Published:Updated:

இருமனங்கள் இணைந்தாலும் திருமணங்கள் கூடாதா?

திருமணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
திருமணங்கள்

பெயரென்னவோ பொத்தாம்பொதுவாக இருந்தாலும், ‘திருமணங்கள் மூலம் நடக்கும் மதமாற்றங்களைத் தடுப்பதற்காகத்தான் இந்தச் சட்டம்’ என்று பா.ஜ.க-வினரே வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.

இருமனங்கள் இணைந்தாலும் திருமணங்கள் கூடாதா?

பெயரென்னவோ பொத்தாம்பொதுவாக இருந்தாலும், ‘திருமணங்கள் மூலம் நடக்கும் மதமாற்றங்களைத் தடுப்பதற்காகத்தான் இந்தச் சட்டம்’ என்று பா.ஜ.க-வினரே வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.

Published:Updated:
திருமணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
திருமணங்கள்
வர்கள் திருமணம் செய்துகொண்டு சில மாதங்களாக சேர்ந்து வாழ்கின்றனர். 27 வயது கணவன் முஸ்லிம்; 24 வயது மனைவி இந்துப் பெண். திடீரென பஜ்ரங் தள் உள்ளிட்ட சில அமைப்பினர் கொடுத்த புகாரால், அவர்கள் பிரிக்கப்படுகின்றனர். ‘திருமணத்தின் பெயரால் ஏமாற்றி மதமாற்றம் செய்ய முயன்றார்’ என்பது குற்றச்சாட்டு.

‘என் கணவரின் மதம், குடும்பம், பின்னணி எல்லாம் அறிந்தேதான் திருமணம் செய்துகொண்டேன்’ என்கிறார் அந்தப் பெண். அவரின் பெற்றோரும், ‘`எங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால், இதை எதிர்த்துப் புகார் தரவும் தயாராக இல்லை’’ என்று சொல்லிவிட்டனர். ‘பெற்றோர் புகார் தந்தால் மட்டுமே வழக்கு போட முடியும்’ என்கிறது போலீஸ். “நாங்கள் எப்படியும் அவர்களை சம்மதிக்க வைக்கிறோம். புகார் கொடுப்பார்கள். காத்திருங்கள்’’ என்கின்றன அந்த அமைப்புகள். உத்தரப்பிரதேச மாநிலம் கான்கேர்கேடே என்ற இடத்தில் நடந்த சம்பவம் இது. வழக்கு பதிவதற்கு முன்பே, அந்தப் பெண் இப்போது மீரட்டில் உள்ள அரசு மகளிர் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டார். கணவர் எந்த நேரத்திலும் சிறைக்கு அனுப்பப்படலாம்.

இருமனங்கள் இணைந்தாலும் திருமணங்கள் கூடாதா?

‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்னும் வாக்கியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இனி திருமணங்கள் அரசாலும் காவல்துறையாலும் நீதிமன்றத்தாலும் நிச்சயிக்கப்படவிருக்கின்றன என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். காரணம், உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள ‘சட்டவிரோத மதமாற்றத் தடுப்பு அவசரச் சட்டம், 2020.’

பெயரென்னவோ பொத்தாம்பொதுவாக இருந்தாலும், ‘திருமணங்கள் மூலம் நடக்கும் மதமாற்றங்களைத் தடுப்பதற்காகத்தான் இந்தச் சட்டம்’ என்று பா.ஜ.க-வினரே வெளிப்படையாகக் கூறுகிறார்கள். இந்தச் சட்டத்தின்படி கட்டாய மதமாற்றம் செய்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பெண்களை மதம் மாற்றித் திருமணம் செய்தால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இருமனங்கள் இணைந்தாலும் திருமணங்கள் கூடாதா?

‘மதம் மாறிய பிறகு திருமணம் செய்துகொள்ள விரும்பினால் இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டும்’ என்கிறது இந்தச் சட்டம். இந்தக் கட்டுரையை எழுதும்வரை இந்தச் சட்டத்தின்படி ஏழு பேர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பி-யைத் தொடர்ந்து ஹரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் என பா.ஜ.க ஆளும் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சட்டத்தைக் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. இத்தனைக்கும் உ.பி-யில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, இதற்கு எதிரான தொனியில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இருமனங்கள் இணைந்தாலும் திருமணங்கள் கூடாதா?

பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வாஜித் கான் சமீபத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘என்னுடன் பணியாற்றும் ரம்யாவும் நானும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவருகிறோம். எங்கள் திருமணத்தில் என் பெற்றோருக்கு சம்மதம். ரம்யாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. கடந்த வாரம் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரம்யா அரசு ம‌களிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். ரம்யாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என அவர் கோரியிருந்தார்.

இருமனங்கள் இணைந்தாலும் திருமணங்கள் கூடாதா?

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ‘ஆணோ, பெண்ணோ விருப்பப்படி திருமணம் செய்துகொள்வதற்கான உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறது. யாரைத் திருமணம் செய்துகொள்வது என்பது தனிநபரின் அடிப்படை உரிமை. சட்டப்படி திருமண வயதாகிவிட்டதால் முடிவெடுக்க ரம்யாவுக்கு முழு உரிமையுள்ளது. எனவே அவரை மகளிர் காப்பகத்திலிருந்து உடனடியாக‌ விடுவிக்க வேண்டும்’ என உத்தரவிட்ட‌னர்.

ஆனால், ‘எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும்’ என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ரூ.50,000 வழங்கும் அரசின் திட்டத்தை, இந்தச் சட்டத்தைக் காரணம் காட்டி நிறுத்திவைக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. சரி, எதற்காக இந்தச் சட்டங்கள்?

‘மதம் மாற்றும் நோக்கத்துடன் காதலும் திருமணங்களும் நடைபெறுவதால் இந்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதைத் தடுக்கவே இந்தச் சட்டம்’ என்கிறார்கள் பா.ஜ.க-வினர். இந்தச் சட்டத்தை அவர்கள் ‘லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்’ என்றே குறிப்பிடுகின்றனர். ‘லவ் ஜிகாத்’ என்ற குற்றச்சாட்டை இந்துத்துவ அமைப்புகள் பல ஆண்டுகளாகச் சொல்லிவந்தாலும் அதை நிரூபிப்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. ஹாதியா வழக்கு அதற்கொரு நல்ல உதாரணம்.

இருமனங்கள் இணைந்தாலும் திருமணங்கள் கூடாதா?

கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி அகிலா 2016 ஜனவரியில் வீட்டை விட்டு வெளியேறி, `தெர்பியதுல் இஸ்லாம் சபா’ என்ற இஸ்லாமியப் பாடசாலையில் சேர்ந்து படித்துவந்தார். மேலும், இஸ்லாமிய அமைப்பான பி.எப்.ஐ-யின் மகளிரணிச் செயலாளரான ஏ.எஸ்.சைனபா வீட்டில் தங்கினார். இந்தக் காலகட்டத்தில் அகிலா தனது பெயரை `ஹாதியா’ என்று மாற்றிக்கொண்டார். மகளைக் காணவில்லை என்று கேரள உயர் நீதிமன்றத்தில் அகிலாவின் தந்தை அசோகன் `ஆட்கொணர்வு மனு’ தாக்கல் செய்தார். ‘தன் மகளை பி.எப்.ஐ அமைப்பு கட்டாயப்படுத்தி மதம் மாற்றிவிட்டதாக’ தெரிவித்திருந்தார். ஆனால், நீதிமன்ற விசாரணையில் அகிலா தன் விருப்பத்தின்படியே மதம் மாறியது தெரிய வந்ததால் அசோகனின் மனு தள்ளுபடியானது.

ஆனாலும் அசோகன் விடவில்லை. 2016 ஆகஸ்டில், ‘தன் மகளை இஸ்லாமியர் ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்து வெளிநாட்டுக்கு அனுப்ப சதி நடப்பதாக’ மீண்டும் வழக்கு தொடுத்தார். ஹாதியா இந்தியாவை விட்டு வெளியேறாமல் கண்காணிக்க காவல்துறைக்கு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது கேரள உயர் நீதிமன்றம். இந்நிலையில் 2016 டிசம்பர் 19 அன்று ஹாதியா, ஷபின் ஜஹான் என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த ஷபின் ஜஹான், பி.எப்.ஐ-யின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்தவர். அசோகன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், 2017 மே மாதம் அந்தத் திருமணத்தை ரத்துசெய்து, ஹாதியாவைப் பெற்றோருடன் அனுப்பிவைக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஹாதியா
ஹாதியா

கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஷஃபின் ஜஹான். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ‘ஹாதியாவின் திருமணம் சட்டப்படி செல்லும். வயதுவந்த பெண் தன் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையுண்டு’ என்ற தீர்ப்பை 2018-ல் வழங்கியது.

ஹாதியா வழக்கு மட்டுமல்ல, ‘லவ் ஜிகாத்’ என்று சொல்லி கேரளாவில் புகாரளிக்கப்பட்ட 89 திருமணங்கள் விசாரிக்கப்பட்டன. அவற்றில் 78 வழக்குகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தள்ளுபடி செய்யப்பட்டன. 11 வழக்குகளை மட்டும் 2015-ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது தேசியப் புலனாய்வு முகமை. இந்த ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, “கேரளாவில் லவ் ஜிகாத் முறைப்படி எந்தத் திருமணமும் நடைபெறவில்லை. இப்போதைக்கு இரண்டு திருமணங்கள் மட்டும் தேசியப் புலனாய்வு முகமை விசாரணையில் உள்ளது. ‘லவ் ஜிகாத்’ என்ற வார்த்தை அரசியல் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வார்த்தை கிடையாது” என்று தெரிவித்திருக்கிறார். இவரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்தான். ‘லவ் ஜிகாத்தைத் தடுக்கவே சட்டங்கள்’ என்று மாநிலங்களில் சட்டம் கொண்டு வருபவர்களும் பா.ஜ.க-வினர்தான்.

அலகாபாத் உயர்நீதிமன்றம், ‘திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மதம் மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று ஒரு தீர்ப்பில் கூறியுள்ளதைத் தனக்குச் சாதகமாக எடுத்துக்காட்டுகிறார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். ஆனால் “இது நீதிபதியின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாமே தவிர சட்ட அடிப்படைகள் அற்றது” என்று சொல்லியுள்ள உத்தரப்பிரதேச சட்ட ஆணையத்தின் தலைவர் ஆதித்யநாத் மிட்டல், “உ.பி அரசு கொண்டுவந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டம், நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கும் பரப்புவதற்குமான உரிமையை அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு வழங்குகிறது. பா.ஜ.க. அரசு கொண்டுவரும் இந்தப் புதிய சட்டங்கள் அனைத்தும், அரசியல் சட்டத்தின் 25வது பிரிவுக்கும் திருமணம் செய்துகொள்ளும் அடிப்படை உரிமைக்கும் எதிரானவை. இவர்கள் மிகைப்படுத்துவதைப் போல் ‘மதமாற்றங்களாலும் இருமதத்தினருக்கிடையிலான திருமணங்களாலும் இந்து மதம் அழிகிறது. இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது’ என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. ‘15 முதல் 49 வயது வரையிலான பெண்கள் மதம் மீறி செய்துகொள்ளும் திருமணங்கள் வெறும் 2.21 சதவிகிதம் மட்டுமே’ என்கிறது தேசியப் பொருளாதார ஆய்வு கவுன்சில் ( National Council of Applied Economic Research - NCAER).

இந்த மதமாற்றத் தடுப்புச் சட்டத்தின்படி யாரை வேண்டுமானாலும் கைது செய்து பழிவாங்கும் அபாயமுண்டு என்பதற்கு சமீபத்திய உதாரணம் உத்தரப்பிரதேசம் குஷிநகரில் நடந்த சம்பவம்.

குஷிநகரில் திருமணம் முடிந்து ஒரு சிறிய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கே சென்ற காவல்துறையினர் மணமக்களைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்திருக்கிறார்கள். காவல்நிலையம் செல்வதற்கு முன்பு அவர்கள் இருவரும் சொன்ன எதையும் காவலர்கள் கேட்கத் தயாராக இல்லை. ஆனால் இறுதியில்தான் தெரிந்திருக்கிறது மணமகனின் பெயர் ஹைதர் அலி, மணமகளின் பெயர் ஷபீலா, இருவருமே முஸ்லீம் என்பது. தன்னைக் காவல்நிலையத்தில் பெல்ட்டால் அடித்து சித்திரவதை செய்ததாகவும் மணமகன் ஹைதர் அலி குற்றம் சாட்டியுள்ளார். உ.பி-யில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம் இன்னும் எத்தனை பழிவாங்கல்களையும் மனித உரிமைமீறல்களையும் நிகழ்த்தப்போகிறதோ?

‘இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டும்’ என்ற நிபந்தனை எந்தவகையிலும் சாத்தியமில்லை. காதலித்து பெற்றோர் அனுமதியில்லாமல் திருமணம் செய்துகொள்பவர்கள் எப்படி இரண்டு மாதங்களுக்கு முன்பே நீதிமன்றத்தில் அனுமதி பெற முடியும்? இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம். மதமாற்றம் கட்டாயமோ இல்லையோ, இந்தச் சட்டத்தின்மூலம் ஒருவர் தன் விருப்பத்துக்கு மாறாக அதே மதத்தில் நீடிப்பதுதான் கட்டாயமாக்கப்படுகிறது.

இரு மதத்தவருக்கு இடையிலான திருமணம் சட்டபூர்வமாகத் தடுக்கப்படுமானால், நாளை இப்படிப்பட்ட வேறு பல திருமணங்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தடுக்கப்படலாம். ‘ஜெர்மனி இளைஞரை மணந்த தமிழ்நாட்டுப் பெண்’ என்பது இப்போது நெகிழ்ச்சியான செய்தி. எதிர்காலத்தில் இது குற்றச்செய்தி ஆகலாம். இந்தச் சட்டங்கள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுடத்துக்கும் எதிரானவை’’ என்கிறார்கள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்.

தனிநபர் உரிமை, பன்மைத்துவம், ஜனநாயகம், சமத்துவம் ஆகிய விழுமியங்களில் நம்பிக்கையுள்ள எந்த தேசத்துக்கும் பொருந்தாத சட்டம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism