Published:Updated:

`நிறைய குப்பை விழுந்தது, அதான் மரங்களை வெட்டினேன்!’ - தலைமை ஆசிரியரின் செயலால் கொதித்த பொதுமக்கள்

இன்றைய காலகட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை காட்டிலும், வளர்ந்த மரங்களை பாதுகாக்கவே பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.

பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரங்கள்
பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரங்கள்

ஈரோடு சூரம் பட்டி வலசு பகுதியில் இருக்கிறது நஞ்சப்பகவுண்டன் வலசு அரசு உயர்நிலைப்பள்ளி. காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன்பாகவே, பள்ளியைச் சுத்தம் செய்து விடுவோம் எனக் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆட்களை வைத்து பள்ளியைச் சுத்தம் செய்திருக்கிறார். அப்போது, பள்ளியைச் சுத்தம் செய்த ஆட்கள் பள்ளி வளாகத்தில் இருந்த 4 மரங்களை அடியோடு வெட்டிச் சாய்த்திருக்கின்றனர்.

வெட்டப்பட்ட மரங்கள்
வெட்டப்பட்ட மரங்கள்

இதைப் பார்த்து அருகிலிருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு தலைமையாசிரியரிடம் கேட்க, ‘மரத்துல இருந்து நிறைய குப்பை விழுந்தது. அதனால நான் தான் அந்த மரங்களை வெட்டச் சொன்னேன்’ என கேஷூவலாக பதில் சொல்லியிருக்கிறார். ‘குப்பை விழுந்தா கிளையை வெட்ட வேண்டியது தானே. எதுக்கு மரத்தை வெட்டுனீங்க’ எனக் கொதித்துப் போன பொதுமக்கள், தலைமை ஆசிரியரை கடுமையாக வசைபாடியதோடு, அப்போதே வருவாய்க் கோட்ட அலுவலகத்திற்குப் புகார் கொடுத்திருக்கின்றனர்.

தலைமை ஆசிரியரின் இந்தச் செயலை சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கண்டிக்க பெரும் வைரலானது. இதற்கிடையே, ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் என்பவர், `பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டிய தலைமை ஆசிரியர் தங்கவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மரங்கள் வெட்டப்பட்ட பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் கையாலேயே நிறைய மரங்களை நட வைக்க, உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென’ ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்திருக்கிறார்.

வெட்டப்பட்ட மரத்தின் கம்புகள்
வெட்டப்பட்ட மரத்தின் கம்புகள்

சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம். ``இன்றைய காலகட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதைக் காட்டிலும், வளர்ந்த மரங்களைப் பாதுகாக்கவே பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. மரம் வளர்ப்பு மற்றும் சூழல் அவசியத்தை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய இடத்தில் இருக்கும் தலைமை ஆசிரியரே இப்படி மரத்தை வெட்டி எறியலாமா? எனவே, யாரிடமும் அனுமதி பெறாமல் அரசுப்பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டிய தலைமை ஆசிரியர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மரங்களை வெட்டிய பள்ளி தலைமை ஆசிரியர் கையாலேயே, அந்தப் பள்ளி வளாகத்தினுள் குறைந்தபட்சம் 50 மரக்கன்றுகளையாவது நட வேண்டும் என்று உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டுமென, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் தங்கவேலிடம் பேசினோம். ``பள்ளி முகப்பில் உள்ள நுழைவு வாயில் மரங்களுடைய அழுத்தத்தினால் சேதமானது. மரங்களின் வேர் வளர்ச்சியடைந்ததால் தண்ணீர்த் தொட்டிகள் விரிசலடைந்து, தண்ணீர் வெளியாகும் சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், மரங்களின் வழியாகச் செல்லும் மின் கம்பிகள் காற்றினால் கீழே அறுந்து விழுந்துவிடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தின. மேலும், கழிப்பறையில் மரங்களின் இலைகள் விழுந்து கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசியது. இப்படியான பல காரணங்களால்தான் பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டினோம். இல்லைன்னா நாங்க எதுக்கு சார் வெட்டப்போறோம்” என்றார்.