Published:Updated:

நீலகிரி: கறுப்பு கோட், கழுத்துப்பட்டை..! - கொடநாடு வழக்கில் களமிறங்கிய தி.மு.க எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ-வும் வழக்கறிஞருமான திராவிட மணி
எம்.எல்.ஏ-வும் வழக்கறிஞருமான திராவிட மணி

`நான் எம்.எல்.ஏ ஆனதுக்கு அப்புறம் முதல்முறையா இப்போதான் யூனிஃபார்முடன் ஊட்டி கோர்ட்டுக்கு வந்திருக்கேன். கொடநாடு வழக்கு நிலவரத்தை தெரிஞ்சிக்கவும் சரியான நீதி கிடைக்கணும்னு வந்தேன்.’

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கொடநாடு வழக்கு
கொடநாடு வழக்கு

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய், திருப்பங்களைக் கண்டுவரும் இந்த வழக்கில், தற்போது சாட்சி விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும் ஆஜராகினர். மருத்துவர் வாசன், அ.தி.மு.க பிரமுகர் அனுபவம் ரவி, தொழில்நுட்பப் பிரிவு ஆய்வாளர் ராஜூ மற்றும் ஆய்வாளர் சதாம் உசேன் ஆகியோர் சாட்சியளித்தனர்.

கொடநாடு வழக்கு
கொடநாடு வழக்கு

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பில் தி.மு.க வழக்கறிஞர் ஆனந்த் ஆஜராகிவரும் நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி [தி.மு.க] எம்.எல்.ஏ-வும், வழக்கறிஞருமான திராவிட மணி, கறுப்பு கோட், கழுத்துப்பட்டையுடன் சீருடையில் ஊட்டி கோர்ட்டுக்குள் திடீரென நுழைந்தார். உள்ளே வந்த அவர், வழக்கின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் சாட்சி விசாரணைகளையும் கவனித்தார். இந்த நிகழ்வு கொடநாடு வழக்கில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திராவிட மணி நம்மிடம் பேசுகையில்,``நான் கூடலூர் தொகுதியில தொடர்ந்து இரண்டாவது முறையா தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருக்கேன். கூடலூர் கோர்ட்டுல ஒரு சில கேஸ்ல ஆஜராகி வர்றேன். ஆனா எம்.எல்.ஏ ஆனதுக்கு அப்புறம் முதல்முறையா இப்போதான் யூனிஃபார்முடன் வந்துருக்கேன்.

 திராவிட மணி
திராவிட மணி

கொடநாடு வழக்கு நிலவரத்தைத் தெரிஞ்சிக்கவும், அதேசமயம் சரியான வழக்கு விசாரணை நடக்கணும், சரியான நீதி கிடைக்கணும்கிறதுக்காகவும் நடவடிக்கைகளை கவனிச்சேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த், ``கொடநாடு வழக்கில் போலீஸார் உண்மைக்கு மாறானவற்றை நீதிமன்றதத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். நேரடி சாட்சியான கிருஷ்ண தாபாவுக்கு சிகிச்சை அளித்தற்கான முறையான பதிவு இல்லாமல், சிகிச்சை விவரங்கள் அடங்கிய துண்டுச்சீட்டை போலீஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். மேலும், அ.தி.மு.க பிரமுகர் அனுபவம் ரவி என்பவர், கனகராஜ் இறந்த பின்னர், கனகராஜ் பேசியதாகக் கூறுகிறார். இவை அனைத்தும் போலீஸார் ஜோடித்த சாட்சிகள்" எனக் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

திராவிட மணி
திராவிட மணி

சாட்சிகள் விசாரணைக்கு பிறகு, வழக்கை வரும் 16-ம் தேதிக்கு நீதிபதி வடமலை ஒத்திவைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு