Published:Updated:

`மருந்து வாங்க நான்தான் அனுப்பினேன்!’- உ.பியில் கதறிய ஆட்டோ ஓட்டுநரின் மனைவி

உத்தரப்பிரதேசத்தில் 20 மாவட்டங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

உ.பி மருத்துவமனை
உ.பி மருத்துவமனை

`வீட்டுல மளிகை, மருந்துப் பொருள்கள் இல்லைன்னு நான்தான் அனுப்பினேன்... ஆனா இப்போ...?’ - லக்னோ கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முகமது வகீலின் மனைவி கண்ணீர் இது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டம் வலுக்கிறது. வியாழக்கிழமை நடந்த கலவரத்தின்போது முகமது வகீல் என்பவர் கொல்லப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரின் மீது கற்களைக் கொண்டு தாக்கியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போலீஸார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். உத்தரப்பிரதேசத்தில் 20 மாவட்டங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

போராட்டம்
போராட்டம்

போலீஸ் தரப்போ போராட்டத்தின்போது நாங்கள் ஒரு குண்டு கூட பயன்படுத்தவில்லை எனக் கூறுகின்றனர். ஆனால், துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. டி.ஜி.பி சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது கூட, ``போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களைக் கொண்டு தாக்கியபோதும் எங்கள் துப்பாக்கிகளில் இருந்து ஒரு தோட்டா கூட வெளியேறவில்லை. மரணமடைந்தவர்கள், காயமடைந்தவர்கள் போலீஸார் உட்பட நிறைய பேருக்கு குண்டு காயங்கள் இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்கப்படும்” என்றார்.

`எதுவும் பேச விரும்பவில்லை, கையை இழந்துவிட்டேன்!' - போலீஸ் தாக்குதலால் அலறிய உ.பி மாணவர்கள்

ஆட்டோ ஓட்டுநரான முகமது வகீல் 7 மாத கர்ப்பிணி மனைவியையும் தன் குடும்பத்தையும் பரிதவிக்கவிட்டுச் சென்றுள்ளார். முகமது வகிலீன் தாய் நக்மா பேசும்போது, ``ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என இங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர். வீட்டில் மளிகைப் பொருள்கள், மருந்துகள் எல்லாம் குறைவாகத்தான் இருந்தன. ஊரடங்கு உத்தரவு போட்டால் வெளியில் செல்ல முடியாது. எனவேதான் மருந்து, மளிகைச் சாமான்கள் வாங்குவதற்காக என் மகன் வெளியில் சென்றான். போராட்டத்துக்கு எல்லாம் அவன் செல்லவில்லை. அவன்தான் எங்கள் வீட்டின் மூத்த பிள்ளை. அவனுக்கு நான்கு சகோதரர்கள் மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள்” என்றார்.

போராட்டம்
போராட்டம்

அவரின் சகோதரர் பேசுகையில், ``என் அண்ணன் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக 5 மணிக்கு தகவல் வந்தது. யார் சுட்டார்கள் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தபோது அவர் இறந்த செய்திதான் எங்களுக்குக் கிடைத்தது. வயிற்றில் குண்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் யார் அனுமதித்தார்கள் எனத் தெரியவில்லை. சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்'' என வலியுடன் கூறினார்.