அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அட்டை ஆலையால் பாழான நிலத்தடிநீர்... கொதிக்கும் கோபி வட்டார கிராமங்கள்!

அட்டை ஆலை
பிரீமியம் ஸ்டோரி
News
அட்டை ஆலை

இந்தப் பிரச்னை இன்று நேற்று வந்ததல்ல... எட்டு ஆண்டுகளுக்கு முன்பே கூகலூர் பேரூராட்சித் தலைவர் நஞ்சப்பன் தலைமையில் ஆலைக்கு எதிராக ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கூகலூர் தண்ணீர்பந்தல் புதூரில், தனியாருக்குச் சொந்தமான அட்டை ஆலை ஒன்று இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஆலைக்குப் பின்புறம் தேக்கிவைக்கப்பட்டு, இரவு நேரங்களில் சுத்திகரிக்கப்படாமல் விவசாய நிலங்களின் வழியாகவும், கீழ்பவானி கிளை வாய்க்காலின் வழியாகவும் திறந்துவிடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தண்ணீர்பந்தல் புதூர், கூகலூர், பொம்மநாயக்கன் பாளையம் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின்பேரில் ஆலையின் மின் இணைப்பு கடந்த இரண்டு மாதங்களாகத் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இந்த அட்டை ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்படவிருப்பதாகத் தகவல் பரவியதை அடுத்து, கிராம மக்கள் கடந்த 1-ம் தேதி முதல் ஆலைக்கு முன்பு ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அட்டை ஆலையால் பாழான நிலத்தடிநீர்... கொதிக்கும் கோபி வட்டார கிராமங்கள்!
அட்டை ஆலையால் பாழான நிலத்தடிநீர்... கொதிக்கும் கோபி வட்டார கிராமங்கள்!

அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி அன்புராஜ் பேசும்போது, “1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆலை தினமும் 30 டன் அட்டைப்பொருள்களை உற்பத்தி செய்கிறது. ஒரு டன் அட்டையைத் தயாரிக்க 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், தினமும் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்த ஆலையில் பயன்படுத்தப்பட்டு கழிவுநீராக வெளியேற்றப்படுகிறது. அந்தக் கழிவுநீரை சேலம் அரசு நீர்மாதிரி பரிசோதனை நிலையத்திலும், கோபி மைராடா நீர்மாதிரி பரிசோதனை நிலையத்திலும் பரிசோதனை செய்தோம். வழக்கமாக 1.5% குளோரைடு இருக்கவேண்டிய நிலத்தடி நீரில் 4.2% குளோரைடு கலந்திருக்கிறது. இந்த அளவுக்கு நீர் மாசுபட இந்த அட்டை ஆலையே காரணம். மீண்டும் இந்த ஆலையை இயக்குவது எங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்” என்றார் கோபத்தோடு.

இது குறித்து கூகலூர் பாசன சபையின் நிர்வாகி சுபி.தளபதி பேசும்போது, “இந்தப் பிரச்னை இன்று நேற்று வந்ததல்ல... எட்டு ஆண்டுகளுக்கு முன்பே கூகலூர் பேரூராட்சித் தலைவர் நஞ்சப்பன் தலைமையில் ஆலைக்கு எதிராக ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இரு தரப்பையும் அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ‘இனி கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துகிறோம்’ என்று அளித்த உத்தரவாதத்தின்பேரில் மீண்டும் ஆலை இயக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், தண்ணீர்பந்தல் புதூர் கிராமத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் இந்த ஆலையிலிருந்து, பெரும்பாலும் விடியற்காலை நேரங்களில் கழிவுநீரைச் சுத்திகரிக்காமல் தண்ணீரைத் திறந்துவிட்டனர். சுத்திகரிப்புக்கென நிறுவப்பட்ட ஆர்.ஓ பிளான்ட்டையும் முறையாகப் பயன்படுத்துவதில்லை. வாய்க்காலிலும், விவசாய நிலங்களிலும் கழிவுநீரைத் திறந்துவிடுவதால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியருக்குப் பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் மீண்டும் ஆலையை இயக்கும் வகையில் மின் இணைப்பு அளிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன” என்றார்.

அட்டை ஆலையால் பாழான நிலத்தடிநீர்... கொதிக்கும் கோபி வட்டார கிராமங்கள்!

ஆலை நிர்வாகத் தரப்பில் அதன் நிர்வாக இயக்குநர் மதனிடம் பேசினோம், “2000-ம் ஆண்டு முதல் ஆர்.ஓ முறையாக இயங்கிவருகிறது. பூஜ்யம் சதவிகிதம்... அதாவது கழிவுநீரையே வெளியேற்றக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால், மழைக்காலங்களில் கலங்கலான மழைநீர் வெளியேறும்போது, கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இந்த ஆலையில் ரோசின், ஸ்டார்ச் மாவு போன்ற இயற்கைப் பொருள்களைத் தவிர எந்த ரசாயனமும் பயன்படுத்துவதில்லை. சொல்லப்போனால், இங்குள்ள போர்வெல் தண்ணீரை நாங்களே குடிக்கப் பயன்படுத்தும் அளவுக்குச் சுத்தமாகத்தான் இருக்கிறது. இருப்பினும், தண்ணீர் மாசுபட்டிருக்கிறதா என்பதை அறிய மாசு கட்டுப்பாடு வாரியம் நீர்மாதிரி சோதனை நடத்தவிருக்கிறது. தற்போது இந்த ஆலையை லீஸுக்கு எடுத்து நடத்துபவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அமைதிப் பேச்சுவார்த்தையில் அவர் பேசவந்த விஷயத்தை, கிராம மக்கள் தவறாகப் புரிந்துகொண்டதால் பிரச்னையாகிவிட்டது” என்றார்.

சுபி.தளபதி
சுபி.தளபதி

இது தொடர்பாக மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் பேசும்போது, “மக்கள் அளித்த புகாரின்பேரில் ஆலையின் மின் இணைப்பைத் துண்டிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு நாங்கள்தான் பரிந்துரை செய்தோம். கடந்த 7-ம் தேதி கோபி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆசியா முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் அந்தப் பகுதியிலுள்ள நீர் மாதிரியைச் சேகரித்து பரிசோதனை செய்வது என்றும், பரிசோதனை முடிவு தெரியும் வரை ஆலையை இயக்கக் கூடாது எனவும் ஆலை நிர்வாகத்துக்கு அறிவித்திருக்கிறோம்” என்றார்.

ஆசியா
ஆசியா

கோபி வட்டாட்சியர் ஆசியா நம்மிடம், “அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கிராம மக்கள் காகித ஆலையை நிரந்தரமாக மூடவும், அங்கிருக்கும் திடக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர். காகித ஆலை நிர்வாகத் தரப்பில், திடக்கழிவுகளை தனியார் சிமென்ட் நிறுவனத்துக்கு அனுப்பவிருப்பதாகவும், இதர திடக்கழிவுகளை விரைவில் அகற்றி விடுவதாகவும் உறுதி யளித்திருக்கிறார்கள்” என்றார்.

நிலவரங்களை கவனிக்கும்போது, ஆலையை மீண்டும் இயக்க, மின் இணைப்பு கொடுக்க முயற்சிகள் நடைபெறுவதாகவே தெரிகிறது. எனினும், இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது மாவட்ட நிர்வாகம் என்று அறிந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

கிருஷ்ணனுண்ணி
கிருஷ்ணனுண்ணி

“அட்டை ஆலை விவகாரம் குறித்து பொதுமக்களுடனும், ஆலை நிர்வாகத்தினருடனும் அதிகாரிகள் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகு அங்கு விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மக்கள் குரலுக்கு செவி சாய்ப்பார்களா அதிகாரிகள்?