Published:Updated:

நெல்லையில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு! - மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகரித்துவருகிறது. அதனால் ஆற்றில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் அணைகளிலும் தாமிரபரணி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Vikatan

இந்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை முதலே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்டத்தின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராதாபுரம் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் நெல்லை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. அதனால் சுமார் 6,000 நாட்டுப்படகுகள் இன்று கடலுக்குள் செல்லவில்லை.

நிரம்பும் நிலையில் பாபநாசம் அணை
நிரம்பும் நிலையில் பாபநாசம் அணை

இதற்கிடையே, தொடர் மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. 143 அடி கொள்ளளவுகொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 139 அடியாகவும், 156 அடி கொள்ளவுகொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 145 அடியாகவும் இருக்கின்றன. அதனால் அணைகளுக்கு வரும் 6,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே, தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, ராமநதி அணைகள் நிரம்பிவிட்டதால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து வரும் தண்ணீர் சிற்றாறு வழியாக தாமிரபரணியில் கலக்கிறது.

குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு
குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, நதியின் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லவோ வேண்டாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன், நீர் நிலைகளின் அருகில் சென்று செல்ஃபி எடுக்கவும் வேண்டாம் என அவர் எச்சரித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு