Published:Updated:

`போர்பந்தர் முதல் பானிபட் வரை..!’ - வருகிறது `இந்திய பசுமை பெருஞ்சுவர்’ திட்டம்

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் சீரழிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படும்.

Green wall
Green wall

இந்த 21-ம் நூற்றாண்டில் உலகநாடுகள் அனைத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது சுற்றுசூழல் சீர்கேட்டால் ஏற்படும் விளைவுகள்தான். பருவநிலை மாற்றம், பருவமழை பொய்த்தல் என நீண்டுக்கொண்டே போகும் இதன் முக்கிய காரணங்களுள் ஒன்று காடுகளை அழித்தல். தற்போது மரம் வளர்த்தலின் தேவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் ஏற்பட்டுள்ள நிலையில் இதன் முக்கியத்துவத்தை, பயனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்று மிகப்பெரிய பயனை தரப்போகிறது மத்திய அரசின் ``தி கிரேட் கிரீன் வால்” (the great green wall ) திட்டம். தற்போது ஆரம்பகட்ட ஆலோசனை நிலையில் மட்டுமே இருக்கும் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து, பல நன்மைகள் ஏற்படும் என்கிறார்கள்.

`போர்பந்தர் முதல் பானிபட் வரை..!’ - வருகிறது `இந்திய பசுமை பெருஞ்சுவர்’ திட்டம்

அதென்ன `கிரேட் கிரீன் வால்' திட்டம் ?

ஒரு மிகப்பெரிய அளவிலான நிலப்பரப்பை தேர்வுசெய்து அதன் முழுப்பரப்பிலும் புதிதாக மரங்கள் வளர்க்கப்பட்டு, காடுகள் உருவாக்கப்பட்டு ஒரு பெரிய கிரீன் பெல்ட் (green belt) அமைப்பதே இந்த கிரீன் வால் திட்டம். ஏற்கெனவே ஆப்ரிக்க கண்டத்தில், `தி கிரேட் ஆப்பிரிக்கன் வால்’ என்ற பெயரில் அதன் மேற்கு மூலையில் உள்ள செனெகல் நாட்டிலிருந்து கிழக்கு மூலையின் ஜிபூட்டி (Djibouti) என்னும் நாடு வரை ஏறத்தாழ 7,600 கி.மீ நிலப்பரப்பில் சஹாரா பாலைவனத்தின் மேல் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது சுமார் 20 நாடுகளின் ஒத்துழைப்போடு இன்று வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இதே திட்டமானது குஜராதின் போர்பந்தரில் தொடங்கி டெல்லி ஹரியானா எல்லையில் உள்ள பானிபட் வரை சுமார் 1,400 கி.மீ தொலைவுக்கு 5 கி.மீ அகலத்துக்கு அமையப்போவதாகத் தெரிகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பல்லாயிரகணக்கான ஹெக்டர் சீரழிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படும். மேலும், இங்கு வளர்க்கப்படும் மரங்களால் உருவாகும் காடுகள் தார் பாலைவனத்திலிருந்து வரும் மிக அதிக அளவிலான புழுதி காற்றுக்கு அரணாக அமையும்.

இஸ்ரோ அமைப்பு 2016-ம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. குறிப்பாக, ஆரவல்லி மலைத்தொடர்தான் இதில் அதிகம் பாதிக்கபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவின் மொத்த பரப்பளவான 328.7 மில்லியன் ஹெக்டரில் 96.4 மில்லியன் ஹெக்டர் இந்த வகை நிலங்கள் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஆரவல்லி தொடர் மீட்கப்பட்டு சுமார் 26 மில்லியன் ஹெக்டர் பரப்பளவில் மரங்கள் வளர்க்கப்பட உள்ளன. ஆப்பிரிக்காவில் இந்தத் திட்டமானது நீண்ட காலமாக மிக சீராகச் செயல்படுத்தப்பட்டு, தற்போது அதன் பலன்கள் கிடைக்கும் நிலையில், இந்தியாவில் திட்டத்தின் பலன்கள் பெற 2030 வரை காத்திருக்க வேண்டும்.