Published:Updated:

நீலகிரி: இடைவிடாது கொட்டும் மழை; சாலையில் சரிந்த பாறைகள்! - தவிக்கும் மக்கள்

சாலையில் சரிந்த பாறைகள்
சாலையில் சரிந்த பாறைகள்

பருவம் தவறி பெய்துவரும் இந்த மழையால் அணைகள் ஓரளவுக்கு நிரம்பினாலும், தேயிலை மற்றும் மலைக் காய்கறிப் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்துவரும் நிலையில், இன்று காலை முதல் கடும் பனி மூட்டத்துடன் இடைவிடாது தொடர் சாரல் மழை பெய்துவருகிறது.

ஊட்டியில் பனிமூட்டம்
ஊட்டியில் பனிமூட்டம்

நீலகிரியைப் பொறுத்தவரை ஜனவரி மாதம் என்பது வழக்கமாக உறைபனி நிலவும் காலம். உறைபனிக் காலத்தில் இரவு நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸுக்குக் கீழேயும் வெப்பநிலை இறங்கும்.

கடுமையான உறைபனியின்‌ தாக்கத்தால் புல்வெளிகள், காட்டுத் தாவரங்கள், தேயிலைச் செடிகள் கருகிக் காணப்படும். காட்டுமாடு, யானை உள்ளிட்ட தாவர உண்ணிகள் பசுந்தாவரங்களைத் தேடி இடம்பெயரும்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, பருவம் தவறி தற்போது மழை பெய்துவருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இடைவிடாது தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. மேலும், கடுமையான பனி மூட்டமும் நிலவிவருகிறது.

ஊட்டி பனிமூட்டம்
ஊட்டி பனிமூட்டம்

பருவம் தவறிப் பெய்துவரும் இந்த மழையால் அணைகள் ஓரளவுக்கு நிரம்பினாலும், தேயிலை மற்றும் மலைக் காய்கறிப் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த இரண்டு நாள்களாக மழை மேலும் தீவிரம் அடைந்திருப்பதால் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளன. இன்னும்கூட மண் சரிவுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

சாலையில் சரிந்த பாறைகள்
சாலையில் சரிந்த பாறைகள்

இதேபோல் மஞ்சூர்-கின்னகொரை சாலையில் நேற்று காலை ராட்சதப் பாறைகள் சரிந்து விழுந்தன. இரண்டாவது நாளாக இன்றும் முழுமையாகப் பாறைகள் சாலையிலிருந்து அகற்றப்படாததால், சாலையைக் கடக்க முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய கின்னக்கொரை முரளி, "ஒரு வாரமா சரியான காத்து, மழை. வீட்டைவிட்டு வெளியவே வர முடியலை. அவசரத் தேவைக்கு மட்டும் வெளியே வந்துட்டுப் போறோம். நேத்து காலையில கின்னக்கொரை ஜெயில் தோட்டம் பக்கத்துல பெரிய பாறைங்க சரிஞ்சு ரோட்டுல விழுந்துருச்சு.

சாலையில் சரிந்த பாறைகள்
சாலையில் சரிந்த பாறைகள்

நல்லவேளையா அப்போ வண்டிங்க எதுவும் வரலை. இன்னும் ரோட்டை கிளியர் பண்ணிக் கொடுக்கலை. கேட்டா, ஊட்டில இருந்து ஜே.சி.பி வரணும்னு சொல்றாங்க" என வேதனை தெரிவித்தார்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த சிவாகுமார் நம்மிடம் பேசுகையில், "இந்தப் பருவத்துல காடு காஞ்சு கெடக்குறதுதான் நல்லது. எனக்கு வெவரம் தெரிஞ்சு இந்தப் பருவத்துல இப்படி இருந்ததில்லை. வெவசாயத்துக்கும் இந்த மழை பெருசா உதவாது" என்றார்.

சாலையில் சரிந்த பாறைகள்
சாலையில் சரிந்த பாறைகள்

"மழை தொடர்ந்து பெய்துவந்தாலும், மழையின் அளவு குறைவாகவே இருக்கிறது. மழை பாதிப்புகளை உடனுக்குடன் சீரமைக்க, தயார்நிலையில் மீட்புக்குழுக்கள் உள்ளன" என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு