Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 26

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 26

Published:Updated:
இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

‘அதெல்லாம் ஒண்ணுமிருக்காது’ என்கிற ஆதரவான சொல் மிக அவசியமானது, நம்மை ஆற்றுப்படுத்துவது. என்றாலும், அந்தச் சொல் நம் படபடப்பைச் சற்றுக் குறைத்து நிதானப்படுத்தி யோசிக்க வைக்க வேண்டுமே தவிர, அலட்சிய மனோபாவத்தைக் கொடுத்துவிடக் கூடாது. நாற்பதுகளில் உடல்நலம் சார்ந்த அலட்சியங்கள் சிலநேரங்களில் குப்புறத்தள்ளிவிடும் ஆபத்துகளைக் கொஞ்சம் அதிகமாகவே கொண்டுள்ளன. லாடம் கட்டிய குதிரையாக ஓடிக்கொண்டிருக்கும் நாற்பதுகளில், சில நேரங்களில் தன்னுள் நடக்கும் மாற்றங்களைக்கூட உணராமல், அப்படியே அறிந்தாலும் அதை அலட்சியப்படுத்தி ஓடுகையில், சில நோய்கள் பின்னஞ்சட்டையைப் பிடித்து நிறுத்துவதுபோல வந்து சேரும். ஆம்! கணிசமான அளவில் பெருஞ்சவாலாக வரும் புற்றுநோய்க் கூட்டம், இந்த வயதில்தான் இந்தியாவில் அடையாளப்படுத்தப்படுகின்றது. குறிப்பாகப் பெண்களில்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்று கணிசமான அளவில் புற்றுநோய் மரணங்கள் தடுக்கப்படுகின்றன. அல்லது தாமதப்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா, 1995 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இப்போது 26% மரணங்களைத் தவிர்த்துவிட்டதாக அறிவிக்கிறது. நாமும்கூட இப்போதெல்லாம் ஆரம்பக்கட்ட நிலையில் பல புற்றுநோய்களை அடையாளம் காண ஆரம்பித்திருப்பதால், சற்றே புற்றுநோய் மரணங்களைத் தவிர்க்க ஆரம்பித்துள்ளோம். ஆனால், நாற்பதுகளில் அடையாளம் காணப்படும் புற்றுநோய்கள் முன்பு இல்லாத அளவுக்கு இப்போது வாழ்வை நிலைகுலைய வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்றுவரை, புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய்தான் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறது. புகைபிடிப்பதற்கான தடைகளை மிகப்பெரிய அளவில் நடைமுறைப்படுத்திய பின்னரும், சிகரெட் டப்பாக்களில் ‘வாயும் நுரையீரலும் என்ன பாடுபடும்’ எனப் படம் போட்டு பயமுறுத்திய பின்னரும்கூட, புகையிலைப் பயன்பாடு குறைந்தபாடில்லை. அவை தரும் மரணங்கள் இப்போதும் இங்கே அதிகம். அதற்கான மிக முக்கிய காரணம், இந்தியாவில் புகையிலைக்கும் வறுமைக்கும் உள்ள பந்தம். வறுமையை ஒழிப்பதும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதும்தான் புகையிலையை ஒழிக்க, புகையிலையால் ஏற்படும் புற்றை ஒழிக்க உள்ள முக்கிய வழி என்கின்றனர் ஆய்வாளர்கள். மூன்று வேளை உணவிருந்தும், அதைச் சரியான நேரத்தில் சாப்பிடாத, அல்லது கிடைக்கும் துரித உணவை நினைத்தபோது நிரப்பிக்கொள்ளும் நபர்களும், இந்தச் சிக்கலுக்குள் புகையிலைக்கு அடுத்தபடியாக வந்துசேரத் தொடங்குகின்றனர். நேரம் தப்பிச் சாப்பிட்டு, கூடவே புகைக்கும் பழக்கமும் இருப்போர் சிவப்புக் கம்பளம் விரிப்பது இந்த நோய்க்கூட்டத்துக்குத்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘புகைபிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் - உயிரைக் கொல்லும்; மது அருந்துதல் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்’ - திரைப்படம் ஆரம்பிக்கும்போது வரும் இந்த ‘Statutory warning’-ன்போது பலரும் கேட்பது, ‘இதை ஹீரோ பேசுறாரா, இல்ல டைரக்டரா?’ என்பதைத்தான். இந்தக் கட்டாய வசனத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என்னைக் கோபம்கொள்ள வைக்கும் விஷயம், அந்த இரண்டாவது வரி. ‘மது அருந்துதல் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்’ என்ற எச்சரிக்கையில் உள்ள தணிந்த டோன். ஏன், மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்காதா? நிச்சயமாக உண்டாக்கும் என்பதுதான் மருத்துவ உண்மை.

உலகப் புற்றுநோய்க் காரணிகள்(IARC) வரையறையில் குரூப் 1 பிரிவில், ஆஸ்பெஸ்டாஸ் மாதிரி, பென்சீன் மாதிரி, நிக்கோட்டின் மாதிரி மிக மிக வலுவான புற்றுநோய்க் காரணியாக இருக்கிறது, ‘எத்தனால்’ எனும் இந்த ஆல்கஹால். இன்றுவரை, உலகில் 3.5% புற்றுநோய்க்கான காரணம் மது மட்டுமே. 3.6% புற்றுநோய் மரணத்துக்குக் காரணமும் மதுவே. டாஸ்மாக் முதல் வெளிநாட்டு மதுபானங்கள்வரை உள்ள வணிகம், இந்த விஷயத்தை உரக்கச்சொல்ல விடுவதில்லை. `என்னமோ காய்ச்சல் வரும்’ என்கிற மாதிரி, மது அருந்துதலை லேசாகச் சொல்லி, ‘அப்போ புகைதான் பிடிக்கக் கூடாது. மது லைட்டா, அளவா சாப்பிடலாம்போல’ என விஷம் விதைக்கப்படுகிறது. நாற்பதுகளின் குடல் - இரைப்பை - மலக்குடல் புற்றின் மிக மிக முக்கிய காரணம், மதுதான். வருடத்துக்கு ஒரு நாள் குடித்தாலும் சரி, வருடம் முழுக்கக் குடித்தாலும் சரி... மது மரபணுவைப் பதம் பார்க்கும் முகாந்திரம் உங்கள் உடம்பில் இருந்தால், சிக்கலை நீங்களே வரவழைக்கிறீர்கள் என்று பொருள். சிக்கல் ஒன்றும் சின்னதில்லை; உயிர்ச்சிக்கல் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்தியாவில், உணவை வீட்டுக்கே கொண்டு வந்து தரும் டெலிவரி சர்வீஸ்களில் படு வேகமாகக் கோலோச்சி வரும் ஒரு நிறுவனம், கடந்த வாரத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ‘நாங்கள் வெகுவிரைவில் ‘king of convenience’ ஆகப்போகிறோம். வருஷத்தில் 360 மில்லியன் ஆர்டரைப் பெறுவோம் என நினைத்திருந்தோம்; ஆனால் அதற்குள் 500 மில்லியன் ஆர்டரைத் தாண்டிவிட்டோம்’ என்று சொல்லிவிட்டு, ‘இந்தியாவில் மாசத்துக்கு 10 - 15 தடவைதான் வெளியே சாப்பிடுறாங்க. ஆனா, சீனாவில் 50 - 55 தடவை சாப்பிடுறாங்க. சீனாவை நாம முந்த வேண்டாமா? அதனால, நாங்க கஷ்டப்பட்டு ‘ஆப்(பு)(App)’ வெச்சு உழைச்சு, இந்திய மக்களை அடுத்த ஓரிரு வருஷத்தில மாசத்துக்கு 40 - 50 தடவை வெளியில சாப்பிடவெச்சு, எங்க வணிகத்தைக் கோலோச்ச வெப்போம்’ எனச் சூளுரைத்துள்ளது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

மேலோட்டமாகப் பார்த்தால், ‘வீட்டிலிருந்தபடியே தரமான உணவைக் குறைவான விலையில் வாங்கிச் சாப்பிட்டால் என்ன?’ எனத் தோன்றும். ‘எவ்வளவு பெரிய வணிக உத்தி, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு’ என்றெல்லாம்கூடத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இம்மாதிரியான வணிகங்கள், நம் குரல்வளையின் மேல் குத்தவைக்கும் இயல்பு கொண்டவை. ‘பேசாமல் அடுப்பங்கரையை அகற்றிவிட்டு அதில் இன்னொரு பெட்ரூமோ ஹோம் தியேட்டரோ கட்டிவிடலாம். சூடாக்க, குளிரூட்ட என ரெண்டு மெஷின்கள் போதுமே... அடுப்பு, எண்ணெய்ச் சட்டி எல்லாம் இனி எதற்கு?’ என அடுத்த தலைமுறையை யோசிக்கவைக்கக்கூடிய இம்மாதிரியான போக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் நோய்க் கூட்டத்தை அள்ளித்தெளிக்கக் கூடியவை.

பின்னிரவைத் தாண்டி விமான நிலையத்திலிருந்து வந்துகொண்டிருக்கையில், உணவை வீட்டில் டெலிவரி செய்யும் ஒரு நிறுவனத்தின் ஊழியரை சாலையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு இன்னும் நாற்பது வயது ஆகவில்லை.

‘`இவ்ளோ நேரத்துக்கா சாப்பாடு எடுத்துட்டுப் போறீங்க?’’

“ஆமாம் சார். 8 கி.மீ ஆர்டரு. இத்தோட சேர்த்தா இன்னைக்கு 650 ரூபாய் வரும். இந்த மாசம் வண்டித் தவணை கட்டிடலாம். பாப்பா ஸ்கூல் ஃபீஸ் வேற இருக்கு. போய்த்தானே ஆகணும்!”

அவரது துணிப்பைக்குள், பெரிய சைஸ் பீட்ஸா பெட்டி தெரிந்தது. நடு இரவில் மெக்ஸிகன் பெப்பரோ, ஆஸ்திரிய ஆலிவோ, பிராய்லர் கோழித் துண்டோ தூவிய பீட்ஸாவைச் சாப்பிடப்போகும் அந்தப் பெயர் தெரியாத வசதியான நபர், இன்னும் சாப்பிடாமல் தேநீருடன் இதைச் சுமந்து செல்லும் இந்த ஊழியர்... இருவருமே சிக்கலைச் சுமப்பவர்கள். இருட்டில் பயணிப்பவர்கள். என்ன செய்யப்போகிறோம்?

‘இப்படி வீட்டுக்கே வந்து உணவைக் கொடுக்கும் நிறுவனங்கள், நாம் கேட்டதைத்தானே கொடுக்கப்போகின்றன?’ எனத் தவறாக நினைத்துவிட வேண்டாம். நாம் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் அலைபேசிச் செயலிகள், நம் மண்டையைக் கழுவும் உத்தியைக் கொண்டவை. நாம் உளுந்தவடை கேட்டால், ‘நீ ஏன் டோனட் சாப்பிடக் கூடாது? 50% ஆஃபர்’ என நம்மை உசுப்பேத்தும் Artificial intelligence-ஐ கொண்டவை. ‘பேசாமல் இந்த ஒரு தபா டோனட்டுக்கே போயிடலாம்’ என உங்கள் முடிவை மாற்றும் வல்லமை கொண்டவை. அது மட்டுமா? எந்த ஹோட்டல் சகாய விலைக்குத் தருகிறார்களோ, எந்த நிறுவனம் அவர்களோடு கைகோக்கிறார்களோ அங்கிருந்து உணவை வாங்க உங்களை முடுக்கிவிட, எத்தனையோ உத்திகளை அந்தச் செயலிகள் செய்யும். புதிய புதிய உணவுகளுக்கான சந்தைகளை இனிவரும் நாள்களில் தொலைக்காட்சி விளம்பரங்களைவிட இவையே அதிகம் செய்யும்.

நாற்பதுகள் எதிர்நோக்கி நிற்பது நலமான முதுமையை மட்டும் அல்ல. ஒவ்வொரு நாற்பதினரும் ஏங்குவது சிறு புன்னகைக்கும், நம்பிக்கையளிக்கும் நட்பிற்கும், மெலிதான பாராட்டுகளுக்கும், அன்பான அரவணைப்பிற்கும், பரவசமூட்டும் காதலுக்கும்தான்.

புதிது புதிதாக வரும் வெளி உணவில் புதிய சுவைக்குப் பின்னும், புதிய வண்ணத்துக்குப் பின்னும், புதிய அழகான பேக்கிங்குக்குப் பின்னும்கூடப் பல ஆபத்துகள், குறிப்பாகப் புற்றுநோய் ஆபத்துகள் ஏகத்துக்கும் ஒளிந்திருக்கின்றன. யாரும் புற்றுநோய்க் காரணிகளை அரை ஸ்பூன் தூவிக் கொடுக்க மாட்டார்கள்தான். ஆனால், ஒவ்வோர் உணவையும் அதிவெப்பத்தில் சூடாக்குகையில், பதப்படுத்துகையில் உருவாகும் பிரச்னைகளை அந்த உணவைச் சமைப்பவரும், உணவைப் பரிமாறுபவரும், அந்த உணவு வணிகத்தில் முதலீடு செய்துள்ள சிறு வியாபாரியும் அதிகம் அறிந்திருப்பதில்லை. உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள உணவு அறிவியலாளர்கள் நடத்தி வெளியிடும் ஆய்வுகளையும், பெருகும் நோய்களுக்குமான தொடர்புகளை உற்றுப்பார்க்கையில் மட்டுமே இப்பிரச்னை பொறிதட்டும். சரி, இரண்டையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியவர்கள் யார்? நாட்டின் உணவு நலக் கொள்கைகளை வகுக்கும் அரசியலாளரும் சரி, அவர்களுக்கு அறிவுறுத்தும் அதிகாரக் கூட்டமும் சரி, அல்லது இவர்களுக்கெல்லாம் ஆராய்ந்து ஆவணங்களைக் கொடுக்க வேண்டிய அறிவியலாளரும் சரி... அனைத்துத் தரப்பும் அறமற்றுப்போனதுதான் உடல் புற்றைவிடக் கொடிய சமூகப் புற்று.

மொறுமொறுவெனப் பொரித்துத் தரும் சிப்ஸில் உருவாகும் Acrolein, தெருவுக்குத் தெரு ஊற்றிக் கொடுக்கும் டாஸ்மாக் சரக்குகளிலோ அல்லது இருட்டறையில் மெல்லிய இசையோடு ஏராளமான காசு கொடுத்துக் குடிக்கும் வெளிநாட்டுச் சாராயத்திலோ உள்ள Acetaldehyde, 90 டிகிரிக்கு மேல் சூடாக்கிக் கொடுக்கும் புதுப் புது காபி, தேநீர் வகைகளில் வரும் Furan, தாவரப் புரதங்களைப் பக்குவப்படுத்தித் தயாரிக்கும் துரித உணவுகளில் உருவாகும் Chloropropanal, Glycidol, தயார் நிலை உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் அஸ்பராஜின் களை 120 டிகிரியில் பொரிக்கையில் உருவாகும் Acrylamide, புலாலையும் பேக்கரி உணவுகளையும் பொரிக்கும்போதும், ‘பார்பிக்யூ’ எனக் கருக்கும்போதும் உருவாகும் HAAs HMFs PAHs என... இவை எல்லாவற்றையுமேதான் உணவோடு நாம் சேர்த்து உண்கிறோம். என்ன, இந்த ஆங்கிலப் பெயர்களைச் சரியாக உச்சரிக்கக்கூட நமக்குத் தெரியாது. தட்டில் அவற்றை அடையாளம் காண முடியாது. நாம் சாப்பிடும் ருசிக்குள்தான் அவை ஒளிந்திருக்கும். இப்படி உணவோடு வருபவை ஒரு பக்கம் இருக்க, அவற்றை அடைத்து விற்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புட்டிகளில் உள்ள Bisphenols A, பீட்ஸா பேக் செய்துதரும் அட்டைப்பெட்டி, சாக்லேட் உறை, அவனில் பொரிக்கும் பாப்கார்ன் பாக்கெட்டின் உறையிலுள்ள Perfluorinated compounds என... எல்லாமே உடலைப் பதம் பார்ப்பவைதான்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

‘சார், இதெல்லாம் தெரியாமல்தான் இவற்றையெல்லாம் சந்தைப்படுத்துகிறார்களா?’ எனக் கேட்டால், ஆம் நண்பர்களே, பலருக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் வாய் திறப்பதில்லை. விற்பனை செய்யும் இடத்தில் போய்த் துளித் துளியாய் சாம்பிள் எடுத்து ஆய்வு செய்யும் சட்ட இயந்திரங்களும் நம்மிடம் இல்லை. விளைவு? கண்ணுக்குத் தெரியாத இந்த விஷ வித்துகளை தினம் தினம் நம் ரத்தத்தில் கலக்கிறோம்.

நாற்பது முதல் ஐம்பது வயதுவரை வரும் புற்றுநோய்க் கூட்டத்தில் மெல்லப் பெருகிவரும் நோய்க்கூட்டம், உணவுக்குழாயில் வரும் புற்று, இரைப்பைப் புற்று மற்றும் மலக்குடல் புற்று. இம்மூன்றும் முன்பெல்லாம் அதிகம் காணப்பட்டதில்லை. இப்போது அதிகரித்து வருகிறது. வேதனையான விஷயம், இதை உணரும்போது பெரும்பாலும் அது வளர்ந்து நிற்கிறது. உடனடி அறுவை சிகிச்சை, கீமோ சிகிச்சை அவசியமாகிறது. அடிக்கடி வரும் நெஞ்செரிச்சல், எதுக்களித்தல், வயிற்று வலி ஆகியவை அலட்சியமாகப் புறக்கணிக்கப்படுவதில் இந்த ஆபத்து சில நேரத்தில் ஒளிந்திருக்கலாம். புகை பிடிப்போருக்கும், மது அருந்துவோருக்கும், குப்பை உணவை, பதப்படுத்தப்பட்ட தயார் நிலை உணவை அதிகம் சாப்பிடுவோருக்கும், நடு இரவுக்குப் பின்னர் நேரங்கெட்ட வேளையில் சாப்பிடுவோருக்கும்தான் இந்தச் சிக்கல் அதிகம் வருகிறது.

ஆரம்பக் குறிகுணங்கள் லேசாக இருப்பதால், அப்போது சோடாவையோ, கோலாவையோ, அல்லது வயிற்றுப் புண் நீக்கும் எளிய ஆங்கில மாத்திரையையோ அடிக்கடி சாப்பிட்டு நகரும் மக்களில் சிலர்தான், இந்த உணவுக்குழல் புற்றில் சிக்குகின்றனர். முப்பதுகளில் ஆரம்பித்த இப்படியான சிக்கல்கள் நாற்பதைத் தாண்டியும் நெடுங்காலமாகத் தொடர்கிறதா? தாமதிக்காமல் குடும்ப மருத்துவரைச் சந்தித்து, சில ரத்த சோதனைகள், அவசியப்பட்டால் வாய்வழி, ஆசன வழிக் குழாய் செலுத்தி அறியும் சோதனைகளில் துல்லியமாய் நோயைக் கணிக்க முடியும். ஆரம்ப நிலையில் அறிந்துகொள்கையில் முழு நிவாரணம் இன்றைக்கு சாத்தியம். ‘என்ன சிகிச்சை எடுக்கப்போகிறோம்?’ என்பது இரண்டாவது கேள்வி. முதலில், ‘என்ன நோய்?’ என்பதை அறிவது மிக முக்கியமான தவிர்க்கக் கூடாத கேள்வி.

‘இன்னா நாற்பது இனியவை நாற்பது’ தொடர் ஆரம்பிக்க முனைந்ததே சில வலிகளை அருகிலிருந்து பார்த்தபோதுதான்; சில காலியான இருக்கைகளைக் காணக் கசப்பாய் இருந்தபோதுதான்; பொருளிருந்தும் உறவிருந்தும் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வோடு இருப்பவர்களை அடிக்கடி சந்தித்தபோதுதான். நலம் என்பது, மருந்துச் சீட்டில் எழுதிக்கொடுக்கப் படுவது அல்ல. சரியான உடலறிதலால், நுட்பமான புரிந்துணர்வால், நிறைய மெனக்கெடல்களால், கரிசனத்தால், காதலால் கட்டமைக்கப்படுவது.

நாற்பதுகள் எதிர்நோக்கி நிற்பது நலமான முதுமையை மட்டும் அல்ல. ஒவ்வொரு நாற்பதினரும் ஏங்குவது சிறு புன்னகைக்கும், நம்பிக்கையளிக்கும் நட்பிற்கும், மெலிதான பாராட்டுகளுக்கும், அன்பான அரவணைப்பிற்கும், பரவசமூட்டும் காதலுக்கும்தான். இப்போதைய முதிய அப்பாக்கள் உலகில், இவை அத்தனையையும் எல்லோருக்கும் இவ்வுலகம் வாரிக்கொடுத்திட வில்லைதான். ஆனாலும் அவற்றில் நிறைய அவர்களை அறியாமல் பரிமாறப்பட்டன. இன்றைக்கு இவை அத்தனைக்கும் சற்றே மெனக்கெட வேண்டும்! ஆரோக்கியமான முதுமையோடு, ‘ஏ தாத்தா... இப்ப ஓடி வா பார்ப்போம்!’ எனத் தன் துணையை எள்ளலோடு அழைத்து நடக்கும் அழகான, கவித்துவமான, நலமான முதுமைக்கு நாற்பதுகளிலேயே தயாராக வேண்டும்.

தயாராவோம் நண்பர்களே!

- முற்றும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism