Published:Updated:

``26 யானைகள், 70 விலங்குகள் வெச்சிருந்தோம்; இப்ப நிலைமை மிகவும் மோசம்!” - சர்க்கஸ் முதலாளி ஆதங்கம்

சர்க்கஸ் நிகழ்ச்சி

``ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் யானைகளைப் பார்த்து குஷியானதையும், சிங்கம் உள்ளிட்ட ஆக்ரோஷமான விலங்குகளின் சப்தத்தைக் கேட்டு மிரண்டதையும் என்னால் மறக்க முடியாது."

``26 யானைகள், 70 விலங்குகள் வெச்சிருந்தோம்; இப்ப நிலைமை மிகவும் மோசம்!” - சர்க்கஸ் முதலாளி ஆதங்கம்

``ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் யானைகளைப் பார்த்து குஷியானதையும், சிங்கம் உள்ளிட்ட ஆக்ரோஷமான விலங்குகளின் சப்தத்தைக் கேட்டு மிரண்டதையும் என்னால் மறக்க முடியாது."

Published:Updated:
சர்க்கஸ் நிகழ்ச்சி
``சினிமா கலைஞர்களைவிட அதிகம் மதிக்கப்பட வேண்டியவர்கள் சர்க்கஸ் கலைஞர்கள்தாம். நாங்கள் பலமுறை டேக் எடுத்து, டூப் போட்டுத்தான் சண்டைக்காட்சிகளில் நடிக்கிறோம். உயிரைப் பணயம் வைத்து கண்முன் சாகசங்கள் செய்து அசத்தும் சர்க்கஸ் கலைஞர்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் எங்களைவிடவும் அதிகம் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!” – சர்க்கஸ் பிரியரான மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், அந்த நிகழ்ச்சிகளைக் காண வரும்போதெல்லாம் கூறும் வார்த்தைகள் இவை.
சர்க்கஸ் நிகழ்ச்சி
சர்க்கஸ் நிகழ்ச்சி

1990-களுக்கு முன்புவரை இந்தியாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் மட்டுமே வன விலங்குகளைக் காண முடியும். அதற்காகவே மக்கள் குடும்பம் சகிதமாக சர்க்கஸ் நிகழ்ச்சிகளைக் காணச் சென்றனர். அந்தக் காலகட்டத்தில் சர்க்கஸ் என்றாலே திருவிழாபோல மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அப்போதெல்லாம் இந்தியாவில் நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அரசியல், சினிமா பிரபலங்களே கிடையாது. இந்த நிலையில் காலப்போக்கில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு குறைந்தது. இதனால் அத்தொழிலை நம்பியிருந்த கலைஞர்களின் வாழ்வும் களையிழந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சர்க்கஸ் நிகழ்ச்சியில் அந்தரத்தில் சாகசம் செய்யும் கலைஞர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தற்போது, கொரோனா பாதிப்பால் சர்க்கஸ் துறை முழுமையாக முடங்கி, ஊசலாட்டத்தில் இருக்கிறது. லாக்டெளன் முடிந்ததும், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதும் மற்ற துறைகள் விரைவாக மீண்டுவிட வாய்ப்புள்ளது. ஆனால், `ஏற்கெனவே வரவேற்பு குறைந்துவரும் சர்க்கஸ் துறைக்கு கொரோனா பாதிப்பால் எதிர்காலம் என்பது இருக்குமா?’ என்ற அச்சம் அத்துறையினரைப் பெரிதும் கலங்க வைத்திருக்கிறது. சிறிய கூடாரத்துக்குள் சமூக இடைவெளியை உறுதி செய்து பார்வையாளர்களை அமர வைப்பது சாத்தியமா? அப்படிச் செய்தாலும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளைக் காண மக்கள் அச்சமின்றி வருவார்களா? சர்க்கஸ் தொழில் மீண்டும் சீராக ஓரிரு வருடங்களாவது ஆகும். அதுவரை என்ன செய்வது?

