Published:Updated:

10 ஆண்டுப் பகை... டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் வெடித்த வெடிகுண்டு! - சிக்கிய விஞ்ஞானி | பகுதி 2

குண்டு வெடிப்பு நடந்த ரோஹினி நீதிமன்றம்
News
குண்டு வெடிப்பு நடந்த ரோஹினி நீதிமன்றம்

தனது 10 ஆண்டுப் பகையைத் தீர்த்துக்கொள்ள அரசு விஞ்ஞானி ஒருவர் டெல்லி நீதிமன்றத்தில் வெடிகுண்டுவைத்து பிடிபட்டிருக்கிறார்.

டெல்லியிலுள்ள ரோஹினி நீதிமன்றத்தைச் சிலர் தங்களின் எதிரிகளைத் தீர்த்துக்கட்டப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.

ரோஹினி நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி யாரும் எதிர்பாராதவிதமாக சக்தி குறைந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அந்த வழக்கில் கைதானவர் ஒரு விஞ்ஞானி. அந்தச் சம்பவம் முழுமையான தகவல் முதல் பகுதியில்...

டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் நடந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட விஞ்ஞானி பூஷண் கதாரியா அரசு நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக விஞ்ஞானியாக பணியாற்றிவருகிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கும், அவரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் வழக்கறிஞர் அமித் வசிஸ்ட் என்பவருக்கும் 10 ஆண்டுகளாகத் தீராக பகை இருந்துவந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் வசித்த கட்டடத்தில் உள்ள பொதுவான இடத்தை யார் பயன்படுத்துவது என்பது உட்பட சிறு சிறு பிரச்னைகளில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இருவரும் அருகருகில் உள்ள வீடுகளில்தான் வசித்துள்ளனர். அடிக்கடி தகராறு நடந்ததால் கதாரியா, வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெடிகுண்டு எடுத்து வந்த பேக்
வெடிகுண்டு எடுத்து வந்த பேக்

அவர்கள் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் வசித்த காலகட்டத்தில் வழக்கறிஞர் அமித், தனது பக்கத்து வீட்டில் வசித்த கதாரியா மீது ஏழு வழக்குகளை பதிவுசெய்துள்ளார். கதாரியாவும் வழக்கறிஞர் அமித் மீது ஐந்துக்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்த அன்று கதாரியா மீது வழக்கறிஞர் அமித் தாக்கல் செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக இருந்தது. தன்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால் தனது எதிர்காலம் பாழாகிவிடும் என்று கதாரியா பயந்தார்.

அது நடப்பதற்கு முன்பு நீதிமன்றத்தில் வைத்து அமித்தை வெடிகுண்டு வைத்து கொலை செய்துவிட வேண்டும் என்று கதாரியா திட்டம் தீட்டினார். எனவேதான் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் பொருள்களை ஆன்லைனில் வாங்கி வீட்டிலேயே வெடிகுண்டு தயாரித்திருக்கிறார். தயாரித்த வெடிகுண்டை டிபன் பாக்ஸில் வைத்து, அதை ஒரு பேக்கில் எடுத்துக்கொண்டு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்துக்கு கதாரியா வந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எந்தவிதச் சந்தேகமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் ஒவ்வொரு வாசல் வழியாகவும் உள்ளே வருவதும், வெளியில் செல்வதுமாக இருந்தார். விசாரணை அதிகாரிகளின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இவ்வாறு கதாரியா நடந்துகொண்டார். இறுதியில் அவர் வெடிகுண்டு இருந்த பேக்கை வழக்கறிஞர்கள் இருக்கும் பகுதியில் வைத்துவிட்டு வெளியில் சென்ற சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடித்தது. குற்றவாளி வெடிகுண்டை ஒரு மாதம் தயாரித்திருக்கிறார். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கச் செய்யும் வகையில் அதை வடிவமைத்திருந்தார்.

டெல்லி ரோஹினி கோர்ட்
டெல்லி ரோஹினி கோர்ட்

அந்த வெடிகுண்டை, வழக்கறிஞர் அமித் அமரும் இருக்கைக்கு பின்புறமுள்ள இருக்கையில் வைத்துவிட்டு கதாரியா நீதிமன்ற அறையைவிட்டு வெளியில் வந்துவிட்டார். அதோடு வெளியில் வந்த பிறகு தன்னிடமிருந்த ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். ஆனால் சர்க்கியூட்களை சரியாக இணைக்காத காரணத்தால் வெடிகுண்டு முழு சக்தியுடன் வெடிக்கவில்லை. இந்த வெடிகுண்டு சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க நீதிமன்றத்துக்கு வந்த ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதும், நீதிமன்றத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தன.

கதாரியா நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர் அணியுடன் அங்கி அணிந்துகொண்டு இரண்டு பேக்குடன் வந்தார். ஆனால், வெளியில் செல்லும்போது ஒரு பேக்குடன்தான் சென்றார். இந்த வெடிகுண்டு வெடிப்பில் வழக்கறிஞர் ஒருவர் லேசாகக் காயம் அடைந்தார்” என்றார். ரிமோட் கன்ட்ரோல் வசதியுடன் வெடிகுண்டைத் தனியொரு ஆளாக எப்படித் தயாரித்தார் என்பது போலீஸாருக்குச் சந்தேகமாக இருக்கிறது. அவருக்கு வெடிகுண்டு தயாரிக்க யாராவது உதவி செய்தார்களா என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் கதாரியா போலீஸ் காவலில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். சிகிச்சை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படும்!