Published:Updated:

`2 பேருக்கு உயிர் கொடுக்கப்போகிறாள் எமலி!'- 5 மாதக் குழந்தைக்கு நேர்ந்த துயரத்தால் கலங்கும் பெற்றோர்

Emalee
Emalee ( @CommunityMed )

எமலி இருந்த மருத்துவமனை வார்ட்டில் அவள் பயன்படுத்திய பொம்மைகள், அவளுக்குப் பிடித்த ஆடைகள் என அனைத்தும் வைக்கப்பட்டன.

`எமலி’ புகைப்படத்தைப் பார்த்தபோது அவள் ஒரு தேவதையைப் போல்தான் எனக்குத் தெரிந்தாள். ஆடையில் வண்ணங்களில் காட்சியளித்த மலர்களும் முகத்தில் தவழ்ந்த சிரிப்பையும் பார்த்தபோது வாரி அணைத்துக்கொள்ளதான் தோன்றியது. மைக்கேல் அப்ராம்ஸ் - ஜேடன் ரோஸ் தம்பதியின் 5 மாத குழந்தைதான் எமலி. 10 மாதம் பல்வேறு கனவுகளுடன் குழந்தையின் வரவுக்காக காத்திருந்தனர் மைக்கேல் - ரோஸ். 5 மாதங்களுக்கு முன்பு அந்த அழகிய தேவதை பிறந்தாள். முதல் குழந்தை அதுவும் பெண் என உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் மைக்கேல். மகளின் ஒவ்வோர் அசைவுகளையும் இருவரும் ரசித்து வாழ்ந்துகொண்டிருந்தனர். எமலியின் மழலை மொழியை கேட்க ஆர்வமாக இருந்தனர்.

Emalee
Emalee
@NathalieABC30

எமலியோ மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள். மணிக்கணக்கில் குழந்தையுடன் நேரத்தைச் செலவிட்டனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு குழந்தைக்கு திடீரென உடல்நலம் குன்றியது. சிறிது வாந்தி எடுக்கத் தொடங்கினால் அதன்பின் சரியானது. ஒருவாரம் கழித்து மீண்டும் வாந்தி எடுக்கத் தொடங்கினாள். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எவ்வளவுதான் பராமரித்தாலும் காலநிலை மாற்றம் சூழல்கள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும். இப்படித்தான் மைக்கேல் - ஜேடன் இருவரும் நினைத்திருந்தார்கள். ஆனால், மருத்துவர்கள் சொன்ன தகவலோ இருவருக்கும் வாரிப்போட்டது. குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பதாக அதிர்ச்சி கொடுத்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

இளம்பெற்றோருக்கு இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. யோசிப்பதற்குக்கூட நேரமில்லை மார்பிலும் தோளிலும் தவழ்ந்த குழந்தை படுத்த படுக்கையாய் கிடக்கிறாள். குடியிருக்கும் அப்பார்ட்மென்ட், நண்பர்கள் என அனைவரிடம் குழந்தையின் சிகிச்சைக்கான மருத்துவச் செலவுக்கு உதவி கோரினர். அறுவை சிகிச்சை முடிந்தது. ஆனால், குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எமலி இனி வரமாட்டாள். இந்தக் கடினமான நேரத்தில் மைக்கேலும் - ஜேடனும் எடுத்த முடிவு இரண்டு உயிர்களைக் காப்பாற்றவுள்ளது.

Emalee
Emalee
@NathalieABC30

``எமலி எங்கள் முதல் குழந்தை. அவளுடன் இருக்கும் வாய்ப்பை ஐந்து மாதங்கள் மட்டுமே பெற்றோம். எங்கள் முதல் குழந்தையின் வாழ்க்கையை மதிக்கிறோம். அவளது கிட்னி மற்றும் இதயத்தை தானமாக வழங்கவுள்ளோம். இரண்டு நோயாளிகள் இதைப் பெறுவதற்காக காத்திருக்கிறார்கள். அவள் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றவுள்ளார். எங்கள் மகளின் உடல் உறுப்புகளை அவர்கள் வைத்திருப்பதால், ஒரு நாள் நாங்கள் வந்து சந்திப்போம். உங்கள் குழந்தையை கட்டிப்பிடியுங்கள். முத்தம் கொடுங்கள் அவர்களுக்காக நேரம் செலவிடுங்கள்” என கனத்த இதயத்தோடு மைக்கேல் பேசினார்.

உடல் உறுப்பு தானம் இந்தக் கடினமான நேரத்தில் குடும்ப வாழ்க்கையில், பெற்றோரின் வாழ்க்கையில் நம்பிக்கை அளிக்கிறது” என கண்ணீரோடு ஜேடன் முடித்துக்கொண்டார். எமலி இருந்த மருத்துவமனை வார்ட்டில் அவள் பயன்படுத்திய பொம்மைகள், அவளுக்குப் பிடித்த ஆடைகள் என அனைத்தும் வைக்கப்பட்டது. உறவினர்கள் நண்பர்கள் என மருத்துவமனை முழுவதும் நிறைந்திருந்தனர். கண்ணீருடன் அவளை வழியனுப்பினர்.

Hospital
Hospital

ஜேடன் மனதளவில் உடைந்துவிட்டார். அவரால் அங்கிருந்து நகர முடியவில்லை. ஜேடனை தேற்றும் தைரியம் மைக்கேலுக்கு இல்லை. எமலியின் நினைவுகளுடன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே நின்றார். எல்லாம் முடிந்துவிட்டது என்பது தெரியும். ஆனால், மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எமலிக்கு இப்படி நடந்திருக்கவேண்டாம். மைக்கேல் - ஜேடன் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர வேண்டும். இரண்டு உயிர்களைக் காப்பாற்றப்போகும் எமலி தேவதையாகத்தான் தெரிகிறாள்.

News credit : abc30.com

அடுத்த கட்டுரைக்கு