Published:Updated:

சாதாரண மக்களுக்கு, நியாயமான விலையில் மணல்! - தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

மனல்
மனல்

மணல் லாரி உரிமையாளர்கள், புரோக்கர்கள், மணல் வியாபாரிகளுக்கு அரசு மணல் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. அவர்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் பொதுமக்கள், அரசு மணலை பெறுவதென்பது இயலாத காரியமாகவே உள்ளது.

சொந்த வீடு கட்டுவதென்பது, ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவு. சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டும். வெளியில் கடன் வாங்கியும் வீடு கட்டும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். பெரும் கடன் சுமையோடும் பணத் தட்டுப்பாடோடும், கட்டுமான வேலையை தொடங்கும் சாதாரண மக்களுக்கு, நியாயமான விலையில் மணல் கிடைப்பதென்பது பெரும் சவாலாக உள்ளது, அரசு குவாரிகளில் குறைந்த விலையில் மணல் விற்கப்பட்டாலும் கூட, அவை சாமான்ய மக்களுக்கு கிடைப்பதில்லை. தனியார் வியாபாரிகளிடம் பல மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலம் நிலவுகிறது. இந்நிலையில்தான் இது தொடர்பாக, தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தொடர்ந்த பொதுநல வழக்கில், ‘சாதாரண மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மணல் குவாரி
மணல் குவாரி

வீடு கட்டுபவர்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால், குறைந்த விலையில் மணல் விநியோகம் செய்யக்கூடிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் இது பெரும்பாலும் சாதாரண மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பரவலாக நிலவுகிறது. இடைத்தரகர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் கைகோத்து, வெளியில் அதிக விலைக்கு அரசு மணலை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்நிலையில்தான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தங்கவேல் என்பவர், இது தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வீடுகள் கட்டுவதற்கு மிகவும் முக்கியமான பொருளாக மணல் தேவைப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு குறைந்த விலையில் மணல் விநியோகிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. நானும் என்னைப் போன்ற பலரும் இணையதள சேவை மூலம் விண்ணப்பிக்க பலமுறை முயற்சித்தோம். இணையதள சேவையில் எப்போது பார்த்தாலும் மணல் முன்பதிவு முடிந்துவிட்டது என்ற தகவல்தான் வருகிறது.

மணல் குவாரி... கெயில் குழாய்... பரிதவிக்கும் வேளாண் மண்டலம்!

ஆனால் மணல் லாரி உரிமையாளர்கள், புரோக்கர்கள், மணல் வியாபாரிகளுக்கு அரசு மணல் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. அவர்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் பொதுமக்கள், அரசு மணலை பெறுவதென்பது இயலாத காரியமாகவே உள்ளது. பொதுமக்கள் பயன்பெறுவதற்காகதான், இந்த திட்டத்தையே தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கான நோக்கம் நிறைவேறவில்லை. எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என அந்த வழக்கில் தங்கவேல் தெரிவித்திருந்தார்.

நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். இதில் ஆஜரான அரசு மணல் குவாரி திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், ‘’எங்களிடம் இருப்பு உள்ள மணல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4 மணியளவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. தற்போது ஏராளமானவர்கள் முன்பதிவுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யும் அளவுக்கு அரசிடம் போதுமான அளவு மணல் இல்லை” என தெரிவித்தார்.

மணல் குவாரி
மணல் குவாரி

இது தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், ``அரசு மணல் குவாரியில் குறைந்த விலைக்கு மணல் விற்கப்படுகிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் பல மடங்கு அதிக விலைக்கு மணல் விற்கப்படுகிறது. இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாமல், சாதாரண மக்களுக்கு ஆன்லைன் மூலம் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்கள். ஆன்லைன் முன்பதிவு மூலம் அரசு மணல் விநியோகம் என்பது சிறப்பான திட்டம்தான். ஆனால் இது நேர்மையாக நடைபெற வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு