Published:Updated:

தவறான முடிதிருத்தம்; ரூ.2 கோடி இழப்பீடு வழங்க ஐ.டி.சி ஹோட்டலுக்கு உத்தரவிட்ட NCDRC; பின்னணி என்ன?

ஆஷ்னா, சலூன் ஊழியர்களின் தவறால் தனது தலைமுடியை இழந்து, பார்த்துவந்த வேலையை இழந்து, விரக்தியின் உச்சத்தை அடைந்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கலப்படம், தரமற்ற பொருள் விற்பனை, கூடுதல் விலை, சேவைக் குறைபாடுகள் என இன்றைய சூழலில் வணிகரீதியாக நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இப்படிப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் நுகர்வோரின் பக்கம் நின்று, விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 1988-ம் ஆண்டு டெல்லியில் அமைக்கப்பட்டதுதான் இந்திய தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் (N.C.D.R.C). மோசமான சேவை, எடை குறைவு, கலப்படம் என நுகர்வோரின் விற்பனை தொடர்பான புகார்களை விரைவாக விசாரித்து அவர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் கீழ், இந்தியா முழுவதும், மாநிலம்தோறும், மாவட்டம்தோறும் குறைதீர்ப்பு ஆணையங்கள் செயல்பட்டுவருகின்றன.

20 லட்சம் ரூபாய் வரையிலான இழப்பீட்டுக்கான வழக்குகள் மாவட்ட குறைதீர் ஆணையங்களாலும், 20 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான வழக்குகள் மாநில குறைதீர்ப்பு ஆணையங்களாலும், ஒரு கோடி ரூபாய்க்கு மேலான இழப்பீடு வழக்குகள் மற்றும் மேல் முறையீட்டு வழக்குகள் டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தாலும் விசாரிக்கப்பட்டுவருகின்றன. டெல்லியில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரைத் தலைவராகக்கொண்டு, அவருக்குக் கீழ் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில் மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் முன் அனுபவம்கொண்ட நான்கு பேரை உறுப்பினர்களாகக்கொண்டு இந்த ஆணையம் செயல்பட்டுவருகிறது. மாவட்ட, மாநில குறைதீர்ப்பு ஆணையங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த மத்திய ஆணையத்தில் விசாரிக்கப்படும் வழக்குகள் பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே பார்க்கப்படுகின்றன.

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

அந்த வகையில், அண்மையில் தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் இழப்பீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கக் கோரி பிறப்பித்திருக்கும் உத்தரவு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 2 கோடி ரூபாய் என்ற பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிடும் அளவுக்கு என்னதான் வழக்கு அது..?, வாருங்கள், அந்த நுகர்வோரின் புகாரையும், குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பையும் விரிவாகப் பார்க்கலாம்.

ஹரியானா மாநிலம், குருகிராம் நகரத்தைச் சேர்ந்தவர் ஆஷ்னா ராய் (45). மாடலான இவர் அழகுசாதனப் பொருள்கள் விளம்பரத்தில் நடித்துவருகிறார். இவர் இந்திய அளவில் பிரபலமான பேன்டீன் ஷாம்பூ மற்றும் வி.எல்.சி.சி அழகுசாதனப் பொருள்களின் விளம்பரங்களில் நடித்திருக்கிறார். மாடல் என்பதால் உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தும் ஆஷ்னா ராய், கடந்த 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12-ம் தேதி டெல்லியிலுள்ள ஹோட்டல் ஐ.டி.சி மௌரியாவின் சலூனுக்கு சிகை அலங்காரம் செய்துகொள்வதற்காகச் சென்றிருக்கிறார். அங்கு, வழக்கமாக ஆஷ்னாவுக்கு சிகை அலங்காரம் செய்யும் சலூன் ஊழியர் அன்று விடுமுறையிலிருந்ததால், ஆஷ்னாவுக்கு அந்த சலூன் மேனேஜர் மாற்று ஊழியர் ஒருவரை சிகை அலங்காரம் செய்ய நியமித்திருக்கிறார். அப்போது, ஆஷ்னா வேறு யாரும் வேண்டாம் என்று மறுத்தபோது, மேனேஜர், `இந்த ஊழியரும் கைதேர்ந்தவர்தான். சிறப்பாகச் சிகை திருத்தமும் அலங்காரமும் செய்வார்' என்று கூறி அவரை அமரவைத்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த சில நாள்களில் நேர்காணல் ஒன்று இருப்பதால் கவனமாகச் சிகை திருத்தம் செய்யுமாறு சலூன் ஊழியரை வலியுறுத்திவிட்டு ஆஷ்னா அமர்ந்திருக்கிறார். ஆனால், சலூன் ஊழியர், ஆஷ்னா கேட்டுக்கொண்ட ஸ்டைலில் சிகை திருத்தம் செய்யாமல், தோள்பட்டை வரை தலைமுடியை முழுவதுமாக வெட்டி, அவரின் முக அழகைப் பாழ்படுத்தியதாகச் சொல்கிறார்கள். பவர் கண் கண்ணாடி அணிந்திருந்த ஆஷ்னா, சிகைதிருத்தம் முடிந்த பிறகு கண்ணாடியில் தனது தலைமுடியைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர், இது தொடர்பாக சலூன் ஊழியர்களிடமும் மேனேஜரிடமும் கேட்டபோது தெரியாமல் நடந்துவிட்டதாகக் கூறி மன்னிப்புக் கேட்டிருக்கின்றனர். ஆனால், தவறாகச் சிகைதிருத்தும் செய்த அந்த ஊழியர் மீது எந்த நடவடிக்கையையும் சலூன் நிர்வாகம் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குப் பின்னர், ஆஷ்னாவின் வேண்டுகோளை ஏற்று ஐ.டி.சி சலூன் நிர்வாகம் மீண்டும் பிரத்யேக தலைமுடி சிகிச்சைக்குத் தங்கள் நிபுணர்கள் மூலம் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் ஐ.டி.சி சலூன் நிபுணர்கள் ஆஷ்னாவுக்கு அளித்த தலைமுடி சிகிச்சையில் அவரது தலைமுடி பயங்கரமாகச் சேதமடைந்து, அவருக்கு அதிக எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஆஷ்னாவால் விளம்பரங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு, அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.
அதையடுத்து, ஆஷ்னா தனக்குத் தவறான சிகிச்சை அளித்த ஐ.டி.சி சலூன் நிர்வாகத்திடம் இழப்பீடு கேட்டு டெல்லியிலுள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆஷ்னாவின் வழக்கு கடந்த 21-ம் தேதி குறைதீர்ப்பு ஆணையத்தில் நீதிபதி ஆர்.கே.அக்ரவால் மற்றும் ஆணைய உறுப்பினர் எஸ்.எம்.கண்டிகர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அக்ரவால் இரு தரப்பு வாதங்களைக் கேட்டு விசாரித்துவிட்டு தீர்ப்பு வழங்கினார். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் ஷரத்துகளின்படி, மனுதாரரான ஆஷ்னா ராய்க்கு சலூன் ஊழியர்கள் தவறாகச் சிகிச்சை அளித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், `மோசமான வாடிக்கையாளர் சேவை' என்பதன் அடிப்படையில் வழக்கு தொடர்ந்த ஆஷ்னா ராய்க்கு ஐ.டி.சி ஹோட்டல் நிர்வாகம் ரூபாய் 2 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறி, அந்த நிறுவனத்தின் தலைவர் யோகேஷ் சந்தர் தேவேஸ்வரை எதிர் மனுதாரராகக் குறிப்பிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

haircut
haircut

குறைதீர் ஆணைய நீதிபதி அக்ரவால் தனது தீர்ப்பில், ``பொதுவாகவே, பெண்கள் தங்கள் கூந்தல் பராமரிப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். அப்படி இருக்கும்போது, ஆஷ்னா ராய் மாடல் என்பதால் தனது தலைமுடியை அழகாகப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே, அவர் தலைமுடி பராமரிப்புக்கு மட்டுமே அதிகமாகச் செலவு செய்துவந்திருக்கிறார். வி.எல்.சி.சி மற்றும் பேன்டீன் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு அவர் விளம்பரங்கள்கூடச் செய்து கொடுத்திருக்கிறார். இந்தநிலையில், அடுத்த வாரம் முக்கியமான நேர்காணல் ஒன்றை வைத்துக்கொண்டு அவர் ஐ.டி.சி சலூனுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்குக் கிட்டத்தட்ட மொட்டை அடித்துவிட்டதுபோல், அவரின் அறிவுரைகளை மீறி சலூன் ஊழியர்கள் அவருக்குத் தவறாகச் சிகைதிருத்தம் செய்திருக்கின்றனர். அதனால், ஆஷ்னா தனது துறையில் விளம்பர வாய்ப்புகளை இழந்து, சிறந்த மாடல் ஆக முடியாமல் போயிருக்கிறார். சலூன் ஊழியர்களின் தவறால் அவரின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது.

download

அதேபோல், ஐ.டி.சி நிறுவனத்தின் சார்பில் அந்தப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட இலவச சிகிச்சையில் நிபுணர்கள் ஆஷ்னாவின் தலைக்குப் பயன்படுத்திய பொருள்களால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, நாள்பட்ட எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக, ஆஷ்னா தனது தலைமுடியை இழந்து, பார்த்துவந்த வேலையை இழந்து, விரக்தியின் உச்சத்தை அடைந்திருக்கிறார். எனவே, சலூன் ஊழியர்கள் மற்றும் நிபுணர்களின் இந்த அலட்சியத்தை இந்த ஆணையம் குற்றமாகவே கருதுகிறது. தரமற்ற மற்றும் மோசமான சேவையால் ஐ.டி.சி நிறுவனம் அதன் வாடிக்கையாளரை பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ஐ.டி.சி ஹோட்டல் நிறுவனம் இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு