Published:Updated:

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேஷ்டேக்

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்பட்டதும், பஞ்சாப் மாநிலத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன

ட்விட்டரில் கடந்த வாரத்தில் டிரெண்டான முக்கியமான ஹேஷ்டேக்குகள் என்னென்ன... ஏன்?

#15Minutes

பஞ்சாப்பில் விவசாயிகளின் சாலைமறியலால், பிரதமர் மோடி தனது காரில் 15 நிமிடங்கள் காத்திருந்தது இந்தியாவின் தலைப்புச் செய்தியானது. இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, `டிராஃபிக் காரணமாக தினமும் 15 நிமிடங்களுக்கு மேல் நானெல்லாம் சாலையில் காத்திருக்கிறேன்’ என்று கிண்டல் பதிவுகளும், `ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் வெயில், மழை பாராமல் சாலையில் காத்திருந்தார்கள்; சொகுசு காரில் 15 நிமிடங்கள் காத்திருந்துவிட்டு...’ என்று கோபமான பதிவுகளும் பகிரப்பட்டன.

#PaiseDoTicketLoCongressMoga

நடிகர் சோனு சூட்டின் தங்கை, பஞ்சாப் காங்கிரஸில் இணையப்போவதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, `தன் தங்கையை மோகா தொகுதியில் வெற்றிபெறவைக்கவே மக்களுக்கு உதவிகளைச் செய்திருக்கிறார் சோனு’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்த இந்த ஹேஷ்டேக் டிரெண்டானது.

##111CongressDubara

பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்று 111 நாள்கள் கடந்ததையொட்டி, ஜனவரி 9-ம் தேதியன்று இந்த ஹேஷ்டேக்கோடு ட்வீட் செய்திருந்தார் அவர். இந்த ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

#Ashes

இந்த ஆண்டுக்கான ‘ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் கோப்பை’யை ஆஸ்திரேலிய அணி தட்டிச் சென்றிருக்கிறது. இதையடுத்து, ஆஷஸ் தொடர்பான பல்வேறு ஹேஷ்டேக்குகள் உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்தன.

#Election2022

எதிர்வரும் ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது.

#ResumeGoaMining

கோவா மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சுரங்கத் தொழில், கடந்த 2018-ல் தடைசெய்யப்பட்டது. கோவா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் சுரங்கத் தொழிலைத் தொடங்க வேண்டுமென்ற கோரிக்கையோடு இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

#StopDefamingPunjab

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்பட்டதும், பஞ்சாப் மாநிலத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து, `பஞ்சாப் பாதுகாப்பான மாநிலம்தான்; இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்!’ என்று சொல்லி இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர் பஞ்சாபிகள்!