அலசல்
Published:Updated:

முழக்கத்தில் மட்டும் ‘தற்சார்பு’ - கைத்தறி நெசவாளர்களைக் கலங்கவிடலாமா?

கைத்தறி நெசவாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கைத்தறி நெசவாளர்கள்

இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக முக்கியத் தொழிலாக விளங்கும் கைத்தறித் தொழில், லட்சக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்துவருகிறது.

கைத்தறி மற்றும் கைவினைத் தொழில்களின் வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிவந்த வாரியங்களை மத்திய பா.ஜ.க அரசு ஒழித்துக்கட்டியிருக்கிறது. அரசின் இந்த திடீர் நடவடிக்கை, நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக முக்கியத் தொழிலாக விளங்கும் கைத்தறித் தொழில், லட்சக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்துவருகிறது. இந்தத் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, ‘அகில இந்திய கைத்தறி வாரியம்’ என்ற அமைப்பு மத்திய அரசால் 1994-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவராக மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், துணைத் தலைவராக மத்திய ஜவுளித்துறைச் செயலாளரும் இருந்து வந்தனர். நெசவாளர்களின் பிரதிநிதிகள் உட்பட கைத்தறி தொடர்புடைய பல தரப்பினரும் இந்த வாரியத்தின் உறுப்பினர்கள். கைத்தறிக் கொள்கைகள் தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்குவது, நெசவாளர்களின் பிரச்னைகளைக் கேட்டறிவது, அவற்றைத் தீர்ப்பது போன்ற பணிகள் வாரியம் மூலம் நடைபெற்றுவந்தன.

இ.முத்துக்குமார் - ஏ.ஆர்.மகாலட்சுமி
இ.முத்துக்குமார் - ஏ.ஆர்.மகாலட்சுமி

கைத்தறித் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக, `ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதி ‘தேசிய கைத்தறி தினம்’ கொண்டாடப்படும்’ என்று இரண்டாண்டுகளுக்கு முன்னர் மோடி அரசு அறிவித்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி ‘தேசிய கைத்தறி தினம்’ கொண்டாடப்பட்டது. அதையொட்டி, ‘‘நம் நாட்டின் பாரம் பர்யமான கைவினைத் தொழில்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். உள்நாட்டுத் தயாரிப்பு பொருள்களையே வாங்க வேண்டும்’’ என்ற கருத்துகளை #Vocal4Handmade என்ற ஹேஷ்டாக்குடன் பிரதமர் மோடி ட்வீட் செய்தார்.

ஒரு பக்கம் பிரதமர் கைத்தறிமீது அக்கறையுடன் ட்வீட் செய்கிறார். ஆனால், அதற்குச் சில நாள்களுக்கு முன்னர் ‘அகில இந்திய கைத்தறி வாரியம்’, ‘அகில இந்திய கைவினை வாரியம்’ ஆகிய இரண்டு அமைப்பு களுக்கும் மத்திய அரசு மூடுவிழா நடத்திவிட்டது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளரும், தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான இ.முத்துக்குமாரிடம் பேசினோம்.

‘‘நம் நாட்டில் 45 லட்சம் பேர் கைத்தறித் தொழிலில் ஈடுபட்டிருக்கி றார்கள். எங்கள் கணக்குப்படி, சுமார் இரண்டு கோடிப் பேர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து லட்சம் பேர் கைத்தறித்தொழிலில் இருக்கிறார்கள். அகில இந்திய கைத்தறி வாரியத்தைப் பொறுத்தவரை, எங்கள் குறைகளையும், கோரிக்கை களையும், ஆலோசனைகளையும் நேரடியாகச் சொல்வதற்கான ஓர் இடமாக இருந்தது. கைத்தறி தொடர்பான கொள்கை மற்றும் வளர்ச்சி சார்ந்த ஆலோசனையை இந்த வாரியம் அரசுக்கு அளித்துவந்தது. இதன் மூலமாக புதிய திட்டங்கள் வந்திருக்கின்றன. உள்ளூர்ச் சந்தைக்கு ஏராளமான நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த வாரியம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. நெசவாளர்களின் வேலைவாய்ப்பு, உற்பத்தி செய்யப்படும் துணியைச் சந்தையில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள், அதற்கான அரசின் உதவிகள் போன்ற நடவடிக்கைகளைப் படிப்படியாகக் கைகழுவினர். எனவே, `நெசவாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளைக்கொண்ட ஓர் அமைப்பாக அதை மாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்திவந்தோம். ஆனால், வாரியத்தையே இப்போது ஒழித்துக்கட்டிவிட்டார்கள்.

முழக்கத்தில் மட்டும் ‘தற்சார்பு’ - கைத்தறி நெசவாளர்களைக் கலங்கவிடலாமா?

இனிமேல் நெசவாளர்களுக்கான சலுகைகள், மானியங்கள் கிடைக்காது. வாரியம் என்கிற அமைப்பு சரியில்லையென்றால், அதைவிடச் சிறப்பான மாற்று அமைப்பு ஒன்றை அறிவித்திருக்க வேண்டும். அப்படி எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாகத் துணிகள் விற்பனையாகவில்லை. வருமான மில்லாமல் நெசவாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் யாரிடம் போய் நாங்கள் முறையிடுவது?’’ என்றார் வேதனையுடன்.

இது குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலட்சுமியிடம் பேசினோம். நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த அவர், ‘‘எந்தவோர் அமைப்பும் சரியில்லையென்றால், அதற்கு மாற்றாக அதைவிடச் சிறந்த ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில்தான் கைத்தறி வாரியத்தை மத்திய அரசு கலைத்துள்ளது. அதற்கு பதிலாகக் கூட்டமைப்பு (Consortium) ஒன்றுடன் வாரியத்தின் பணிகளை இணைத்துள்ளது. எனவே, நெசவாளர்களுக்கு இதுவரை கிடைத்துவந்த சலுகைகள் எதுவும் பாதிக்கப்படாது. வாரியத்துக்கு உண்டான அனைத்துக் கடமைகளும் பணிகளும் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நிறைவேற்றப்படும்’’ என்றார்.

‘தற்சார்பு’ என்ற பிரதமரின் முழக்கத்துக்கு என்ன பொருள் என்று புரியவில்லை!