சர்க்கஸ் நிகழ்ச்சி
சர்க்கஸ் நிகழ்ச்சி

இதற்கெல்லாம் விடைதெரியாமல் இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான சர்க்கஸ் கலைஞர்கள் வேதனையில் உள்ளனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்து சாகசங்கள் செய்து மக்களை மகிழ்வித்த கலைஞர்கள், சர்க்கஸ் தொழிலின் எதிர்காலம் குறித்த அச்சத்தில் தவிக்கின்றனர். அவர்களின் நிலையையும் சர்க்கஸ் துறை தற்போது சந்திக்கும் சவால்களையும் விவரிக்கிறார், நூற்றாண்டுகள் பாரம்பர்யம் கொண்ட இந்தியாவின் முன்னணி சர்க்கஸ் நிறுவனமான `தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``1990-களுக்கு முன்புவரை சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு இருந்தது. அப்போதெல்லாம் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள், சினிமா சூப்பர் ஸ்டார்கள் உட்பட பல்துறை பிரபலங்களும் தாங்களாகவே சர்க்கஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்க வருவார்கள். பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கூடுவதைத் தடுக்க பிரபலங்களின் வருகை குறித்த செய்தி ரகசியம் காக்கப்படும். அதையும் மீறிக் கட்டுக்கடங்காமல் மக்கள் கூடுவார்கள்.

சர்க்கஸ் நிகழ்ச்சி
சர்க்கஸ் நிகழ்ச்சி

பொதுமக்களுடன் அமர்ந்து பிரபலங்களும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை ஆரம்பம் முதல் கடைசிவரை பார்ப்பார்கள். நிகழ்ச்சி முடித்ததும் சர்க்கஸ் கலைஞர்களுடன் போட்டோ எடுத்து உற்சாகப்படுத்துவார்கள். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோதும், ஜெயலலிதா நடிகையாக இருந்தபோதும் எங்கள் நிறுவன சர்க்கஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்க பலமுறை வந்துள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பலமுறை சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பார்க்க வந்துள்ளார். பிறகு, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவரின் குடும்பத்தினர் அனைவரும் டெல்லியில் நடைபெற்ற எங்கள் சர்க்கஸ் நிகழ்ச்சியைக் காண வந்தார்கள். அப்போது நான் பள்ளிச் சிறுவன். சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்கள் அருகில் உட்கார்ந்து என் தாத்தா மற்றும் தந்தை மட்டுமே உரையாடுவது வழக்கம். எனவே, இந்திரா காந்தி குடும்பத்தினர் சர்க்கஸ் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்ததை அவர்களின் அருகில் இருந்து பார்த்தேன். இந்திரா காந்தியுடன் அவரின் மகன் ராஜீவ் காந்தி, மருமகள் சோனியா காந்தி உட்பட பலரும் வந்திருந்தனர். ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் யானைகளைப் பார்த்து குஷியானதையும், சிங்கம் உள்ளிட்ட ஆக்ரோஷமான விலங்குகளின் சப்தத்தைக் கேட்டு மிரண்டதையும் என்னால் மறக்க முடியாது.

சர்க்கஸ் நிகழ்ச்சியில் இந்திரா காந்தி குடும்பத்தினர்
சர்க்கஸ் நிகழ்ச்சியில் இந்திரா காந்தி குடும்பத்தினர்

அமிதாப் பச்சன், ரஜினி, கமல் உட்பட இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களும் எங்கள் சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பார்க்க வந்துள்ளனர். 1990-களுக்குப் பிறகு, சர்க்கஸ் பார்ப்பதற்காக சினிமா பிரபலங்கள் வருவது குறைந்து, தற்போது பிரபலங்கள் யாருமே வருவதில்லை” என்கிறார் ஆதங்கத்துடன்.

இந்தியாவில் சர்க்கஸ் அறிமுகமான கதை
இந்தியாவில் சர்க்கஸ் அறிமுகமான கதை
#VikatanInfographics

விலங்குகள் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டதால், மக்களுக்கு சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் ஆர்வம் குறைந்தது. மக்கள் மிருகக்காட்சி சாலைகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டினர். மேலும், டிவி, கணினி, செல்போன், சோஷியல் மீடியா, சினிமா, ஷாப்பிங் மால் உள்ளிட்ட பொழுதுபோக்கு விஷயங்கள் அதிகமானதால் சர்க்கஸ் நிகழ்ச்சிகளைக் காண வரும் மக்களின் ஆர்வம் கணிசமாகக் குறைந்தது. இதனால், வருமானம் குறைந்து நிதி நெருக்கடியால் பல சர்க்கஸ் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதற்கு சர்க்கஸ் துறையில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த நிறுவனங்களும்கூட தப்பவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது.

அமெரிக்காவைச் சேர்ந்த `Ringling brothers’ நிறுவனம், நீண்டகாலமாக சர்க்கஸ் துறையில் உலக அளவில் முதல் இடத்தில் இருந்தது. 146 ஆண்டுகள் கோலோச்சிய அந்த நிறுவனம் 2017-ம் ஆண்டு மூடப்பட்டது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்க்கஸ் நிறுவனமாகத் திகழ்ந்தது, இந்தியாவைச் சேர்ந்த கமலா சர்க்கஸ் நிறுவனம். 1,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய அந்நிறுவனத்தில், பலநூறு விலங்குகள் வளர்க்கப்பட்டன. இந்த நிறுவனமும் நிதி நெருக்கடியால் மூடப்பட்டது. இதேபோல உலகளவிலும் இந்தியாவிலும் பிரபலமான பல சர்க்கஸ் நிறுவனங்கள் மூடப்பட்டன.
சர்க்கஸ் நிகழ்ச்சியில் சிங்கங்கள்
சர்க்கஸ் நிகழ்ச்சியில் சிங்கங்கள்

சர்க்கஸ் துறை செழிப்பாக இருந்த காலகட்டம் மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட வீழ்ச்சிக் காலம் குறித்துப் பேசுகிறார் சஞ்சீவ். ``1970 - 80 வரையிலான காலம், சர்க்கஸ் துறையின் பொற்காலம். அப்போது எங்கள் கம்பெனியில் 26 யானைகள் இருந்தன. மேலும், சிங்கம், புலி, சிறுத்தைகள் மட்டுமே 70-க்கும் அதிகமாக இருந்தன. தவிர, கொரில்லா, கரடி, நீர் யானை, வரிக்குதிரை உட்பட நூற்றுக்கணக்கான வன விலங்குகளை வைத்திருந்தோம்.

சர்க்கஸ் நிகழ்ச்சி
சர்க்கஸ் நிகழ்ச்சி

அந்தக் காலத்தில் வன விலங்கு சரணாலயங்களும் இல்லை. சர்க்கஸில் மட்டுமே மக்கள் விலங்குகளைப் பார்க்க முடியும். அதனால், வாரத்தின் எல்லா நாளுமே 7,000-க்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட எங்கள் சர்க்கஸ் அரங்கம் நிரம்பியிருக்கும். பலரும் இடம் கிடைக்காமல் திரும்பிபோன காலம் அது. பல மாநில தொழிலாளர்களும் ஒன்றாக சர்க்கஸில் வேலை செய்யும் காட்சியைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.

சர்க்கஸ் உருவான கதை : டேட்டா
சர்க்கஸ் உருவான கதை : டேட்டா

அப்போதெல்லாம் விலங்குகளை எளிதாகப் பணம் கொடுத்து வாங்க முடியும். அவற்றுக்கான பராமரிப்பு மற்றும் சர்க்கஸ் ஏற்பாடுகளுக்கான செலவுகளும் அதிகம்தான். அதேபோல வருமானமும் நிறைவாகக் கிடைத்தது. விலங்குகளுக்கும் முறையாக உணவுகள் கொடுத்து நல்ல முறையில்தான் கவனித்துக்கொண்டோம். ஆனால், விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி நாடு முழுக்க சர்க்கஸில் வன விலங்குகள் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு சவால்களைக் கடந்து பெரும் சிரமத்துடன்தான் எங்கள் நிறுவனத்தை நடத்திவருகிறோம்.

தற்போது இடப் பற்றாக்குறையாலும் மக்களின் வருகை குறைந்துள்ளதாலும் 1,500 பேர் அமரும் வகையில்தான் அரங்கத்தை அமைக்கிறோம். அதில்கூட சனி, ஞாயிறுகளில்தான் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் கூட்டம் வரும். மற்ற ஐந்து நாள்களும் கூட்டம் மிகக்குறைவாகவே இருக்கும். இதனால் அதிக ஊர்களில் சர்க்கஸ் நடத்துவதைக் குறைத்துக்கொண்டோம். 1980-களில் 600 ஊழியர்கள் இருந்த எங்கள் நிறுவனத்தில் தற்போது 200 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து எங்கள் குடும்பத் தொழில் மற்றும் எங்களை நம்பியுள்ள தொழிலாளர்களுக்காக நான் சர்க்கஸ் நிறுவனத்தை நடத்திவருகிறேன்.

சர்க்கஸ் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்
சர்க்கஸ் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்

`ஏழாம் அறிவு’ திரைப்படம் உட்பட பல திரைப்படங்கள் எங்கள் சர்க்கஸ் நிறுவனத்தில் எடுக்கப்பட்டுளளன. இப்போது சர்க்கஸ் சூழலை மையப்படுத்தி யாரும் சினிமா எடுப்பதில்லை. சினிமாவில் சர்க்கஸ் குறித்தக் காட்சிகள் இருந்தாலாவது மக்களுக்கு எங்கள் தொழில் குறித்து கவனம் வரும். தற்போது மிருகக்காட்சி சாலைகளில் விலங்குகளைக் கூண்டில் அடைத்துவைத்துக் காட்சிப்படுத்துவது மட்டும் நியாயமா? சர்க்கஸில் சில வன விலங்குகளை மட்டுமாவது காட்சிக்குப் பயன்படுத்த மட்டும் அனுமதித்தால் கொஞ்சம் கூடுதலான கூட்டம் வரும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

இந்த நிறுவனத்தின் சர்க்கஸ் நிகழ்ச்சி, மன்னார்குடியில் நடைபெற்றுவந்தது. கொரோனா பாதிப்பால் சர்க்கஸ் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இல்லாததால், சொந்த ஊருக்குச் செல்லாமல் ஏராளமான சர்க்கஸ் கலைஞர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். இதனால் தற்போது தொழில் நடைபெறாமல் இருந்தாலும், தினமும் 35,000 ரூபாய் செலவு செய்கிறார் சஞ்சீவ்.

சஞ்சீவ்
சஞ்சீவ்

``சென்னையில் இரண்டு மாதம் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தினோம். பிறகு மன்னார்குடிக்குச் சென்றோம். அங்கு கடந்த பிப்ரவரி இறுதியில் சர்க்கஸ் நடத்த ஆரம்பித்தோம். இரண்டு வாரங்கள்கூட ஆகாத நிலையில் கொரோனா பீதியில் மக்கள் கூட்டம் குறைந்தது. திடீரென லாக்டெளன் அறிவிக்கப்பட்டது.

சர்க்கஸ் நிகழ்ச்சி
சர்க்கஸ் நிகழ்ச்சி

மேற்கொண்டு எங்கும் செல்ல முடியாமல் அங்கேயே சர்க்கஸ் கலைஞர்கள் உட்பட ஊழியர்கள் அனைவரும் மாட்டிக்கொண்டனர். தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக சர்க்கஸ் நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. அனைத்து ஊழியர்களும் அவரவர் கூடாரங்களிலேயே தங்கியுள்ளனர். அவர்கள் மற்றும் விலங்குகளின் உணவுத் தேவைக்கும், இட வாடகைக்கும் மட்டுமே தினமும் 35,000 ரூபாய் செலவாகிறது.

லாக்டெளனுக்கு முன்பே 40 ஊழியர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். சமீபத்தில் எங்கள் சர்க்கஸ் அரங்குக்கு மாவட்ட ஆட்சியர் வந்து பார்வையிட்டார். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்வதாகக் கூறினார். அதன்படி மேலும் 40 பேர் சொந்த ஊருக்குச் செல்ல இருக்கின்றனர்.

