Published:Updated:

தாவூத் கும்பலின் பிடியில் குஜராத் கடற்கரை!

குஜராத் கடற்கரை
பிரீமியம் ஸ்டோரி
News
குஜராத் கடற்கரை

சர்வதேசக் கால்பந்து போட்டிக்காகப் பதுக்கப்படும் போதைப்பொருள்கள்...

பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிராவின் எல்லைகள், பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகியிருப்பதால், 1,650 கி.மீ நீளம்கொண்ட குஜராத் கடற்கரையைத் தங்களின் கடத்தல் தொழிலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது தாவூத் இப்ராஹிம் கும்பல். ‘இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது’ என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

குஜராத் கடற்கரையில், பல கோடிகள் மதிப்பிலான ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பிடிபடுவது இப்போது வாடிக்கை யாகிவிட்டது. கடந்த இரண்டாண்டில் மட்டும் குஜராத் கடற்பகுதியில் பிடிபட்ட போதைப் பொருள்களின் மதிப்பு, சுமார் 50,000 கோடி ரூபாய் என்பதிலிருந்தே கடத்தலின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

குஜராத் காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் இதுகுறித்துப் பேசினோம். ‘‘குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்துத் திரும்பும் படகுகளுடன் வேறு ஏதாவது படகு சரக்குகளுடன் நுழைந்துவிடக் கூடாதே என்ற பதைபதைப்புடன் நாள்தோறும் நள்ளிரவு நேரத்திலும் கண்காணிப்பில் ஈடுபடுகிறோம். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகள், பாகிஸ்தான், ஆப்கன், இரான் உள்ளிட்ட நாடுகளில் அபின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் அதிகம் கிடைக்கின்றன. அதிலிருந்து தயாரிக்கப் படும் ஹெராயினுக்கு இந்தியச் சந்தையில் நல்ல விலை கிடைப்பதால், அங்கிருந்து தாவூத் இப்ராஹிம் கும்பல் மூலம் இந்தியாவுக்குக் கடத்தப்படுகிறது.

தாவூத் கும்பலின் பிடியில் குஜராத் கடற்கரை!

ஆரம்பத்தில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள், மகாராஷ்டிராவின் மும்பை கடற் பகுதியைப் பயன்படுத்தினார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து மும்பையில் தாக்குதல் நடத்திய பிறகு, மும்பை கடற்பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. அத்துடன், கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாகத் திகழ்ந்த ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளும் முழுமையாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. அதனால், தாவூத் இப்ராஹிம் கும்பலின் பார்வை குஜராத் கடற்கரை நோக்கித் திரும்பியது. அப்போது முதல் குஜராத் கடற்கரை போதைப்பொருள்கள் புழங்கும் பாதையானது. நீண்ட கடற்கரையாக இருப்பதால், படகுகள் மூலமாகப் போதைப்பொருள்கள் கடத்த அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. அதேசமயம், நீண்ட கடற்கரைப் பகுதி என்பதால், நாம் பாதுகாப்பதும் சிரமமாக இருக்கிறது. இதைப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மத்திய அரசு கருது வதால், இப்போது கடல் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இருந்தும், கரையோர புரோக்கர்களின் கைகளுக்குப் போதைப் பொருள்கள் இன்னும் வந்துசேர்வது எங்களுக்குப் பிடிபடாத புதிராகவே இருக்கிறது’’ என்றார்கள்.

குஜராத் மாநிலத் தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம், ‘‘2021 ஜனவரி மாதம், பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் 175 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை குஜராத் கடல் வழியாகக் கடத்த முயன்ற ஐந்து பாகிஸ்தானி யர்களைக் கைதுசெய்தோம். இடையிடையே, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள். நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட 600 கோடி ரூபாய் மதிப்பிலான 120 கிலோ ஹெராயின், குஜராத்தின் மோரி மாவட்டத்தில் பிடிபட்டது. டிசம்பர் 20-ம் தேதி கட்ச் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தான் படகில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 77 கிலோ ஹெராயினைக் கைப்பற்றினோம். ஐந்து பாகிஸ்தானியர்களும் பிடிபட்டார்கள். சர்வதேசக் கடல் எல்லைக்கு வந்துகொண்டிருந்த அந்தப் படகிலிருந்து வந்த ரேடியோ அலைவரிசையை ரிசீவ் செய்து கேட்டபோது, அதில் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. அந்தப் படகு இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்ததும் மடக்கிப்பிடித்து அதிலிருந்த ஹெராயினைப் பறிமுதல் செய்தோம். அது பஞ்சாபைச் சேர்ந்த இருவருக்கு டெலிவரி செய்யவிருந்த தகவலும் கிடைத்திருக்கிறது’’ என்றார்.

தாவூத் கும்பலின் பிடியில் குஜராத் கடற்கரை!

இதேபோல், செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ் தானிலிருந்து இரான் வழியாக, குஜராத் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த கப்பலிலிருந்த இரு கன்டெய்னர்களில் சோதனையிட்டபோது, 2,988 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு 21,000 கோடி ரூபாய். இதுபோல் அடிக்கடி போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவது பற்றி, குஜராத் மாநிலத் தீவிரவாதத் தடுப்புப் படைத்தலைவர் ஹிமன்சு சுக்லாவிடம் பேசினோம்... ‘‘பஞ்சாப் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும், பாகிஸ்தானுடனான வர்த்தகம் ரத்துசெய்யப் பட்டிருப்பதாலும், கடத்தல்காரர்கள் அதிக அளவு குஜராத் கடற்கரையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பினர், முன்பு தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் கள்ளநோட்டு புழக்கத்தை ஏற்படுத்தினார்கள். இப்போது போதைப்பொருள்களைக் கடத்தி வருகிறார்கள். இதன் பின்னணியில் ஐ.எஸ்.ஐ அமைப்பு இருக்கிறது. கடந்த இரண்டு வருடங் களில் மட்டும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்திருக் கிறோம்’’ என்றார்.

நீண்ட தேடலுக்குப் பிறகு, போதைப்பொருள் விற்பனைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தோம். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டது அதிர்ச்சி ரகம். ‘‘அடுத்த வருடம் இறுதியில், கத்தார் மற்றும் தோஹாவில் சர்வதேசக் கால்பந்து போட்டி நடக்கவிருக்கிறது. அதைப் பார்க்க லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளிலு மிருந்தும் வருவார்கள். அவர்களுக்கு சப்ளை செய்வதற்காக இப்போதிருந்தே போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன. கால்பந்துப் போட்டி ஆரம்பிக்கவிருக்கும் கடைசி நேரத்தில், கண்காணிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், இப்போதே கடத்தி பாதுகாப்பாக வைக்கப்படு கிறது. சர்வதேசப் போட்டிகளின்போது மார்க்கெட் சூடுபிடிக்கும் என்பதால், பெரிய டீலர்கள் இப்போதே பதுக்கத் தொடங்கி விட்டார்கள்’’ என்றார்.

குஜராத் கடற்கரையோரம் அதிக அளவில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் பாகிஸ்தான் கப்பல்கள் அத்துமீறுவது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. மும்பைத் தாக்குதல் போன்று மீண்டும் ஓர் ஆபத்தான சம்பவம் நடப்பதற்கு முன்பாக, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்!