Published:Updated:

மாணவர்களிடம் ‘ஜிபே’ பண மோசடி! - காமராசர் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

போனில் பேசி பணம் பெற்றது பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரா அல்லது வெளிநபரா என்பதையெல்லாம் எங்களால் கண்டுபிடிக்க இயலாது.

மாணவர்களிடம் ‘ஜிபே’ பண மோசடி! - காமராசர் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை

போனில் பேசி பணம் பெற்றது பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரா அல்லது வெளிநபரா என்பதையெல்லாம் எங்களால் கண்டுபிடிக்க இயலாது.

Published:Updated:
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

தொடர் சர்ச்சைகளில் சிக்கிவந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இப்போது மாணவர்களிடம் பணம் வசூல் செய்ததாக எழுந்திருக்கும் புகாரால் பரபரக்கிறது!

ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், 2004-ம் ஆண்டில் காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மூலம் முதுகலை கணிதம் முடித்திருக்கிறார். கடந்த ஜூலை மாதம் அவர் தனது பட்டச் சான்றிதழைக் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார். தாமதக் கட்டணமாக 5,800 ரூபாயும் செலுத்தியிருக்கிறார். இந்த நிலையில், துணைப் பதிவாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மாணவியின் அலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபரொருவர், “விண்ணப்பத்தில் மதிப்பெண் பட்டியல் இணைக்கப்படவில்லை. அதற்காக 9,287 ரூபாயை என் மனைவி அனுசுயா செல்வத்தின் ‘ஜிபே’ எண்ணுக்கு அனுப்பிவிடுங்கள்’ எனக் கூறியிருக்கிறார். மாணவியும் பணம் அனுப்பியிருக்கிறார். மேலும் 2,500 ரூபாய் அனுப்பச் சொல்லி அந்த நபர் கேட்கவே, உஷாரான மாணவி, இது குறித்து பல்கலைக்குப் புகார் செய்ய... மோசடி அம்பலமாகியிருக்கிறது.

மாணவர்களிடம் ‘ஜிபே’ பண மோசடி! - காமராசர் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை

இது குறித்து நம்மிடம் பேசிய மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பேராசிரியர் இரா.முரளி, “இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட ‘ஜிபே’ நம்பரைப் பயன்படுத்தியவர், பல்கலைக்கழகக் குடியிருப்பு முகவரியில் வசிப்பதாகத் தெரியவருகிறது. இந்த செல்வம் யார், இதுபோல் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது பல்கலை நிர்வாகத்தின் கடமை. இனி இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க மாணவர் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஆசிரியர் - அலுவலர்கள் அடங்கிய குறைதீர்க்கும் குழுவை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

இரா.முரளி
இரா.முரளி

மோசடி செய்ததாகக் கூறப்படும் ‘ஜிபே’ எண்ணைத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பு ஏற்கப்படவில்லை. இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் குமாரிடம் இந்த மோசடி குறித்துக் கேட்டபோது, ‘‘போனில் பேசி பணம் பெற்றது பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரா அல்லது வெளிநபரா என்பதையெல்லாம் எங்களால் கண்டுபிடிக்க இயலாது. எனவே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற தனிநபர்களிடம் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

குமார்
குமார்

இது குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் கேட்டோம். “அந்த ‘ஜிபே’ எண்ணுக்குரியவர் பல்கலைக்கழக ஊழியரா, இல்லையென்றால் ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவியின் செல்போன் நம்பர் அந்த நபருக்கு எப்படிக் கிடைத்தது என்று விசாரித்துவருகிறோம். குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம்” என்றார்.

உண்மையை வெளிக்கொணர்வதில் பல்கலை நிர்வாகத்திடம் ஆர்வமே இல்லை என்பதே கள நிலவரம். பாவம், மாணவர்கள்!