Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: `அதிமுக கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும்’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்துவதை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ-வான இன்பதுரை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சில உத்தரவுகளைப் பிறப்பித்து வழக்கைத் தள்ளிவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 13-ம் தேதி அறிவித்தது. அதை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்த இன்பதுரை
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்த இன்பதுரை

அதில், ``சட்டமன்றத் தேர்தலே மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவது அவசியமற்றது. இரு கட்டங்களாகத் தேர்தலை நடத்தினால் கள்ள ஓட்டுப் போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ``ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்கவும்,கொரோனா விதிகளை அமல்படுத்தவும் வலியுறுத்தியிருந்தார்.

தேர்தலில் வெளி மாநிலத் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும்.
விஜய் நாராயண், அ.தி.மு.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்

ஆனால், தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இந்தத் தேர்தலில் வெளி மாநிலத் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்கவும், மத்திய காவல் படையை பணியமர்த்தவும் கோரிய மனுவுக்கும் எந்த பதிலும் இல்லை. தேர்தலை முழுமையாக சிசிடிவி பதிவு செய்யக் கோரியதற்கும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை” என வாதிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், அரசு வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜராகி, ``ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் 14,900 வாக்குச்சாவடிகளுக்கும் போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனால் தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ``தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவது அவசியம். மாநிலத்தின் பிரதான கட்சி என்ற முறையில் அ.தி.மு.க சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மனுதாரருக்கு செப்டம்பர் 29-ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும்” என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு