Published:Updated:

நெல்லையில் பெய்த கனமழை: வெள்ள நீரால் சூழப்பட்ட கோழிப்பண்ணை! - உயிரிழந்த 5,500 கோழிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கனமழை காரணமாக உயிரிழந்த கோழிகள்
கனமழை காரணமாக உயிரிழந்த கோழிகள்

கனமழை காரணமாக கால்வாயில் பாய்ந்த வெள்ளநீர் கரையைத் தாண்டி அருகில் இருந்த நிலங்களுக்குள் புகுந்தது. அங்கிருந்த கோழிப்பண்ணை வெள்ள நீரால் சூழப்பட்டதால் எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் பின்னர் மானூர் பெரியகுளம் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாலையில் ஓடும் வெள்ள நீர்
சாலையில் ஓடும் வெள்ள நீர்

அணைகளும் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை, சேர்வலாறு அணை ஆகியவை நிரம்பும் நிலையில் இருக்கின்றன. நேற்று (17-ம் தேதி) மூன்று மணி நேரத்தில் 8 செ.மீ மழை பொழிந்ததால் நெல்லை மாநகரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மாவட்டம் முழுவதும் சராசரியாக 5 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.

கனமழை காரணமாக நெல்லை மாநகரில் பேருந்து நிலையம், சேவியர் காலனி, மனக்காவன்பிள்ளை நகர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் முகாமிட்டு பணி செய்ததால் வெள்ளம் வடிந்தது.

வெள்ளச் சேதத்தைப் பார்வையிடும் ஆட்சியர் விஷ்ணு
வெள்ளச் சேதத்தைப் பார்வையிடும் ஆட்சியர் விஷ்ணு

தாமிரபரணி ஆற்றில் 6000 கன அடி தண்ணீர் வருவதால் ஆற்றில் யாரும் குளிக்கவோ செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார். அணைகள் நிரம்பும் நிலையில் இருப்பதால் அவற்றை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வள்ளியூர் அருகே பெய்த கனமழையின் காரணமாக ஆனைக்குளம் பகுதியில் கோழிப்பண்ணை நடத்திவந்த வில்சன் என்பவருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் கால்வாயில் உள்ள தடுப்பணையைத் தாண்டி நிலத்துக்குள் புகுந்தது.

கோழிப் பண்ணையைச் சூழ்ந்த வெள்ளம்
கோழிப் பண்ணையைச் சூழ்ந்த வெள்ளம்

கனமழை காரணமாக அந்தப் பகுதியில் இருந்த கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் எதுவும் செய்ய இயலாமல் அங்கிருந்த பணியாளர்கள் தவித்துள்ளனர். வெள்ளநீர் அதிகமாக வந்ததால் கோழிப்பண்ணையில் இருந்த 5,500 கோழிகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தன. அதனால் கோழிப்பண்ணை நடத்திய வில்சனுக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் பயிர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து வேளாண்மைத் துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னரே சேதத்தின் விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு