Published:Updated:

’அப்பா... என்னை காப்பாற்றுங்கள் என்றாள்’ -குருத்துவாரா தாக்குதலில் உறவுகளை இழந்து தவிக்கும் ஹரிந்தர்

Representation image
Representation image

பயங்கரவாத தாக்குதலில் உறவினர்களை இழக்காத குடும்பங்களே இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது இங்கிருந்து வெளியேறவே விரும்புகிறார்கள் என்றார் ஹரிந்தர்.

அப்பா... காப்பாற்றுங்கள் எனக் கத்திக்கொண்டே என் மகள் கீழே விழுந்தால். ஆப்கானிஸ்தான் என்னுடைய நாடு என நினைத்திருந்தேன். ஆனால்...? ஹரிந்தர் சிங்கின் வார்த்தையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்துவாராமீது கடந்த சில நாள்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 27 பேர் பலியானார்கள்.

தீவிரவாதிகள்
தீவிரவாதிகள்

இந்தத் தாக்குதலில் ஹரிந்தரின் கண் முன்பே அவரது நான்கு வயது மகள் தன்யா, மனைவி மற்றும் தந்தை நிர்மல் சிங் ஆகியோரை துப்பாக்கி தோட்டாக்களுக்குப் பறிகொடுத்தார். அவரது தாய் மற்றும் உறவினர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

`குருத்துவாரா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்?’ -ஐ.எஸ் பொறுப்பேற்பில் கேள்வியெழுப்பும் இந்தியா

குருத்துவாரா தாக்குதலின் போது அவரது மற்ற இரண்டு குழந்தைகளும் நான்கு சகோதரர்களும் அங்கு இல்லை. குருத்துவாரா சம்பவம் தொடர்பாக ஆங்கில ஊடகமான தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார். அதில், “இன்னும் சில தினங்களில் என் மகள் தன்யாவுக்கு நான்காவது பிறந்தநாள் கொண்டாட இருந்தோம். அவள் கேக் வெட்ட வேண்டும் என்று கேட்டிருந்தாள். இப்போது என் தாய், சகோதரர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.

Representation image
Representation image

குருத்துவாராவில் எப்போதும் 6.30 மணிக்கு வழக்கமான வழிபாடு இருக்கும். அங்கு 100க்கும் அதிகமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பிரார்த்தனை நடந்துகொண்டிருக்கும் போது திடீரென சிலர் திருடர்கள் வந்துவிட்டார்கள் எனக் கூச்சலிட்டனர். துப்பாக்கிகளுடன் குருத்துவாராவுக்குள் வந்த நபர்கள் அங்கிருந்தவர்கள் நோக்கிச் சுடத்தொடங்கினர்.

நான் மேடையில் இருந்தேன். என் உறவினர் கீழே உட்காரு எனக் கூச்சலிட்டார். நான் அமர்ந்தபோது என் மனைவியும் மகளும் என் மீது அப்படியே சரிந்தனர். என் மகளின் தலையில் குண்டு துளைத்தது. அவள் கீழே விழும்போது அப்பா என்னைக் காப்பாற்றுங்கள் எனக் கதறிக்கொண்டே விழுந்தாள். என் மனைவி மற்றும் தந்தைக்கு மார்பில் குண்டுகள் துளைத்தன.

Representation image
Representation image

இந்தத் தாக்குதலில் இங்கிருக்கும் மக்கள் தங்களது உறவினர்களை இழந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலில் உறவினர்களை இழக்காத குடும்பங்களே இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது இங்கிருந்து வெளியேறவே விரும்புகிறார்கள். இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் என்னுடைய நாடு என உணர்ந்தேன். ஆனால் இப்போது நான் அப்படி நினைக்கவில்லை. நான் இங்கு வாழவே விரும்பவில்லை” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு