Published:Updated:

பசுமைத் திருமணம்... நாளைய தலைமுறைக்கு ஒரு பரிசு!

ரிஷிதா சர்மா

பிரீமியம் ஸ்டோரி

`` `இதேபோல எங்க வீட்டுத் திருணத்தையும் நடத்தி தர்றீங்களா'ன்னு மக்கள் கேட்கிறப்ப உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என அனுபவித்துப்பேசுகிறார் பசுமைத் திருமணங்களை நடத்திக்கொடுக்கும் `கிரீன் உத்சவ்' நிறுவனத்தலைவரான பெங்களூரூவைச் சேர்ந்த ரிஷிதா சர்மா.

``என் பூர்வீகம் மத்தியப்பிரதேசத்திலுள்ள போபால். பி.இ படிப்பு, பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை, திருமணம், குழந்தைக்காக வேலையை விட்டது என்று மற்ற பெண்களைப் போலவே நானும் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

வெளிநாட்டில் வசித்தபோது `சத்யமேவ ஜயதே' தொலைக்காட்சித் தொடரில், குப்பை களைத் தரம்பிரித்து முறைப்படி மக்கச் செய்வது குறித்து அறிந்துகொண்டேன். பெங்களூரில் உள்ள என் வீட்டில் அதைச் செயல்படுத்தினேன். அடுத்தகட்டமாக, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்போர்நலச் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி, குடியிருப்பில் குப்பைகளைச் சேகரித்து, தரம் பிரித்து முறைப்படி மக்கச் செய்தோம்.

சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டபோது, பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுவழி எவர்சில்வர் பாத்திரங்கள்தாம் என்பதை அறிந்துகொண்டேன். என் தோழி லக்ஷ்மியுடன் இணைந்து `Rent a Cutlery' என்ற நிறுவனத்தை உருவாக்கி, விழாக்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்களை வாடகைக்கு விட ஆரம்பித்தோம். மறுபக்கம், பிளாஸ்டிக் கப் மற்றும் டம்ளர்களில் உள்ள `பிளாஸ்டிக் லைனிங் மற்றும் வேக்ஸ் கோட்டிங்' நம் உடலுக்கு எப்படியெல்லாம் தீங்கு ஏற்படுத்தும் என்பது பற்றியும், எவர்சில்வர் பாத்திரங்களின் நன்மை குறித்தும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

பசுமைத் திருமணம்
பசுமைத் திருமணம்

அடுத்த நகர்வாக, மேடை அலங்காரத்திலிருந்து டைனிங் ஹால் பயன்பாடு வரை பிளாஸ்டிக், பேப்பர் பொருள்களைப் பயன் படுத்தாமல், முற்றிலும் இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி `ஸீரோ வேஸ்ட்' நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கும் `கிரீன் உத்சவ்' அமைப்பை உருவாக்கினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பண்டிகைகள், திருமணங்களை இயற்கைக்கு ஃபிரெண்ட்லியான வகையில் நடத்திக் கொடுக்கச் சொல்லி பலரும் எங்களை நாடினர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட விழாக்களை நடத்தியிருக்கிறோம். சமீபத்தில் 3,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட பசுமைத் திருமணத்தை நடத்தியது, சிறப்பான அனுபவம். இது நல்ல வரவேற்பை பெற்றது.

சிற்றுண்டி மற்றும் உணவை வாழையிலை, தாமரையிலைகளில் பரிமாறுகிறோம். பிளாஸ்டிக் தட்டுகளுக்குப் பதிலாக பாக்கு மட்டை, எவர்சில்வர், பீங்கான் தட்டுகளையே உபயோகிக்கிறோம்.
ரிஷிதா சர்மா
ரிஷிதா சர்மா

பசுமைத் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளில் தெர்மாகோல், பலூன்களைப் பயன்படுத்தாமல் வகை வகையான இயற்கை மலர்களைக் கொண்டு மண்டபம் மற்றும் மேடையை அலங்கரிக்கிறோம். சிற்றுண்டி மற்றும் உணவை வாழையிலை, தாமரையிலைகளில் பரிமாறுகிறோம். பிளாஸ்டிக் தட்டுகளுக்குப் பதிலாக பாக்கு மட்டை, எவர்சில்வர், பீங்கான் தட்டுகளையே உபயோகிக்கிறோம். டீ, காபி, குளிர்பானங்களை எவர்சில்வர் மற்றும் கண்ணாடி டம்ளர்களில் வழங்குவது, கை கழுவும் இடத்தில் டிஷ்யூ பேப்பருக்கு மாற்றாக, சிறிய அளவிலான கைக்குட்டையை வைப்பது... இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறோம்.

ஒரு பிசினஸ் என்பதைத் தாண்டி, வருங்கால சந்ததியினருக்கு நாங்கள் கொடுக்கின்ற சிறிய பரிசாகவே எங்கள் செயல்பாடுகளை மேற்கொள்கிறோம். எங்கள் முயற்சி காரணமாக இயற்கை அன்னை நிம்மதியடைந்தால், அதுவே போதும்'' என்கிறார் ரிஷிதா சர்மா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு