Published:Updated:

கொள்ளைக் கட்டணத்தில் நீலகிரி தங்கும் விடுதிகள்... - விழிபிதுங்கும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

ஊட்டியில பார்க்கிங் கட்டணமே 170 ரூபாய் வரை வசூலிக்கிறாங்க. லாட்ஜ், காட்டேஜ் கட்டணக் கொள்ளையைச் சொல்லவா வேணும்.

கொள்ளைக் கட்டணத்தில் நீலகிரி தங்கும் விடுதிகள்... - விழிபிதுங்கும் சுற்றுலா பயணிகள்!

ஊட்டியில பார்க்கிங் கட்டணமே 170 ரூபாய் வரை வசூலிக்கிறாங்க. லாட்ஜ், காட்டேஜ் கட்டணக் கொள்ளையைச் சொல்லவா வேணும்.

Published:Updated:
நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

ஒவ்வோர் ஆண்டும், சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் சிறப்பு வாய்ந்த நீலகிரியில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோடைவிழா மே மாதம் தொடங்கி ஒரு மாதம் நடைபெறவிருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, நீலகிரியை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகளால், தற்போதே சீஸன் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. இதைச் சாதகமாக்கிக்கொண்ட வணிக நிறுவனங்கள் முதல் தங்கும் விடுதிகள் வரை, கொள்ளை விலைவைத்து மக்களை விழிபிதுங்க வைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. நீலகிரி தங்கும் விடுதிகளின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, ஆட்சியரும் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஆனால், மாற்றம் எதுவும் இல்லை. உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய களமிறங்கினோம்...

ஊட்டி நகரில், சாதாரண வசதியுடன் இயங்கிவரும் ஒரு விடுதியை போனில் தொடர்புகொண்டு “அறை வேண்டும்...” எனக் கேட்டோம். “ஒரு குடும்பம், ஒரு நாள் இரவு தங்க மட்டும் 4,000 ரூபாய் ஆகும்” என்றார்கள். அந்த விடுதியின் வழக்கமான கட்டணம் 1,500 ரூபாய்தான். ஊட்டியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டேஜ் ஒன்றையும் தொடர்புகொண்டு கேட்டோம். இரண்டு பேர் தங்கும் அறைக்கு 7,000 ரூபாய் சொன்னார்கள். ஆனால், அந்த காட்டேஜின் இணையதளப் பக்கத்தில், அதே அறைக்கு 3,000 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்தடுத்து நாம் விசாரித்த தங்கும் விடுதிகளிலும் தாறுமாறான கட்டணத்தைச் சொன்னார்கள். அதுவும் ‘வார விடுமுறை நாள்கள் என்றால், இன்னும் அதிக கட்டணம்’ என நம்மை மிரளவைத்தார்கள்.

கொள்ளைக் கட்டணத்தில் நீலகிரி தங்கும் விடுதிகள்... - விழிபிதுங்கும் சுற்றுலா பயணிகள்!

வாட்டியெடுக்கும் இரவு நேரக் குளிரில், ஊட்டியில் அறை தேடி அலையும் சுற்றுலாப்பயணிகளின் துயரம் குறித்து நம்மிடம் பேசிய போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர், “ரூம் கிடைக்கலை, ரூம் ரேட்டு கட்டுப்படியாகலைனு ராத்திரியில வண்டியிலேயே உட்கார்ந்தபடி, கால்களைக் குறுக்கிப் படுத்துத் தூங்கும் சுற்றுலாப்பயணிகளையும் அதிகமா பார்க்க முடியுது. ரூம் இல்லைன்னு போலியா தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வழிப்பறி மாதிரி ரூம்‌ வாடகை வாங்குறாங்க. வசதி இருக்குறவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துட்டுப் போவாங்க. நடுத்தர மக்கள் பாவம் என்ன பண்ணுவாங்க... இதுக்கு பயந்துக்கிட்டே பாதிப் பேர் ராத்திரியில கீழ இறங்கிடுறாங்க. பெரிய எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை அழைச்சுக்கிட்டு வர்ற நடுத்தர மக்கள், பெரிய ஏமாற்றமடையுறாங்க; ரொம்பவே சிரமப்படுறாங்க” எனப் புலம்பினார்.

