ட்விட்டரில் கடந்த வாரத்தில் டிரெண்டான முக்கியமான ஹேஷ்டேக்குகள் என்னென்ன... ஏன்?
#TNAssembly
மார்ச் 24-ம் தேதியோடு தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெற்றதை அடுத்து, தமிழக ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்த ஹேஷ்டேக் இடம்பெற்றது!
#StopArrestingEelamTamils
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடல்வழியாகத் தமிழ்நாட்டுக்குள் வந்த எட்டு ஈழத்தமிழர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, தமிழீழ ஆதரவாளர்கள் இந்த ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர்!
#BirbhumMassacre
மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்திலுள்ள ராம்புராட் பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாதுஷேக் என்பவர் கொலைசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில், போக்டுய் கிராமத்திலுள்ள சில வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதில், எட்டுப் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது!
#UmarKhalid
2020 டெல்லி கலவர வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவத் தலைவர் உமர் காலித்துக்கு, அந்த வழக்கில் பிணை வழங்க மறுத்து தீர்ப்பளித்தது டெல்லி மாவட்ட நீதிமன்றம். இதனால், அவர் பெயர்கொண்ட ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் இடம்பிடித்தது!
#Kejriwalkachallenge
பத்திரிகையாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``டெல்லி உள்ளாட்சித் தேர்தலைச் சரியான நேரத்துக்கு நடத்தாமல், வேண்டுமென்றே காலம் தாழ்த்திவருகிறது பா.ஜ.க. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க ஜெயித்துவிட்டால், ஆம் ஆத்மி கட்சி அரசியலைவிட்டு விலகத் தயார்’’ என்று சவால் விடுக்க, இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டானது!
#MSDhoni #EndOfAnERA #RavindraJadeja
மார்ச் 24 அன்று ``தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் கொடுத்துவிட்டார். இனி தோனி, அணியில் ஒரு வீரராக மட்டுமே களமிறங்குவார்’’ என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, இந்திய அளவில் இது தொடர்பான ஹேஷ்டேக்குகள்தான் முதல் எட்டு இடங்களைப் பிடித்ததிருந்தன!
#MadeleineAlbright
மார்ச் 23 அன்று, அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலாளரான மேடலின் ஆல்பிரைட் (84), புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அமெரிக்க மக்கள் அனைவரும் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்விட்டரில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்!