இந்தியாவில் சர்க்கஸ் : டேட்டா
இந்தியாவில் சர்க்கஸ் : டேட்டா

மற்ற 120 பேரும் தொடர்ந்து ஊரடங்கு முடியும்வரை சர்க்கஸ் அரங்கத்திலேயே இருப்பதாகச் சொல்லிவிட்டனர். என் நிறுவன ஊழியர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. எனவே, வருமானம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உணவு, தங்குமிட ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கிறேன். ஒட்டகம், குதிரை, நாய், கிளி சேர்த்து 30 பிராணிகள் இருக்கின்றன. அவற்றையும் கவனித்துக்கொள்கிறோம்.

சர்க்கஸ் நிகழ்ச்சி
சர்க்கஸ் நிகழ்ச்சி

பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம். கொரோனா பாதிப்பு சரியாக ஓராண்டாவது ஆகும். அதன் பிறகும் கொரோனா அச்சம் இருக்கும். எனவே, அதிக கூட்டம் கூடும் என்பதால் சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு மக்கள் அச்சப்படுவார்கள். அதுவரை ஆண்டுக்கணக்கில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தாமல் இருந்தால் எங்கள் நிலைமை என்னவாகும்? மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உதவ வேண்டும். அப்போதுதான் இந்தத் தொழிலை அழியாமல் காப்பாற்ற முடியும்” என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் சஞ்சீவ்.

மக்களின் வருகை குறைந்துள்ளதால் 1,500 பேர் அமரும் வகையில்தான் அரங்கத்தை அமைக்கிறோம். அதில்கூட சனி, ஞாயிறுகளில்தான் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் கூட்டம் வரும். மற்ற ஐந்து நாள்களும் கூட்டம் மிகக்குறைவாகவே இருக்கும். இதனால் அதிக ஊர்களில் சர்க்கஸ் நடத்துவதைக் குறைத்துக்கொண்டோம்.
சஞ்சீவ்

இந்த சர்க்கஸ் நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றும் ஏழுமலை, சர்க்கஸ் தொழிலில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர். அவர் கூறுகையில், ``இங்கிருக்கும் சர்க்கஸ் கலைஞர்களுக்கு இந்தத் தொழிலை விட்டால் வேறு தொழில் எதுவும் தெரியாது. இப்ப சொந்த ஊருக்குப் போக ஏற்பாடுகள் செய்துகொடுக்கிறாங்க. என்னுடைய சொந்த ஊர் திருவண்ணாமலைக்குப் போனாலும் அங்கும் வேலைக்குப் போக முடியாம சிரமப்படணும். இங்க எங்களுக்கு மூணு வேளையும் சாப்பாடு கிடைக்குது. அதனால நான் உட்பட நிறைய பேர் ஊருக்குப் போகாம இங்கேயே இருக்கோம். தவிர மத்த செலவுகளுக்குக் காசு இல்லாம சிரமப்படுறோம்.

ஊர்ல என் அம்மா, மனைவி, ரெண்டு குழந்தைகளும் வீட்டில்தான் இருக்காங்க. அவங்களுக்குச் சிலர் உதவுறதால, சாப்பாட்டுக்குப் பிரச்னையில்லாம இருக்காங்க. ஆனா, இதே நிலை எத்தனை நாளைக்கு நீடிக்கும்? சர்க்கஸ் தொழில் நடக்கலைன்னா, அடுத்து என்ன பண்றதுனே தெரியலை. எங்களுக்குச் சேமிப்பும் எதுவும் கிடையாது. நிலைமை சரியாகாட்டி வேறு தொழிலுக்குப் போறதைத் தவிர எந்த வழியும் இல்லை” என்கிறார் கலக்கத்துடன்.

சர்க்கஸ் நிகழ்ச்சி
சர்க்கஸ் நிகழ்ச்சி

சர்க்கஸ், வெறும் காட்சிப் பொருளாக மாறிவிடக் கூடாது. `சர்க்கஸ் ஒருகாலத்தில் சிறந்த பொழுதுபோக்குத் தளமாக இருந்தது’ என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் நிலையும் ஏற்படக் கூடாது. மக்களை மகிழ்வித்த சர்க்கஸ் கலைஞர்கள் வேலையிழந்து மாற்றுத் தொழிலுக்குச் செல்லாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்.

நீங்கள் பார்த்ததில் மறக்க முடியாத சர்க்கஸ் நிகழ்ச்சி அனுபவங்களை கமென்டில் பதிவு செய்யலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism