Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 25

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 25

Published:Updated:
இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

முக்கோணக் காதல் கதை நமக்குப் பரிச்சயமானது. காதலின் முக்கோணக் கதை தெரியுமா? ரொம்ப முக்கியமான கதை இது. இளசுகள் மட்டுமல்ல, நாற்பதுகளும் இந்தக் காதல் விஞ்ஞானத்தைப் புரிந்துவைத்துக் கொள்வது, சுகர் வராமல், பிபி வராமல் இருக்கவும் உதவும் என்கிறார்கள் உளவியல் விஞ்ஞானிகள். எல்லா வாழ்வியல் நோய்களின் தடுப்பிற்கும், பரபரப்பில்லாத மனம் அவசியம். பரபரப்பில்லாத மனதிற்கு, எப்போதும் துருப்பிடிக்காத காதல் அவசியம். துருப்பிடிக்காத காதல் குறித்த, ராபர்ட் ஸ்டென்பெர்க் எனும் மூத்த உளவியல் பேராசிரியரின் காதல் முக்கோணக் கருதுகோள்தான், இன்றைய உளவியலும் நரம்பியலும் ஏற்றுக்கொண்டு இயங்கும் முக்கிய அறிவியல். இவர் சொல்லும் முக்கோணத்தின் மூன்று கோணங்கள்... நெருக்கம் (Intimacy), ஈர்ப்பு (Passion) மற்றும் அர்ப்பணிப்பு (Commitment).

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இன்னா நாற்பது இனியவை நாற்பது

யாரிடமும் உணராத ஒரு நெருக்கத்தை ஒருவரிடம் உணர்வதுதான், மையலை மையம் கொள்ள வைக்கும் மிக முக்கியப் புள்ளி. காதல் வாழ்வில் எல்லா வயதிலும் இது நிச்சயம் இருக்க வேண்டிய உணர்வு. இந்த நெருக்க உணர்வு, பரிச்சயமே இல்லாத, பழகியே பார்க்காத பக்கத்து சீட் பெண்/ஆண் மீது வருவதை, உளவியலாளர்கள் ‘இனக்கவர்ச்சி’ (Infatuation) என்கிறார்கள். அது பதின்பருவத்தில், டீன் ஏஜில் வரும் விஷயம் மட்டுமல்ல, நாற்பதிலும் வரும். ஆனால், நான்கைந்து நிமிடத்திலோ நான்கைந்து நாள்களிலோ காணாமல்போய்விடும். அதற்குப் பிறகும் தொடர்ந்தால், அது வியாதி.

பொதுவாக, நெருக்க உணர்வு பணிச்சுமையில், பழகிய சுமையில் தொலைந்துபோவதும் நசுங்கிப்போவதும், நாற்பதில் காதல் தொலைந்துபோவதற்கான முதல் காரணம். ‘பணிச்சுமை புரிகிறது. அதென்ன பழகிய சுமை’ என்கிறீர்களா? `வாங்க பழகலாம்’ என்பதான, திருமணம் அல்லது காதல் வாழ்வின் முதல் அத்தியாயத்தில் இருக்கிற ஈர்ப்பும் கவர்ச்சியும், சில வருடங்களில் காணாமல்போய்விடும். பிறகு, ‘ம்ம்... இம்புட்டுத்தானாக்கும்...’ என்கிற நிலையில் கொண்டுவந்து நிறுத்துவதுதான், ‘பழகிய சுமை’யின் இலக்கணம். ‘எதைச் சொன்னால், இவருக்கு அழகிய முகம்போய், வில்லன் மூஞ்சியாக மாறும்?’, ‘எதைப் பேசும்போது பாம்புக்காதை வைத்திருக்கும் இவள் கேட்காததுபோல் நகர்வாள்?’, ‘செலக்டிவ் அம்னீசியா எப்போது வரும்?’ என்பவையெல்லாம் பட்டவர்த்தனமாகப் புரிந்து, இருவருக்கிடை யிலான விகாரங்கள், முரண்கள் எல்லாம் முழுமையாய் அறிந்த பின்னர், இந்த ‘பழகிய சுமை’ நெருக்கத்தை நசுக்க ஆரம்பிக்கும்.

நெருக்க உணர்வு குறைந்திருப்பதை எப்படி உணர்வது? இணையுடன் முழுமையாக, பாதுகாப்பாக உணர்ந்த இடத்திலிருந்து விலகும் தருணத்தில்தான் நெருக்கம் குறையத் தொடங்குகிறது. ‘இவனிடம் இதைப் பகிரத் தேவையில்லை’, ‘இவகிட்ட இதைச் சொல்லணுமாக்கும்?’ என்கிற விலகல் உங்களுக்குள் ஏற்பட்டால், நெருக்கம் குறைகிறது எனப் பொருள். திரைப்படத்தில் ரசித்த காட்சியைப் பகிர்வதிலிருந்து, அவசியமில்லாமல் அலுவலகத்தில் அவமானப்பட்டு, அங்கு பகிரமுடியாத வலியை அவள் கரம் பற்றிக் கண்களில் கொட்டுவதுவரை... இவையெல்லாம் நெருக்கத்தின் அடையாளங்கள். ரசித்தவற்றையும், ரகசியங்களையும், குசும்புகளையும், இணை ரசிப்பார் என்பதற்காகச் சோடனையான அழகிய பொய்களையும் ஒளிவுமறைவின்றிச் சொல்லும் இடங்கள்தாம் நெருக்கம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

வழக்கமான நெரிசலான பாதையில் எப்போதும்போல்தான் வண்டி ஓட்டி வந்திருப்போம். ஆனால், அதைச் சற்று மிகைப்படுத்தி, கண்களை விரித்து, ‘தெரியுமா உனக்கு? இன்னைக்கு ஜஸ்ட் எஸ்கேப். பார்க் ரோட்ல நான் லெஃப்ட்ல ஒடிக்கும்போது, அப்படியே 100 கி.மீ வேகத்துல வந்த அந்த டெம்போ ட்ராவலர் வண்டி ஒரு மி.மீ இடைவெளியில் போனான். இல்லைன்னு வையி...’ எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘ஏம்ப்பா... நீங்க கொஞ்சம் ஓரமா போயிருக்கலாமில்ல... பார்த்துப்பா...’ என முணுக்கென மூக்கு உடைந்து குரலில் கொஞ்சூண்டு ஈரம் ஒட்டின மாதிரி இருக்கும். இதுபோன்ற உரையாடல் இருந்தவரை அந்த நெருக்கம் இருந்தது.

இந்த சீனெல்லாம் பெரும்பாலும் நாற்பதுகளில் நடப்பதே இல்லை. மாறாக, மத்தியானச் சாப்பாட்டு வேளையில், பீன்ஸ் பொரியலைச் சுவைக்கும் இடைவெளியில், ‘ஒரே டென்ஷன்பா வீட்டுல. இருபத்தஞ்சு வருஷமா பைக் ஓட்றாருன்னு பேரு. ஆனா, நேத்துகூட ரோட்டுல விழுந்து வாரி எழுந்து வந்திருக்காரு. பைக்குக்கு மூவாயிரம் தண்டம். இதுல கிறுகிறுன்னு வருதாம். ஸ்கேன் எடுக்கணும்னு ஆபீஸுக்கு லீவு போட்டாச்சு. சரியான பயந்தாங்கொள்ளிப்பா. இன்னும் அங்க ஆஸ்பத்திரியில எவ்வளவு பிடுங்கப் போறாங்களோ?’ என்ற உரையாடல் நடந்தால், நெருக்க உணர்வுக்கு நெருப்பு வெச்சாச்சு என்று பொருள்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

‘எனக்கான ஸ்பேஸ் இல்ல’ - இது நகர்ப்புற நாற்பதுகளின் உரையாடலில் அதிகம் கேட்கும் வரி. அது என்ன Space? ‘மூச்சுமுட்ட வைக்கும் நெருக்கம்கூட வலிதான். கொஞ்சம் ஸ்பேஸ் தம்பதியிடையே நிச்சயம் வேணும்தான்’ என்று சொல்லும் உளவியலாளரும் உண்டு. `பூமிக்கு ஒரு வெளி, நிலவுக்கு ஒரு வெளி, ஒவ்வொரு கோளுக்கும் ஒரு வெளி என இருக்கும்போதுதான் நிலவும் சரி, கோளும் சரி அதனதன் ஈர்ப்பு விசையோடு அதனதன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றும். ஒரே ஈர்ப்பாய் இருந்தால் மோதிச் சிதறிவிடும்’ என்கிற இயற்பியல் விதி மாதிரி, ஒரேயடியான நெருக்கமும் சில நேரத்தில் மோதி வெடிக்கும். அதனால் கொஞ்சம் ஸ்பேஸ் அவசியம்தான் என்கின்றன உளவியல் ஆய்வுகள்.

முந்தைய பாராக்களில் சொன்ன மாதிரி, நெருக்கத்தைக் கட்டமைக்கும் புனைவும், ஈர்ப்பும், ஈரமொழியும் கால ஓட்டத்தில் வறண்டு போகும்போது, தம்பதி மோதி முட்டிக்கொள்ளவோ, உடையவோ, சிதறவோ, விரிசலடையவோ இல்லாமலிருக்க, ஸ்பேஸ் இருவருக்கும் அவசியம். ஆனால், அந்த ஸ்பேஸின் அளவும் அழகும் ரொம்ப முக்கியம். எப்படி? அவ்வப்போது, பள்ளிக்கால நட்போடு வெடிச்சிரிப்பாய்ச் சிரித்து மகிழும் தருணங்களும் அவற்றுக்கான பயணங்களும் வேண்டும். இது இருபாலருக்கும் பொருந்தும். நாற்பதின் ஆண்களில் சிலர் இப்படிக் கிளம்புகிற மாதிரி, அன்றைய பெண்களுக்குத் திண்ணை, வாசல்படி, குளத்தங்கரை, தண்ணீர்த்தொட்டி, கோயில் பிராகாரம் எனப் பல இடங்கள் இருந்தன. இன்று நகர்ப்புறங்களில் நெரிசலான பணிச்சுமை மிகுந்த வாழ்வில், பெண்களுக்கு அவை இல்லை. போதாக்குறைக்கு பொதுவாகவே திருமணத்துக்குப் பின், அதுவரை பழகிய அத்தனை நட்பையும் தொலைத்துவிடும் நிலையும் இன்றுவரை தொடர்கிறது பெண்களுக்கு. இது பெண்களுக்கான ஸ்பேஸ் குறைவதற்கான மிக முக்கிய காரணம். பெண்கள் தங்களுக்கான வெளியை நிச்சயமாகத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ‘புருசனுங்களை எல்லாம் விட்டுவிட்டு, ஒண்ணா ஒரு டூர் போயிட்டு வருவோம். அட்லீஸ்ட், ஒண்ணா சேர்ந்து ஹோட்டலுக்குப் போய் ஒருவேளை சாப்பிட்டாச்சும் வருவோம்டி’ என்று சொல்லும் தோழியின் பேச்சைப் புறந்தள்ளாமல் போய்வாருங்கள். காதல் கொஞ்சம் கூடுதலாய்க் கொப்பளிக்கும். ‘எக்கா, மத்தியான ஆட்டத்துக்கு சிவாஜி படம் போய் வந்துருவோமா? அவுக வர மணி 7 ஆகும்’ என்பது அந்தக்கால ஸ்பேஸ். நீங்கள் ஏன் அதை விடவேண்டும்?

தம்பதிக்கு இடையிலான இந்தக் குட்டி ஸ்பேஸ் கூடுதல் அந்நியோன்யத்தையும் நெருக்கத்தையும் உருவாக்க வேண்டும். மாறாக விலகலை ஏற்படுத்தும் வகையில் அமைந்தால், அந்த வெளியில் கோள் தொலைந்துபோகவோ, சுற்றுவட்டப்பாதையை விட்டு விலகிப்போகவோ, வேறு கோளில் மோதவோ நேரலாம். ஒரு சாட்டிலைட் வந்து அந்த ஸ்பேஸுக்குள் நுழையவும் சாத்தியமுண்டு. ஸ்பேஸ் அவசியமானதுதான். அந்த வெளியிலும் ஈர்ப்பை விட்டு விலகாத, நெருக்கத்தைத் தொலைக்காத, வெளிவட்டப்பாதையில் கொஞ்சம் சார்ஜ் ஏற்றிக்கொண்டு திரும்பி வரக்கூடிய கோள்களாகவும் ஸ்பேஸாகவும் இருப்பது மிக அவசியம்.

காதல் முக்கோணத்தின் இரண்டாவது கோணம் Passion. ராபர்ட் ஸ்டென்பெர்க் சொன்ன Passion என்கிற வார்த்தைக்கு இணைத் தமிழ்ச் சொற்களாக, ஒருவித வேட்கை அல்லது ஈர்ப்பைச் சொல்லலாம். நாற்பதுகள் தொலைப்பது இவ்வித ஈர்ப்பைத்தான். அழகிய உடை அணிவதிலிருந்து, அழகிய புன்னகையை முகத்தில் எப்போதும் ஒட்டிவைப்பதுவரை பல செய்கைகள் இந்த வேட்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களின் காம்போ மாதிரி, மலர்களுக்குள் தெறித்து நிற்கும் பிக்காஸோ மாதிரி, ஆணும் பெண்ணும் காலத்திற்கேற்ற வசீகரங்களைத் தங்களுக்குள் நிரப்பிக்கொள்ளத்தான் வேண்டும். அதுமட்டுமே இருவரிடமும் வேட்கையை எப்போதும் ஒட்டிவைத்திருக்கும். மூன்று நாள்கள் சவரம் செய்யாத தாடியோடு வந்த நண்பர் ஒருவரிடம், ‘என்னாச்சு?’ எனக் கேட்டேன். ‘இது salt and pepper ஸ்டைல்’ எனத் தன் சோம்பேறித்தனத்துக்கு முலாம் பூசினார். பிதுங்கி நிற்கும் தொப்பை, வழுக்கையுடன் அந்த மூன்று நாள் சவரம் செய்யாத தாடியையும் சேர்த்துப்பார்த்தால், பல மனைவிகளுக்கு ‘சால்ட் அண்ட் பெப்பர் `தல’ ஞாபகம் வராது. ரயில் நிலையத்தில் பார்த்த சில `தறுதலை’ங்க ஞாபகம் வரலாம்.

வேட்கைக்கு வசீகரம் அவசியம் பாஸ்!

வெளியில் செல்லும்போது வசீகர ஆடை அலங்காரம் செய்யும் நம்மில் பலர், வீட்டில் திருத்தமாய் இருப்பதே இல்லை. அஞ்சு நாள் அழுக்குக் கைலியுடனும், முதுகில் ஏகே 47 வைத்துச் சுட்ட மாதிரி பல ஓட்டைகள் தெரியும் பனியனுடனும் திரியும் நாற்பதினர் நிறைய பேர் உண்டு. ஆள்பாதி ஆடை பாதி என்ற எண்ணம் உள்ள தமிழ்ச் சமூகத்திலிருந்து வந்தவர்கள் நாம். ‘கல்யாணத்துக்கு அப்புறம் வெயிட் போட்டிருச்சு. எங்கப்பா வீட்ல இருந்தவரை நல்லாத்தான் இருந்தேன். இதுக்கெல்லாம் இவுகளும் இவுக வீட்டுக்காரங்களும்தான் காரணம்’ எனச் சொல்லி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் சில பெண்கள்மீது அவர்களின் கணவருக்கு ஈர்ப்பு குறைவது இயல்பே. ஜிம்மோ, ஸும்பாவோ, பூங்கா பிராகாரமோ... ஏதோ ஓர் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும். திருத்தமாக ஆடை அணிவதும், புன்னகையுடன் கூடிய முகமொழியும், பொலிவேற்றும் உடல் மொழியும் ஈர்ப்பை எப்போதும் இயல்பாய் வைத்திருக்க உதவும். பகட்டாய் இருக்க வேண்டும் என அவசியமில்லை. பொலிவாய் இருக்க வேண்டும். பகட்டுக்குத்தான் பொருளும் நகையும். பொலிவிற்கு மெனக்கெடலும் புன்னகையும் மட்டும் போதும்.

நெருக்கத்தையும் ஈர்ப்பையும் தொலைக்கும்வரை இந்த வெத்துக் காதலின் வலி பலருக்குப் புரிவதில்லை. ‘வேணும்னா சார் தொலைக்கிறோம்? சமூகப் பொருளாதார நெருக்கடி புரியாதா, இல்ல தெரியாதா?

மூன்றாவது காதல் கோணம், அர்ப்பணிப்பு. ஸ்டென்பெர்க் இதை Commitment என்கிறார். நம் இந்தியத் திருமணங்கள் தோற்றுப்போகாமல் இருப்பதற்கு இந்த கமிட்மென்ட்தான் மிக முக்கிய காரணம். சட்டபூர்வமாகவோ, மத நம்பிக்கையின் அடிப்படையிலோ ஏற்பட்டுள்ள இந்த பந்தத்தைத் தொலைத்துவிடக்கூடாது என, சில நேரத்தில் பல அழுத்தங்களையும் வலிகளையும் விழுங்கிக்கொண்டு வாழ்வைச் செலுத்தும் தம்பதிகள் பலர். தங்கள் பிள்ளைகளுக்காக, அவர்கள் நல்வாழ்விற்காக, அவர்களுக்குப் பின்னாளில் அவமானம் வந்துவிடக்கூடாது என்பதற்காகப் பெற்றோர்கள் பலர் ஒட்டி நிற்பது இந்தப் பிணைப்பினால்தான்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

பிற வளர்ந்த நாடுகளில் முதலில் Intimacy, பின் Passion அப்புறமாய் Commitment என்கிற படிநிலைதான் நிலவுகிறது. 3, 4 டேட்டிங் முடிந்த பின் கொஞ்சம் நெருக்கம் அதிகம் இருப்பதை உணர்ந்து, அப்புறமாய் இருவரும் ஈர்ப்பையும் வேட்கையையும் காட்டி, அதன்பின் கமிட் ஆவது அந்த ஊர்க் கலாசாரம். இங்கே அப்படியே உல்ட்டா. ‘9ல 7 பொருத்தம் இருக்கு’ என்றோ, ‘அவுகளுக்குத் தொண்ணூறாயிரம் சம்பளம்’ என்றோ, ‘பிக்கல் பிடுங்கல் கிடையாது (அது என்ன பிக்கல் பிடுங்கல் என ஊருக்கே தெரியும். அதற்கு ஒரு பத்தியை வேஸ்ட் பண்ண வேணாம்)’ என்றோ, முன்பின் தெரியாதவர்களை கமிட் பண்ண வைத்து, அப்புறமாய் ஈர்ப்பையும் நெருக்கத்தையும் உருவாக்குவது நம் நாட்டு வழக்கம். 99% இந்தியத் திருமணங்கள் இப்படித்தான் நடக்கின்றன. உண்மையில் இந்த வகை கமிட்மென்ட், நீண்ட காலம் மிகச் சிறப்பாக இருப்பதாக வெளிநாட்டு உளவியலாளர்கள் வியக்கின்றனர். தற்போதைய நிலையைக் கொஞ்சம் உற்றுப்பார்த்து ஆராய்ந்தால் அப்படி வியக்க மாட்டார்கள். ஒட்டியுள்ளனர்; மனம் பொருந்தி மகிழ்ந்து உள்ளனரா? சோழி உருட்டித்தான் பார்க்க வேண்டும்.

நாற்பதில் நெருக்கமும் இல்லாமல், ஈர்ப்பும் இல்லாமல் வெற்றுப் பிணைப்பில் இருப்பதை ஆங்கிலத்தில் ‘வெற்றுக்காதல் (Empty love)’ எனச் சொல்கிறார்கள். முக்கோணக் காதல் கதையின் முக்கியமான விஷயம், இந்த Empty love தான். அவசியமில்லாத எரிச்சலும் பரபரப்பும் அதிகம் இந்த வயதில் நுழைவதற்கு இந்த வெற்றுக்காதல் மன நிலை மிக முக்கியமானது. நெருக்கத்தையும் ஈர்ப்பையும் தொலைக்கும்வரை இந்த வெற்றுக் காதலின் வலி பலருக்குப் புரிவதில்லை. ‘வேணும்னா சார் தொலைக்கிறோம்? சமூகப் பொருளாதார நெருக்கடி புரியாதா, இல்ல தெரியாதா?’ எனச் சண்டை கட்ட வேண்டியதில்லை.

நாற்பது, ஐம்பதில் இருப்போர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய சராசரி வாழ்நாள் புள்ளிவிவரத்தின்படி, இன்னும் 18-20 வருடங்கள்தான் நம் வாழ்வு. எறும்பாய், ஈயாய், பன்றியாய், பட்டாம்பூச்சியாய், மிளகாய் வற்றலாய், மெக்னோலியா மலராய்ப் பிறக்காமல் மனிதனாய்ப் பிறந்தது இயற்கை நமக்குத் தந்த தேர்வு. அவையெல்லாம் தாலி கட்டாமல், பென்ஷன் பற்றி யோசிக்காமல், பேரப்பிள்ளைங்க நீட் எக்ஸாம் பற்றிப் பேசாமல், ஒன்றோடொன்று நெருக்கமாய், ஒன்றோடொன்று வேட்கையுடன் முழுக்காதலோடு வாழ்கின்றன. நமக்கு மட்டும் ஏன் இந்த வெற்றுக்காதல்?

- இனியவை தொடரும்...