Published:Updated:

அறிகுறியற்றவர்களுக்கே அனுமதி, சிலைகளை தொடக்கூடாது! -`வழிபாட்டு தலம் டு மால்’ அரசின் புதிய வழிமுறைகள்

மால்
மால்

பணியிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் மற்றும் மால்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை நேற்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் லாக் டெளன் கட்டுப்பாடுகள் தொடர்கிறது. அதே வேளையில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் கூடுதல் தளர்வுகள் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

மால்
மால்
Representational Image

அன்லாக் 1 என்னும் பெயரில் மத்திய அரசு பல தளர்வுகளை வழங்கியது. மேலும் வரும் 8-ம் தேதி முதல் மால்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள் முதலியவை திறக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பணியிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் மற்றும் மால்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை நேற்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

மால்கள் மற்றும் உணவகங்கள்!

கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இருக்கும் மால்களுக்கு செல்லும் பொதுமக்கள், அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சானிடைஸர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் அனைத்து நுழைவு வாயில்களிலும் வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருத்தல் நலம்.

கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். பார்க்கிங் உள்ளிட்ட பகுதிகளில் தனிமனித விலகலைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மால்களில் உள்ள கடைகளுக்கு பொருள்களை கொண்டு வருபவர்களுக்கு தனி நுழைவு, வெளியேறும் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தினால், அதன் வெப்பநிலையை 24-30 டிகிரிக்குள் வைக்க வேண்டும். மால்களில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் முறையாக கிருமி நாசனி தெளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உணவகங்களில் தனிமனித விலகலைக் கடைப்பிடிக்கும் பொருட்டு குறைந்த அளவில் பணியாளர்கள் பயன்படுத்த வேண்டும். முடிந்த வரை பார்சல் கொடுப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். கடை வாயிலில் தெர்மல் ஸ்கேனிங் மூலம் பரிசோதனைகள் நடத்த வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை மருத்துவப் பரிசோதனை செய்ய அறிவுறுத்த வேண்டும். அறிகுறிகள் இருப்பவர்களைக் கட்டாயம் உள்ளே அனுமதிக்கக் கூடாது.

டோர் டெலிவரியை அதிகப்படுத்துங்கள். ஒவ்வொருமுறையும் டெலிவரி செய்பவரை அனுப்பும் முன் அவரை தெர்மல் ஸ்கேனிங் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். வீட்டில் டெலிவரி செய்பவர்கள், கைகளில் பார்சலை தராமல் வாசல் அருகே வைக்க வேண்டும்.

6 அடி தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஹோட்டல்களில் இருக்கைகள் அதற்கு தகுந்தாற்போன்று ஏற்படுத்த வேண்டும். பார்க்கிங் உள்ளிட்ட பிற இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை வழங்கியுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்!

65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமனித விலகலைக் கடைப்பிடிக்கும் பொருட்டு வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்கள் 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

அனைத்து ஆன்மிக தல நுழைவு வாயில்களில் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். சானிடைஸர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அன்னதானம் வழங்கும்போது தனிமனித இடைவெளி விட்டு வழங்க வேண்டும். காலணிகளை அவரவர் வாகனத்திலேயே வைத்து விட்டு வர வேண்டும்.

தனிமனித விலகலைக் கடைப்பிடித்து வரிசையை ஒழுங்குபடுத்த 6 அடி இடைவெளியில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் சிலைகளை தொடக் கூடாது. பிரசாத விநியோகம் அல்லது புனித நீரைத் தெளித்தல் போன்ற விஷயங்கள் மத இடத்திற்குள் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு