Published:Updated:

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!

மாதாந்திரச் சீட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
மாதாந்திரச் சீட்டு

சிட் ஃபண்டு என்பது மத்திய சீட்டு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும். மேலும், ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ), வங்கி சாரா நிதி அமைப்பாக இந்த ஃபண்டை வகைப்படுத்தியுள்ளது.

தினமும் வேலை பார்த்தால் மட்டுமே வாழ்க்கை என்றிருக்கும் ஏழைகள் முதல் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து வாழும் நடுத்தர குடும்பத்தினர் வரை பலருடைய நம்பிக்கை `சிட் ஃபண்டு' எனப்படும் சீட்டுப் போடும் திட்டம். ஏற்கெனவே வரிசையில் நிற்கும் செலவுகளுக்கும் எதிர்பாரா செலவுகளுக்கும் பலருக்கும் ஆபத்பாந்தவனாக கைகொடுப்பது சீட்டுப் பணம்தான்.

இந்தியாவின் மிகவும் பாரம்பர்யமானதும் பிரபலமானதுமான சிறு சேமிப்புத் திட்டம் இது. சீட்டு கட்டி ஏமாந்தவர்களின் கதறலை யும் கண்ணீரையும் அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம். கவனமாகத் தேர்ந்தெடுத்தால் நிச்சயம் கைகொடுக்கும் சீட்டுத் திட்டம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான தகவல்கள் உள்ளன. சீட்டுத்திட்டம் எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் சீட்டு போடலாம், சீட்டுத் திட்டத்தில் சேரும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள், சிட் ஃபண்டு நிறுவனம் தொடங்க விரும்பு வோருக்கான ஆலோசனைகள் என அனைத் தையும் பகிர்கிறார் நிதி ஆலோசகர் சி.பாரதிதாசன்.

சி.பாரதிதாசன்
சி.பாரதிதாசன்

சிட் ஃபண்டு வரலாறு!

பண்டமாற்று காலத்திலிருந்து சிட் ஃபண்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. பழங்காலத்தில் தென்தமிழ்நாட்டில் விவசாயிகள் இந்த ஃபண்டை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

சிட் ஃபண்டு என்பது ROSCA (Rotating Savings and Credit Association) என உலகம் முழுக்க அழைக்கப்படுகிறது. அதாவது, சுழலும் சேமிப்பு மற்றும் கடன் சங்கம் எனப்படுகிறது. சிட் ஃபண்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றில் சீட்டு போடுபவர்கள் இடையிலான பரஸ்பர நம்பிக்கை யின் அடிப்படையில் பல காலமாக இது நடந்து வருகிறது.

சிட் ஃபண்டு என்பது மத்திய சீட்டு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும். மேலும், ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ), வங்கி சாரா நிதி அமைப்பாக இந்த ஃபண்டை வகைப்படுத்தியுள்ளது.

உலக அளவில் சுமார் 80 நாடுகளில் இந்த சிட் ஃபண்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சிட் ஃபண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன (சட்டப்படி பதிவு செய்யாமல் குடிசைத் தொழில்போல பல லட்சக்கணக்கில் சிட் ஃபண்டுகள் சின்னதும் பெரிதுமாக நடத்தப்படுவது தனிக்கதை). ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 கோடி ரூபாய் பணம் சிட் ஃபண்டில் சுழல்கிறது.

`ஐ.எஃப்.எம்.ஆர்' (Institute for Financial Management and Research) நிதி சார் ஆராய்ச்சி மையம், நாடு முழுவதும் இதுகுறித்து ஆய்வுசெய்து பாமர மக்களுக்குக்கூட முதலீடு செய்ய ஏற்ற திட்டம் என ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
greenaperture

எந்தத் தேவைக்கு சிட் ஃபண்டில் சேர்கிறார்கள்?

பொதுவாக, நம் மக்கள் இதைச் ‘சீட்டு’ என்று குறிப்பிடுகிறார்கள். ‘சீட்டு சேர்ந்திருக்கிறேன். சீட்டுப் பணம் எடுத்து செலவுகளைச் சமாளிக்க வேண்டும்' எனப் பொதுமக்கள் சர்வசாதாரணமாகப் பேசிக்கொள்வதை நாம் கேட்கலாம்.

தொழில் தொடங்க பணம் வேண்டும் அல்லது வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அதற்குத் தேவைப்படும் பணத்துக்காக சிட் ஃபண்டில் சேர்பவர்கள்தான் அதிகம்.

மேலும் பள்ளி, கல்லூரிக் கட்டணம், தங்கம் வாங்குதல், சுற்றுலா செல்லுதல், வீட்டு மனை வாங்குதல், வீட்டுக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்கவும் சிட் ஃபண்டில் சேர்கிறார்கள்.

நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள், முடி திருத்துபவர்கள், மெக்கானிக்கு கள், பெட்டிக்கடை நடத்துபவர்கள், சிறு கடைக்காரர்கள், பெரிய கடைக்காரர்கள், சிறு வணிகர்கள் மத்தியில் சீட்டு மிகப் பிரபலமாக இருக்கிறது.

சிட் ஃபண்டு Vs ஆர்.டி

சிட் ஃபண்டு திட்டத்தில் சேர் பவர்களுக்கு அது எத்தனை மாதத் திட்டமோ, அத்தனை மாதங் களுக்குக் கட்டாய சேமிப்புத் திட்டமாக மாறிவிடுகிறது. அதாவது, அவர்கள் ஆர்.டி திட்டத்தில் பணம் போடுவதுபோல் இது இருக்கிறது. ஆர்.டி-யில் மாதம் 3,000 ரூபாய் கட்ட வேண்டும் என்றால் மாதந் தோறும் அதே தொகையைக் கட்டி வர வேண்டும். ஆனால், சிட் ஃபண்டில் இந்தத் தொகை பெரும் பாலும் மாதந்தோறும் மாறுபடும் என்பதுதான் இதில் வித்தியாசம்.

பொருளாதார நிலைக்கேற்ப மாதம் ரூ.1,000 முதல் சீட்டுக் கட்டி வரலாம். குறைந்தபட்ச தொகை என்பது நிறுவனத்தைப் பொறுத்து மாறுகிறது. நம் நாட்டில் பொதுவாக, ரூ.25,000 முதல் ரூ.3 கோடி வரையிலான சிட் ஃபண்டு திட்டங்கள் இருக்கின்றன. பொது வாக, ஓராண்டு தொடங்கி ஐந்தாண்டுக்காலத் திட்டங்கள் இந்தியாவில் உள்ளன. சிட் ஃபண்டு திட்டக் காலம் சராசரியாக 20 முதல் 60 மாதங்களாக இருக் கின்றன.

சீட்டு நிதி நிறுவனமும், சீட்டுத் திட்டமும் எப்படிச் செயல்படுகின்றன?

சிட் ஃபண்டு திட்டத்தை நிர்வகிக்கும் நிறுவனம் சீட்டு நிதி நிறுவனம் என்று குறிப்பிடப் படுகிறது. இந்தத் திட்டத்தில் சேர்பவர் உறுப்பினர் என அழைக்கப்படுகிறார். ஒரு சிட் ஃபண்டு நிறுவனம், பல சிட் ஃபண்டு திட்டங்களைக் கொண்டி ருக்கும். ஒரு சிட் ஃபண்டு திட்டம் எத்தனை மாதங்கள் நடக்கிறதோ, அத்தனை உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

உதாரணத்துக்கு, 12 உறுப் பினர்களுடன் ஒரு சீட்டு தொடங்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம், ஒவ்வோர் உறுப் பினரின் மாதப் பங்களிப்பு 10,000 ரூபாயுடன் 12 மாதங்கள் செயல் படுகிறது. சீட்டின் மதிப்பு ரூ. 1,20,000. வேறு எங்குமே இவ்வளவு பெரிய தொகை எளிதில் கிடைக்காது. பொதுவாக, சிட் ஃபண்டு நிறுவனத்தின் செயல்பாடு, ஆர்வமுள்ளவர்களைக் கண்டுபிடித்து, உறுப்பினர்களாக்கி சீட்டுத் திட்டத்தில் சேர்ப்பது, சீட்டு ஏலங்களை நடத்துவது, உறுப்பினர் களிடமிருந்து அவர்களின் பங்களிப்பு தொகைகளைச் சேகரிப்பது, சீட்டு எடுத்த உறுப்பினருக்கு பணத்தை விநியோகிப்பது மற்றும் மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் கணக்குப் புத்தகங்களைப் பராமரிப்பது ஆகியவை அடங்கும். சீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த உறுப்பினரின் பங்களிப்பில் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கட்டணமாக நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன,

எந்த மாதம் பணம் எடுக்க வேண்டும், எவ்வளவு தள்ளி எடுக்க வேண்டும் என்பதை முடிவுசெய்வது அனைத்தும் வாடிக்கையாளர்கள்தான். இதுவே வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனங்கள் என்றால், வங்கி யாளர்கள் சொல்வதுதான் சட்டம்.

எப்படியிருந்தாலும், சீட்டின் ஒவ்வோர் உறுப்பினரும் ஒருமுறை சீட்டு ஏலத்தைப் பெறுவார்கள். கடைசி சீட்டு எடுப்பவருக்கு அதிக டிவிடெண்டு மற்றும் அதிக தொகை கிடைக்கும். ஆரம்ப காலத்தில் ஏலம் எடுக்காததால் பிற நபர்கள் தள்ளுபடியை சீட்டின் நன்மையாக அனுபவிக்கிறார்கள். இங்கே தள்ளுபடி என்பது வருமானமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தள்ளுபடி சராசரியாக 15%. ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ஆர்.டி. வட்டி 5.5-7% ஆக இருக்கும் தற்போதைய நிலையில் சிட் ஃபண்டு லாபகரமான முதலீடாகப் பார்க்கப்படுகிறது. சீட்டு நிறுவனம், ஃபண்டை நடத்த நிலையான ஒரு கட்டணத்தை எடுத்துக்கொள்கிறது. இது 5% அளவுக்கு இருக்கும்.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
showcake

மாதம் 10,000 ரூபாய், 12 மாதங்கள், மொத்த தொகை ரூ.1,20,000 என்கிற சிட் ஃபண்டு திட்டத்தை எடுத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தில் 12 பேர் உறுப்பினர்களாகச் சேர வேண்டும். சட்டப்படி, சீட்டு நடத்தும் நிறுவனமும் ஓர் உறுப்பினராகச் சேர்ந்து ஒரு சீட்டு போட வேண்டும். முதல் மாதம் எந்தக் கழிவும் இல்லாமல் சிட் ஃபண்டு நிறுவனத்துக்கு சீட்டுப் பணம் சென்றுவிடும். அந்த மாதம் உறுப்பினர்கள் அனைவரும் எந்தக் கழிவும் இல்லாமல் முழுத் தொகையான ரூ.10,000 கட்ட வேண்டும். தொடர்ந்து 12 மாதங்களுக்கும் இப்படி பணம் கட்டிவர வேண்டும். ஆனால், இரண்டாவது மாதத்திலிருந்து கட்டவேண்டிய தொகையானது குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாவது மாதம் 1,20,000 ரூபாய் சீட்டை, `நான் 25% குறைத்து அதாவது 30,000 ரூபாய் குறைத்து 90,000 ரூபாய்க்கு எடுத்துக்கொள்கிறேன்' என்று ஒருவர் சொல்ல, `நான் 30% அதாவது 36,000 ரூபாய் குறைத்து 84,000 ரூபாய்க்கு எடுத்துக்கொள்கிறேன்' என்று இன்னொருவர் சொல்லக்கூடும். யார் குறைவான தொகைக்கு ஏலம் எடுக்கிறார்களோ அவர்களுக்கு முடிக்கப்படும். சிட் ஃபண்டில் அதிகபட்சம் 40% வரை தள்ளி எடுக்க, பதிவு செய்யப்பட்ட சீட்டுகளில் சட்டப்படி அனுமதிக்கப் படுகிறது. பதிவு செய்யாத சீட்டுகளில் மிக அவசரத் தேவை என்றால் 50 சதவிகிதம்வரைகூட தள்ளி எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

சிட் ஃபண்டு திட்டம் பாதுகாப்பானதா?

சிட் ஃபண்டில் பங்குச் சந்தையில் ஏற்படுவது போன்ற ஏற்ற இறக்க ரிஸ்க் கிடையாது. சிட் ஃபண்டு திட்டத்தில் மோசடி நடந்தால் தவிர, கட்டும் பணத்தைவிட (தள்ளுபடி கிடைப்பதால்) குறைவாக கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் பலரும் சிட் ஃபண்டை தேர்வு செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சிட் ஃபண்டு நிறுவனங்களை தமிழ்நாடு பதிவுத்துறை (Registration Department) நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு சிட் ஃபண்டு திட்டத்தையும் தனித்தனியே சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனால், இது பாதுகாப்பானதாக இருக்கிறது. மேலும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீட்டுத்திட்டம் நடத்தப்படுகிறது என்றால் அந்த ரூ.5 லட்ச ரூபாய் மதிப்புக்கு ஃபிக்ஸட் டெபாசிட் சான்றிதழ் அல்லது சொத்து ஜாமீனை சிட் ஃபண்டு நடத்தும் நிறுவனம் உள்ளூர் சார் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும்.

இந்த ஃபண்டு நிறுவனங்களைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப் படுத்தும் நெறியாளர், `ரெஜிஸ்ட்ரார் ஆஃப் சிட்ஸ்' (Registrar of Chits) என அழைக்கப்படுவார்.

சிட் ஃபண்டு சட்டத்தின்படி, மோசடி செய்வோருக்கு சிறைத்தண்டனை மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும். மேலும் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திரும்பச் செலுத்தவும், இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சீட்டுத் திட்டம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை எப்படி அறிவது?

பதிவு செய்யப்பட்ட சீட்டு பரிவர்த்தனைகளை தமிழக அரசின் பதிவுத்துறை இணைய தளமான www.tnreginet.gov.in-ல் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையத்தளத்தில்

Select More -> Search -> Chit Funds

Select Zone -> District Register Office -> Company-க்குச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்தால், பதிவு செய்யப்பட்ட விவரம் வரும். குறிப்பிட்ட சீட்டுத் திட்டத்தின் ஆரம்ப தேதி, முடிவு தேதி, எத்தனை தவணை, இன்றைய தேதியில் எத்தனை தவணை முடிந்திருக்கிறது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

2018 டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு அனைத்து சீட்டுத்திட்ட குரூப்களும் தமிழ் நாட்டில் ஆன் லைன் மூலம்தான் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
Nisha Dutta

சிட் ஃபண்டு ஏன்?

சிட் ஃபண்டில் வெளிப்படைத் தன்மை உள்ளது. எத்தனை ரூபாய் தள்ளி, சீட்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயம் அதில் சேர்ந் திருக்கும் அனைவருக்கும் தெரியும். மேலும், ஒரு சீட்டை எப்போது எடுக்க வேண்டும் என்பதை அதில் சேர்ந்து பணம் கட்டி வரும் உறுப்பினர்தான் முடிவு செய்ய வேண்டும். சிட் ஃபண்டை ஒரு முதலீடாக நினைத்து பணத்தைச் சேமித்து வந்தால், வங்கி வட்டியைவிட அதிக வருமானம் பெறலாம்.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (கே.ஒய்.சி) படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வருமான வரித் துறை வழங்கி இருக்கும் பான் கார்டு கட்டாயம் தேவை. மார்பளவு புகைப்படம் தேவைப் படும். மேலும் முகவரிக்கான ஆதாரமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற வற்றில் ஏதாவது ஒன்றின் நகலைக் கொடுக்க வேண்டும்.

முறையற்ற சிட் ஃபண்டு நிறுவனங்கள்... உஷார்!

இந்தியாவில் 25,000 பதிவு செய்யப்பட்ட சிட் ஃபண்டு நிறு வனங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே 2000-க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட சீட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சிட் ஃபண்டு களை சுமார் ஒரு கோடி பேர் பயன் படுத்தி வருகிறார்கள். பதிவு செய்யப்படாத சிட் ஃபண்டுகளை சுமார் 15 கோடி பேர் பயன்படுத்துகி றார்கள். சிட் ஃபண்டுகளைப் பயன்படுத்துபவர்கள் சுமார் 60% பேர் கிராம மக்கள் மற்றும் அதிக படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் என்று எடுத்துக் கொண்டால் கடந்த பத்து ஆண்டு களில் ஓரிரு நிறுவனங்கள்தான் வியாபார தோல்வி அடைந்துள்ளன.

இந்த சிட் ஃபண்டு நிறுவனங் களின் மூலம் ஆண்டுக்கு சுமார் 60,000 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுகிறது. இதில் 35 சத விகிதம் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் வருவது. ஆனால், 65 சதவிகிதம் அளவில் பதிவு செய்யப்படாத, வரை முறைக்கு உட்படாத நிறுவனங்கள் மூலம் நடைபெறுகிறது.

மக்களிடமிருந்து பணத்தைப் பெறுபவர்கள், சீட்டைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், சிட் ஃபண்டு என்ற பெயரில் போலி அலுவலகம் நடத்தும் பலர், எந்தவிதமான பதிவும் செய்யாமல் மக்களிடம் பணத்தை வசூல் செய்துகொண்டு காணாமல் போய் விடுகிறார்கள். குறைந்த வருமானம் உள்ளவர்கள், தெருக்காரர்கள், உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், குழுக்களாகச் செயல்படுபவர்கள் எனப் பலரும் பல இடங்களில் சீட்டுத் தொழிலை நடத்திவருகின்றனர்.

சிட் ஃபண்டைப் பொறுத்தவரைப் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மட்டுமே பிரச்னையைச் சந்தித்து வருகின்றன. எனவே, இவர்கள் காலப்போக்கில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களாக மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
Rawpixel

சிட் ஃபண்டு நிறுவனத்துக்கு என்ன லாபம்?

சீட்டு நடத்துபவர்கள், அதிகபட்சம் 7 சதவிகிதம் வரை கமிஷனாகப் பெறலாம். சிட் ஃபண்டில் எடுக்கப்படும் கமிஷன், `ஃபோர்மேன்ஸ் கமிஷன்' (Foreman’s Commission) எனப்படும். ஏலம் எடுக்கும் தொகையில் இந்தத் தொகை கழித்துக்கொண்டுதான் தரப்படும். இதைத் தனியாகக் கொடுக்க வேண்டியதில்லை.

இது அதிகபட்சமாக 2019-ம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் 5 சதவிகிதமாக இருந்தது. இதனை அதன் பிறகு 7 சதவிகிதமாக உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், சிலர் 2%,- 3% மட்டுமே கமிஷனாக வைத்துக்கொண்டு பதிவு செய்யாமல் சிட் நிறுவனத்தை நடத்திவருகிறார்கள். இது சட்டப்படி தவறானது.

நிறுவனத்தைப் பதிவுசெய்து, முறைப்படி நடத்தினால் செலவு அதிகமாகும் என்பதால் இப்படிப் பதிவு செய்யாமல் பலரும் சீட்டு கம்பெனிகளை நடத்தி வருகிறார்கள். இதற்கு பதில், அவர்கள் முறைப்படி பதிவுசெய்து அதிகபட்சம் 7 சதவிகிதம் கமிஷன் வைத்துக்கொண்டால் நிறுவனம் லாபகரமாக நடப்பதோடு, சட்டப்படியும் நடக்கும்.

சிட் ஃபண்டு நடத்தும் மாநில அரசுகள்..!

கேரள மாநில அரசும், கர்நாடகா மாநில அரசும் சிட் ஃபண்டு தொழிலை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றன. தமிழகத்தில் சிட் ஃபண்டு சட்டம் 1961 –ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இது பல முறை திருத்தப் பட்டிருக்கிறது. கேரளாவில் 1975-ம் ஆண்டு கேரளா சிட்ஸ் சட்டம் அங்குள்ள சிட் ஃபண்டு களை நெறிப்படுத்துகிறது.

கேரளாவில், அரசு நிறுவனமான `கேரள ஸ்டேட் ஃபைனான்ஷியல் என்டர்பிரைசஸ் லிமிடெட்' சிட் ஃபண்டை நடத்தி வருகிறது. இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவில் மட்டும் சுமார் 5000 சிட் ஃபண்டுகள் சட்டத்துக்குட்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் முதல் சிட் ஃபண்டு, ஆங்கிலேயர் காலத்தில் மெட்ராஸ் பிரசிடென் சியின் ஒரு பகுதியாக இருந்த கேரளாவின் மலபாரில் 1887–ல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான அதிகாரபூர்வ ஆவணத்தை மலபார் கலெக்டர் பதிவு செய்திருக்கிறார்.

கர்நாடகாவில் 1983 -ம் ஆண் டின் சிட் ஃபண்டு சட்டம் சிட் ஃபண்டுகளை நெறிப்படுத்து கிறது. அதுபோல் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் புதுடெல்லி போன்ற மாநிலங்களிலும் சிட் ஃபண்டுகள் சட்டத்திற்கு உட் பட்டு இயங்கி வருகின்றன. தற்போது இந்தியாவில் THE CHIT FUNDS (AMENDMENT) ACT, 2019 நடைமுறையில் உள்ளது.

சாமானிய மக்களுக்கு சேமிப்பு மற்றும் கடனுக்கு உதவியாக இருக்கும் சிட் ஃபண்டுகள் மீது முழுமையான நம்பிக்கை வர, தமிழக அரசு சிட் ஃபண்டுகளை நடத்த வேண்டும் என்பது குடும்பத் தலைவிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
SrdjanPav

சிட் ஃபண்டு விதிமுறைகள்..!

சிட் ஃபண்டு நடத்துபவர்கள் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வேறு தொழிலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது சட்டம். அப்படி வேறு தொழிலில் பணத்தைப் போடும் நிறுவனத்தில் சீட்டு சேராமல் இருப்பது நல்லது. பல சீட்டு நிறுவனங்கள், 10, 15 சீட்டுத் திட்டங்கள் நடத்தினால், அதில் சில சீட்டுகளை பதிவுசெய்கிறார்கள். மீதியை பதிவு செய்யாமலே நடத்தி வருகிறார்கள். இது தவறான செயல். இந்த விஷயம் அரசுக்குத் தெரிய வந்தால் சீட்டு நிறுவனத்துக்கும் சிக்கல், சீட்டு சேர்ந்திருப்பவர் களுக்கும் சிக்கல். இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சீட்டு சேர்பவர்கள் தாங்கள் சேர்ந்திருக்கும் சிட் ஃபண்டு திட்டம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிட் ஃபண்டு நடத்துபவர்கள், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் சீட்டுப் பணத்தை வழங்க வேண்டும். சீட்டைப் பதிவு செய்ததிலிருந்து ஒவ்வொரு மாதமும் அரசுக்குக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

சீட்டு எடுத்தவர்களுக்குப் பணம் கொடுக்கும்போது போதிய ஜாமீன் ஆவணங்களைக் கேட்டு வாங்கிய பிறகே பணத்தைக் கொடுப்பார்கள். அவர்களிடம் சொத்து ஆவணங்கள் இல்லை. அரசு ஊழியர்கள் இருவரிடம் ஜாமீன் கேட்கப்படலாம். இது, ஆரம்பத்திலேயே சிட் ஃபண்டு பணத்தை ஏலம் எடுத்துவிட்டு ஏமாற்றிவிடாமல் இருக்கும் தடுப்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டிருக்கும் ஆதாரம், வீட்டுப் பத்திரத்தின் நகல் ஆகியவற்றின் அடிப்படையில்கூட ஏலத்தொகை வழங்கப்படுகிறது.

உதாரணமாக, ரூ.1,20,000 சீட்டு இரண்டாவது மாதம் ரூ. 30,000 குறைவாக ரூ.90,000-க்கு தள்ளி எடுக்கப்படுகிறது. அப்படி எடுக்கும்பட்சத்தில் ஃபோர்மேன் கட்டணம் 5% அதாவது ரூ. 6,000 போக சீட்டு எடுத்தவருக்கு ரூ.84,000 தான் கிடைக்கும். 12 உறுப் பினர்களுக்குக் கிடைக்கும் மொத்தக் கழிவு, ரூ. 24,000. ஓர் உறுப்பினர் ரூ.10,000 கட்ட வேண்டிய நிலையில் ரூ. 8,000 கட்டினால் போதும். குறைவாகக் கட்டும் 2,000 ரூபாய் என்பது கழிவு, கசடு, கசர், டிவிடெண்டு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இந்த மொத்தக் கழிவு தொகையைச் சேர்த்தால் அதன் வருமானம் ஆர்.டி, எஃப்.டி வட்டி வருமானத்தைவிட அதிகமாக இருக்கிறது. பொதுவாக, சீட்டை கடைசியாக அல்லது அதற்கு முன்பாக எடுப்பவர்களுக்கு சுமார் 5%-லிருந்து 9% வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எத்தனை ரூபாய் தள்ளி எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து மாறுபடும். மிக அதிக கழிவு போனால் அதிக லாபம் இருக்கும்.

கடைசி மாதம் சீட்டு எடுத்த உறுப்பினருக்கு ஃபோர்மேன் கமிஷன் ரூ.6,000 போக மீதி 1,14,000 கிடைத்திருக்கும். சிட் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் எந்தத் தொகையில் ஏலத்தை ஆரம்பிக்க வேண்டும் என சிட் ஃபண்டு நிறுவனம் நிர்ணயித்து இருக்கும். இது போகப்போக குறைந்து கொண்டே வரும்.

சீட்டில் சேர்ந்திருக்கும் எல்லோருக்குமே லாபமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சீட்டுப் பணத்தை எப்போது, எதற்கு எடுக்கிறோம் என்பதைப் பொறுத்து அது லாபமாக அல்லது நஷ்டமாக இருக்கக்கூடும்.

சீட்டின் முடிவில் மொத்த தொகை பெறும் கடைசி நபர் மற்றும் முந்தைய சில சீட்டுகளைப் பெறுபவர்களுக்கு நல்ல லாபமாக இருக்கும். அவசிய தேவைக்காக மட்டுமே சீட்டுப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும். கிடைக்கிறது என்பதற்காக சீட்டுப் பணத்தை எடுத்தால் நஷ்டம்தான்.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
Ahmad Ali Usman

சிட் ஃபண்டு ஒப்பந்தம் கட்டாயம் தேவை!

சிட் ஃபண்டு திட்டத்தில் சேரும் உறுப்பினருடன் சிட் ஃபண்டு நிறுவனம் ஓர் ஒப்பந்தம் (Agreement) ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது சட்டப்படியான விதிமுறை. இந்த சிட் ஃபண்டு அக்ரி மென்ட்டின் இரண்டு பிரதிகளில், உறுப்பினர் மற்றும் சிட் ஃபண்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஃபோர்மேன் கையெழுத்திட வேண்டும். அந்த ஒப்பந்தத்தில், உறுப்பினரின் முழு பெயர், வீட்டு முகவரி, நாமினி, சீட்டுத் தவணை தொகை, எத்தனை தவணைகள், எத்தனை நாள்களுக்குள் மாத சீட்டுப் பணத்தைக் கட்ட வேண்டும், தாமதமாக கட்டினால் எவ்வளவு அபராதம் / வட்டி, பணம் கட்டவில்லை என்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும், அதிக பட்ச தள்ளுபடி எவ்வளவு, ஃபோர்மேனின் கமிஷன், சிட் ஃபண்டு நிறுவனத்தின் டெபாசிட் பணம் எந்த வங்கியில் போடப் பட்டிருக்கிறது, இடம் மற்றும் தேதி போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த அக்ரி மென்ட்டின் ஒரு பிரதி சிட் ஃபண்டு நிறுவனத்திடம் இருக் கும். ஒரு பிரதி உறுப்பினரிடம் வழங்கப்படும்.

சிட் ஃபண்டு பதிவு கட்டாயமா?

இந்தியாவில் உள்ள சிட் ஃபண்டு வணிகம், சீட்டு நிதி சட்டத்தின்படி, 1982-ன் கீழ் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி, சிட் ஃபண்டுகளை அந்தந்த மாநில அரசுகளால் மட்டுமே பதிவுசெய்து கட்டுப் படுத்த முடியும். சிட் ஃபண்டு நிறுவனங்களை ஒழுங்கு படுத்துபவர் சீட்டுப் பதிவாளர் ஆவார். அவர் அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்படுகிறார்.

சிட் ஃபண்டு நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் ஒரு வகை என்றாலும், சிட் ஃபண்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்ய விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் இந்த வணிகத்தைத் தொடங்க, சிட் ஃபண்டு நிறுவனத்தின் ஸ்பான்சர்கள் முதலில் ஒரு சிட் ஃபண்டு வணிகத்தை நடத்தும் நோக்கத்துடன் தனியார் வரையறுக்கப்பட்ட (லிமிடெட்) நிறுவனத்தைத் தொடங்க வேண்டும்.

தனியார் லிமிடெட் நிறுவனம் தொடங்கப்பட்டதும், அந்த நிறுவனம் பதிவுபெற மாநில பதிவாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவரிடம் அனுமதி பெற்ற பின்னரே சிட் ஃபண்டு நிறுவனம் தொடங்க முடியும்.

ஏதாவது குற்றத்துக்கு தண்டனை பெற்ற நபர் அல்லது நிறுவனத்துக்கு சிட் ஃபண்டு நிறுவனத்தைப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படாது. கட்டணம் செலுத்த தவறுதல், சட்டப்படியான அறிக்கையை தாக்கல் செய்யத் தவறியவர் அல்லது நிறுவனத்திற்குப் பதிவு செய்ய அனுமதி கிடைக்காது. குற்றத்துக்கு தண்டனை பெற்றவர் என்றால் ஐந்து வருடங் களுக்கு சிட் ஃபண்டு தொடங்க அனுமதி கிடைக்காது.

சிட் ஃபண்டு சட்ட திருத்தம்: முறைகேடுகளைக் கட்டுப்படுத்துமா?

சிட் ஃபண்டு திட்டங்களில் முறைகேடுகள் நடப்பது, ஏமாற்றுவது தொடர்பான செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வருகின்றன. மேற்கு வங்காளத்தில் நடந்த சாரதா சீட்டு நிறுவன மோசடி, இந்தியாவையே அதிர வைத்தது. பாதிக்கப்பட்டவர்கள், நிறு வனத்தின் மீது புகார் கொடுக்க, பிரச்னை பெரிதாக சி.பி.ஐ விசாரணை வரை சென்றது. இதில் மிகப்பெரிய சோகம், சாரதா நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 95% பேர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்துக்காகவும், படிப்புக்காகவும் பணம் சேர்த்த வர்கள். எதிர்த்து வழக்கு போடக்கூட அவர்களிடம் பணமில்லை. இதில் 4,000 தமிழ்க் குடும்பங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்னை மற்றும் தமிழகம் முழுக்க நடந்த பல்வேறு சிட் ஃபண்டு பிரச்னைகளை அடுத்து மோசடி சிட் ஃபண்டு திட்டங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க, சிட் ஃபண்டு திருத்தச் சட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதன்படி சிட் ஃபண்டு நிறுவனங்கள், சீட்டு நடத்துவது சட்ட விரோதமான நடவடிக்கை அல்ல. முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களிலிருந்து இவை வேறுபட்டவை என்றும் `மொத்த சீட்டுத் தொகை’, ‘வட்டித் தொகை பங்கு’, ‘நிகர சீட்டுத் தொகை’ போன்ற வார்த்தைகளுக்கு பதிலாக முறையே, ‘சீட்டுத் தொகை’, ‘ஈவுத் தொகை’, ‘பரிசுத் தொகை’ என்ற வார்த்தைகள் சிட் ஃபண்டு சட்டத் திருத்தத்தில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. .

இதன்மூலம் சட்டவிரோத சீட்டு நிறுவனங்கள் தொடர்பான குழப்பத்தைக் களைய வழி செய்யப்பட்டுள்ளது. சிட் ஃபண்டு நிறுவனங்களுக்கு பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட அனுமதி இல்லை. இப்போது சிட் ஃபண்டு நிறுவனங்கள், டிஜிட்டல் முறையில் வளர்ச்சியடைந்து வருகின்றன. இணைய தளம், செல்போன் செயலி (ஆப்) என நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

பலரும் பகுதி நேரத் தொழிலாக, பதிவு செய்யப்படாத சிட் ஃபண்டுகளை நடத்தி வருகிறார்கள். சிட் ஃபண்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் அந்தத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தவும் அகில இந்திய சீட்டு நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு உள்ளது.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!

சிட் ஃபண்டு நிறுவனங்கள்... செய்யக்கூடாத விஷயங்கள்...

சீட்டு நடத்துபவர்கள், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் சீட்டுப் பணத்தை வழங்கிட வேண்டும். பொதுவாக, சீட்டு ஏலம் முடிந்த 7 முதல் 10 நாள்களுக்குள் பணம் கொடுக்கப்படுகிறது. சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கும்போது போதிய ஆவணங்களைக் கேட்டு வாங்கிய பிறகே பணத்தைக் கொடுக்க வேண்டும். சீட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டவர், அதனை மறுத்தால் அந்தச் சீட்டுக் குழுவில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

ஏலச் சீட்டு தவிர்த்து, மாதம் ரூ. 1,000 வீதம் 24 மாதங்களுக்கு சீட்டு கட்டி வந்தால், 25-வது மாதம் 32,000 ரூபாயாக வட்டியுடன் சேர்த்துத் தருகிறோம் என்பது போலவும் சீட்டுத்திட்டம் நடக்கிறது. ஆனால், இது போன்ற சீட்டு நிறுவனங்களில் சொன்னபடி சீட்டுப் பணத்தை தருவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தாலும் நடவடிக்கை பெரிதாக இருக்காது. காரணம், இந்தச் சீட்டுகளை நடத்துபவர்கள் அரசியல் அல்லது குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பெரும் பாலும் நிறுவனத்தை சிட் ஃபண்டாக பதிவு செய்திருக்க மாட்டார்கள்.

விதிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படவில்லை என்றால் பதிவாளருக்கு அதை நிராகரிக்கும் அதிகாரம் உண்டு.

தங்களின் நிறுவனத்தின் பெயரில் `Chit' என்கிற வார்த்தையை அனைத்து நிறு வனங்களும் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

இவை தவிர சிட் ஃபண்டு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பல கடுமையான விதிமுறைகள் உள்ளன. அவை...

* குறைந்தபட்ச நிதி தேவை களை ஈடுகட்ட கையிருப்பு பணம் வைத்திருக்க வேண்டும். இது வாடிக்கையாளர்களின் முதலீட்டுக் கும், பாதுகாப்புக்கும் மற்றும் பிரச்னைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சமாளிக்கவும் உதவும்.

* வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தை சிட் ஃபண்டு திட்டத்துக்கு மட்டுமே பயன் படுத்தவேண்டும்.

* புதிய சீட்டுக் குழு அமைக்க, மாவட்ட பதிவாளரிடம் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

* குழுவிலிருந்து உறுப்பினர் ஏலத்தின் மூலம் பெறும் பணம் `Chit Prize Money' எனப்படுகிறது.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
Atstock Productions

சந்தாதாரர், முதலீட்டாளர் மற்றும் கடன் பெறுவோர் உரிமைகள்...

* மத்திய மற்றும் மாநில சீட்டுச் சட்டங்கள், முதலீட்டாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கின்றன

* ஒவ்வொரு முறை சந்தா பணம் கட்டும்போதும் நிறுவனத் திடமிருந்து ரசீது பெற்றுக் கொள்வது அவசியம்.

* அனைத்து உறுப்பினர் களுக்கும் ஏலத்தில் பங்கேற்க உரிமை உண்டு. ஆனால், ஒரு தடவை ஏலம் எடுத்தவர், மீண்டும் ஏலம் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்.

* அடுத்த ஏலத்துக்கு முன்னால், ஏலத்தில் எடுத்த சீட்டுத்தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நியாயமான காரணம் இல்லாமல் தரமறுத்தால், மாவட்டப் பதிவாளரிடம் புகார் செய்யலாம்.

* சிட் ஃபண்டு மூலம் பாரம் பர்ய முதலீடுகளான வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ஆர்.டி. திட்டத்தைவிட சில சத விகிதம் கூடுதலாக வருமானம் பெற முடியும். நீங்கள் இதுவரைக் கும் கட்டிய தொகையைவிட கூடுதல் தொகையை ஏலத்தில் எடுக்க முடியும். கடனின் அனைத்து சலுகைகளையும் சிட் ஃபண்டில் அனுபவிக்க முடியும்.

* அதிக தொகையைக் கொண்ட பெரிய சீட்டுகள் என்கிற போது வருமான ஆதாரத்துக்கு மூன்று மாத அறிக்கை, வருமான ஆதாரம் (சம்பள ரசீது) கேட்கக் கூடும்.

* சிட் ஃபண்டு நிறுவனத்தின் விதிமுறைகளை ஒருமுறைக்கு இரு முறை தெளிவாகப் படித்து புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாத, புரியாத மொழியில் இருந்தால், உங்கள் தாய்மொழியில் அச்சிட்டுக் கேளுங்கள். இல்லை என்றால் அதன் அர்த்தத்தை விளக்கி கம்ப்யூட்டரில் டைப் செய்து பிரின்ட் அவுட் எடுத்து கையொப்பமிட்டு கேளுங்கள். சிட் ஃபண்டுக்கான மாதத் தவணையை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டவில்லை என்றால் அபராதம் இருக்கும். அது எத்தனை சதவிகிதம் அல்லது குறைந்தபட்சத் தொகை எவ்வளவு, அதிகபட்சம் எவ்வளவு என்கிற விவரத்தைக் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள். சில நேரங்களில் ஐந்து நாள்களுக்குள் பணத்தைக் கட்ட வேண்டும். அதைத் தாண்டினால் 1,000 ரூபாய் அபராதம் என்கிற விதிமுறையை கவனிக்காமல், அலட்சியமாக இருந்தால் இழப்பு உங்களுக்குத்தான்.

* உங்களின் வீட்டு முகவரி, செல்போன் எண் மற்றும் இ-மெயில் ஐ.டி மாறினால், உடனே சிட் ஃபண்டு நிறுவனத்துக்குத் தெரிவிப்பது நல்லது. அப்போதுதான் தகவல்கள் சரியாக வந்து சேரும்.

* சிட் ஃபண்டு நிறுவனத்தில் சேர்பவர்கள் நம்பிக்கையான, வெளிப்படையான, வழக்குகள் எதுவும் இல்லாத, வாடிக்கையாளர்களின் புகார்கள் இல்லாத நிறுவனமா என்பதை கவனிப்பது அவசியம். ஏற்கெனவே சீட்டு போட்டிருக்கும் பலரிடம் விசாரித்து சேருவது நல்லது.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
subodhsathe

சிட் ஃபண்டு நிறுவனம் ஏமாற்றினால்..!

அனைத்து சிட் ஃபண்டுகளும் பதிவு செய்யப்பட வேண்டும். ஒருவர் பதிவு செய்யப்பட்ட சிட் ஃபண்டு திட்டத்தில் சேர்ந்து ஏமாற்றப்படும் அல்லது மோசடி செய்யப்படும்பட்சத்தில் மட்டும் புகார் கொடுக்க முடியும்.

சிட் ஃபண்டு நிறுவனம் ஏமாற்றினால், அது குறித்து மாவட்ட சார் பதிவாளருக்கு எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டும். அவர் தொடர்புடைய சிட் ஃபண்டு நிறுவனத்தின் அதிகாரிகளை அழைத்து விசாரிப்பார். அதன் பிறகு உரிய தீர்வை அளிப்பார்.

உறுப்பினர் சீட்டு எடுத்தவுடன் கம்பெனிகள் அதிகபட்சம் ஏழு நாள்களுக்குள் வாடிக்கையாளருக்குப் பணம் கொடுக்க வேண்டும். இதில், தாமதம் செய்தாலும் மாவட்ட சார்பதிவாளரிடம் புகார் கொடுக்கலாம்.

முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் சிட் ஃபண்டில் ஒவ்வொரு திட்டம் தொடங்கும்போது, அந்தச் சீட்டின் மதிப்பு எவ்வளவோ, அந்தத் தொகைக்கு, சார் பதிவாளர் அலுவலகத்தின் சிட்ஸ் துணை பதிவாளர் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட் எடுத்து சார் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும். இது, சீட்டுத் திட்டத்தில் ஏதாவது பிரச்னை என்றால் அதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகத்தான். சிட் ஃபண்டு நிறுவனத்தின் செயல் பாடு சரியில்லை என்றால் அது குறித்து, பதிவு செய்யப் பட்டிருக்கும் சார் பதிவாளர் அலுவலகத்தில் உடனடியாக புகார் செய்வது அவசியமாகும்.

அங்கீகரிக்கப்பட்ட சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கக் கூடிய சீட்டு நிறுவனத்தில் சேர ஒருவர் அவர் தொடர்பான அடையாளம் மற்றும் நிதி சார்ந்த ஆவணங்களைக் கொடுக்க வேண்டியிருக்கும். சம்பள சான்றிதழ் கொடுக்க வேண்டி யிருக்கும். சம்பளம் வாங்கும் இருவர் ஜாமீன் போட வேண்டி யிருக்கும். இந்த கெடுபிடிகளுக்குப் பயந்து அனுமதி இல்லாத சீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால், நாம் சேமிக்கும் பணம் நமக்குக் கிடைக்காமல் போகும் அபாயம் மிக அதிகமாக இருக்கிறது.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
Atstock Productions

சிட் ஃபண்டு பாதக அம்சங்கள்!

* பதிவு செய்யப்படாத சீட்டில் சேர்ந்தால் முதலுக்கே மோசம் ஏற்படலாம்.

* பல நேரங்களில் சீட்டில் சேர்ந்திருப்பவர்களைவிட அதை நடத்தும் நிறுவனங்களே அதிகம் பலன் அடைகின்றன.

* ஒரு சீட்டு குரூப்பில் சேர்ந்திருக்கும் அனைவரும் கடைசியில்தான் எடுக்க விரும்புகிறார்கள் என்றால் தள்ளுபடி அதிகம் கிடைக்க வாய்ப்பு இல்லை. அப்போது லாபம் என்பது மிகக் குறைவாக இருக்கும். அது போன்ற குரூப்களில் மீண்டும் சேர்வதைத் தவிர்ப்பது லாபகரமாக இருக்கும்.

பொதுவாக, சிட் ஃபண்டை அவசர பணத் தேவைக்குதான் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஏதாவது, தேவைக்குப் பணம் வேண்டும் என்றால் சீட்டில் சேர்ந்து அதிகமாகத் தள்ளி எடுக்கிறார்கள். அடுத்துவரும் மாதங்களில் இவர்கள் சரியாக தவணையைக் கட்டவில்லை என்றால் எல்லோருக்கும் சிக்கல் தான்.

அமைப்பு சாராத துறைகளில் பணிபுரிபவர்கள்தான் அதிகமாக சீட்டு போடுகிறார்கள். வங்கிச் சேவையை இதுவரை பயன் படுத்தாதவர்கள், கடன் வாங்கு வதற்கான நடைமுறை தெரியாதவர்கள், அதிகாரிகளைக் கண்டு பயப்படுபவர்கள்தான் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள். வருமானத்தைக் கணக்கில் காட்ட விரும்பாத வர்களுக்கு ஏற்றதாக இருக்கும் இது, சாதகமான அம்சமாகவும் பாதகமான அம்சமாகவும் ஒரு சேர இருக்கிறது.

அதிக வட்டியிலான (20-24%) தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டு (40-45%) கடன்களுக்கு பதில் சிட் ஃபண்டு கடன் லாபகரமாக இருக்கிறது.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!

தட்டுச் சீட்டு

`தட்டுச் சீட்டு' என்றால் பத்து பேரின் பெயர்களையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி, குலுக்கிப் போடுவார்கள். அதில் ஒரு சீட்டை எடுத்து, அதில் யார் பெயர் வருகிறதோ அவருக்கு மொத்த பணத்தையும் கொடுத்து விடுவார்கள். அடுத்த மாதம் சீட்டு எடுத்தவர் தவிர, மற்ற ஒன்பது பேர் பெயரும் எழுதிப் போடப்படும். எல்லா உறுப்பினர்களும் மாதம் 2,500 ரூபாய் கொடுத்துவிட வேண்டும். இது சில்லறையாகச் சேர்த்து மொத்தமாகப் பெறும் வழி. அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் சீட்டு இது. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் முதல் மாதமே கிடைக்கும். இல்லை யென்றால் பத்தாவது மாதம்வரை படுத்தியெடுக்கும்.

தீபாவளி சீட்டில் சேரலாமா?

தமிழகத்தில் தெருவுக்குத் தெரு நடத்தப்படும் பாத்திரச் சீட்டு, பலகார சீட்டு, நகைச் சீட்டு, சுற்றுலா சீட்டு, தீபாவளி சீட்டு ஆகியவற்றுக்கு மாநில அரசின் அங்கீகாரம் கிடையாது என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். சீட்டு நடத்துபவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர், சொந்த வீட்டுக்காரர், பணக் காரர்கள் என பல்வேறு நம்பிக்கை யின் அடிப்படையில் இந்தச் சீட்டில் சேர்கிறார்கள். இதுபோன்ற சீட்டுத்திட்டத்தில் சேர்வதற்கு பதில் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் தொடர் வைப்புத் திட்டத்தில் (ஆர்.டி) பணத்தை மாதா மாதம் சேமித்து வரலாம் அல்லது பதிவு செய்யப்பட்ட சீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மாதாந்திரச் சீட்டில் பணம் போடலாமா? - பலன்களும் எச்சரிக்கைகளும்!
Nisha Dutta

சீட்டு நிதி நாள் – ஆகஸ்ட் 19

இந்தியாவில் சிட் ஃபண்டு களுக்கான தனிச் சட்டம் 1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் அமலாக்கப்பட்டது. சிட் ஃபண்டு சட்டம் அமலாக்கம், நிதி அமைச் சகத்தின் கீழ் வருகிறது. இந்தச் சட்டம் பல முறை காலத்துக்கு ஏற்ப திருத்தப்பட்டிருக்கிறது.

அரசால் சீட்டு நிதிகள் அங்கீகரிக்கப்படுவதைக் கொண் டாடும் விதமாகவும் பொது மக்களுக்குச் சட்டபூர்வமான சீட்டு நிதி மற்றும் சட்டத்துக்கு புறம்பான போலி நிறுவனங்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாடு முழுவதும் ஆகஸ்ட் 19-ம் தேதியானது, ‘சீட்டு நிதி நாள்’ என்று கொண்டாடப்படுகிறது.