Published:Updated:

மும்பை: மூன்றாவது நாளாகக் கொட்டித்தீர்க்கும் கனமழை! - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொட்டும் கனமழை
கொட்டும் கனமழை

மும்பையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பருவமழை தொடங்கிய முதல்நாளிலிருந்தே கொட்டித்தீர்த்து வருகிறது. மும்பையில் 9-ம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பெய்துவருகிறது. மூன்றாவது நாளான இன்றும் காலையிலிருந்தே மழை கொட்டித்தீர்த்துவருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி, வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்தேரி சுரங்கப்பாதை மழைநீரால் மூடப்பட்டுள்ளது. சயான் கிழக்குப் பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கியிருக்கிறது. மித்தி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற மாநகராட்சி தயாராகிவருகிறது.

சாலையில் வெள்ளம்
சாலையில் வெள்ளம்

அவர்களை மாநகராட்சிப் பள்ளியில் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மித்தி ஆற்றில் தண்ணீர் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையினர் நகரின் முக்கிய இடங்களில் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறையினரும் உஷார்நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மும்பையில் 13, 14-ம் தேதிகளிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மும்பை மற்றும் தானேயில் 13-ம் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலில் அலைகள் வழக்கத்தைவிட சீற்றமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கடற்கரைப் பக்கம் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியிலும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மும்பையில் மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஹொசாலிகர் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்புப் படையினரும் மீட்புப் பணிக்குத் தயார்நிலையில் இருக்கிறார்கள். புறநகர் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியால் ஆபத்தான கட்டடங்கள் என்று கண்டறியப்பட்டுள்ள கட்டடங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு