற குடும்பத் தலைவரின் மறைவு அந்தக் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய இழப்புன்னு உணர்ந்தவங்கதான் நாங்க. அதேநேரத்துல, கொலைக் குற்றம் செய்தவரோட வாரிசுக்கு அரசுப் பணி என்பது, அந்தக் குற்றத்தை அங்கீகரிக்கிற மாதிரி ஆகிடும். இதுதான் நீதியா?” என்றார் வேதனையுடன்.

செத்தவங்க குடும்பத்துக்கும் அரசு வேலை... கொன்னவங்க குடும்பத்துக்கும் அரசு வேலையா?

ஜெயராஜ், பென்னிக்ஸ் தரப்பின் வழக்கறிஞர் ராஜீவ் ரூபஸிடம் பேசினோம். “சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் ரேவதி, பியூலா ஆகியோர் பால்துரைதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் முதுகில் குத்தி, கீழே தள்ளித் தாக்கினார் எனத் தெளிவாக சாட்சியம் அளித்திருக்கின்றனர். பால்துரையின் தாக்குதல் குறித்து நீதிமன்றத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை 105 சாட்சிகளில், இதுவரை 48 பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. வழக்கின் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், உடல்நலக் குறைவால் பால்துரை உயிரிழந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரின் மகனுக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணம். இந்தப் பணி நியமனத்துக்கான விளக்கம் கேட்டு தூத்துக்குடி எஸ்.பி., மதுரை டி.ஐ.ஜி., டி.ஜி.பி ஆகியோருக்கு மனு அனுப்பியிருக்கிறோம். நீதிமன்றத்திலும் முறையிடவிருக்கிறோம்” என்றார்.

செத்தவங்க குடும்பத்துக்கும் அரசு வேலை... கொன்னவங்க குடும்பத்துக்கும் அரசு வேலையா?

பணி நியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் இந்த சர்ச்சை குறித்து விளக்கம் கேட்டோம். “சாத்தான்குளம் வழக்கில் பால்துரை சிறையில் தண்டனை பெற்றுவந்தாலும், அவர் காவல்துறையிலிருந்து பணியிடை நீக்கம்தான் செய்யப்பட்டிருந்தார். பணியிலிருந்து நீக்கப்படவில்லை. எனவே, அவர் அரசுப் பதவியில் இருப்பதாகத்தான் அர்த்தம். உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்திருந்தாலும், அவருக்கு கொரோனா தொற்றும் இருந்திருக்கிறது. அதனாலும், அவரின் எதிர்காலக் குடும்ப நலன் கருதியும்தான் தமிழக அரசுக்கு மாவட்ட காவல்துறை பரிந்துரை செய்து, அதன்பேரில் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்.

“இதே காவல்துறையில் கருணை அடிப்படையில் வேலை கோரி வாரிசுகள் பலர் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்கள்மீது வராத கருணை, இரட்டைக்கொலை வழக்கில் கைதானவர்கள்மீது வருகிறதென்றால், இந்த வழக்கின் குரூரம் காவல்துறையின் புத்திக்கு இன்னும் உறைக்கவில்லை என்றே பொருள்” என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்!