இது போன்ற அநியாயக் கொள்ளைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் ‘உதகை நகர மக்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சங்க’த்தின் தலைவர் ஜனார்த்தனன் நம்மிடம், “ஊட்டியில பார்க்கிங் கட்டணமே 170 ரூபாய் வரை வசூலிக்கிறாங்க. லாட்ஜ், காட்டேஜ் கட்டணக் கொள்ளையைச் சொல்லவா வேணும்... மற்ற ஊர்களைப்போல 24 மணி நேரத்துக்கு ரூம் கொடுக்கிறதில்லை. ‘12 டு 12’ நேர முறையைக் கடைப்பிடிக்கிறாங்க. காலை 10 மணிக்கு ரூம் புக் செஞ்சாலும் மதியம் 12 மணிக்குக் காலி செய்யணும். அப்படி இல்லைன்னா அடுத்த நாளுக்கான கட்டணத்தை வசூலிப்பாங்க. இந்த மாதிரியான நேர முறையே டூரிஸ்ட்களுக்குப் பெரிய தலைவலியா இருக்கு. ‘தாங்கள் வழங்கும் வசதிகளின் அடிப்படையிலேயே விடுதிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும்’ என்ற அடிப்படை அரசு வழிகாட்டுதல் இல்லாதது இவர்களுக்கு வசதியாகிவிட்டது. விடுதி உரிமையாளர்கள் தங்களுக்குள்ளேயே சிண்டிகேட் போட்டு இஷ்டத்துக்கு ரேட் ஃபிக்ஸ் பண்றாங்க. யாருமே கேள்வி கேட்க முடியறதில்லை. மனசாட்சியே இல்லாம மக்களிடம் அநியாயக் கட்டணம் வசூலிக்கிறாங்க. இங்கே இருக்கிற காட்டேஜ், லாட்ஜ்களை அரசாங்கமே ஆய்வுசெய்து கட்டணப் பட்டியலை வெளிப்படையாகக் கொண்டு வரணும்” என்றார்.

ஜனார்த்தனன்
ஜனார்த்தனன்

அதிக கட்டண வசூலிப்பு குறித்து, நீலகிரி லாட்ஜ் மற்றும் காட்டேஜ் சங்கங்களின் நிர்வாகிகளிடம் பேசினோம். “கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. பழைய கட்டணங்களையேதான் வசூலித்துவருகிறோம். சீஸன் சமயம் என்பதால் 300, 500 சேர்த்து வாங்குவார்கள். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என முடித்துக்கொண்டனர் மழுப்பலாக.

அம்ரித்
அம்ரித்

இந்த விவகாரத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஐ.ஏ.எஸ் கவனத்துக்குக் கொண்டு சென்றோம், “நீலகிரி தங்கும் விடுதிகளில், அதிக கட்டணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறோம். விடுதிகளின் கட்டணத்தைக் கண்காணிக்க தனி கமிட்டி ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த கமிட்டியின் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம். அதிக கட்டணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்

நீலகிரியில் சுற்றுலாவை நம்பி வாழ்வோர், பெருந்தொற்றின் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெருந்துயரத்தை அனுபவித்து வந்தார்கள். தற்போதுதான் அவர்களது வாழ்வில் வசந்தம் மெல்லத் திரும்புகிறது. இந்நேரத்தில், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் உறுதியான நடவடிக்கையால்தான் அவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுலாப்பயணிகளின் சந்தோஷத்தையும் மீட்க முடியும்!

கொள்ளைக் கட்டணத்தில் நீலகிரி தங்கும் விடுதிகள்... - விழிபிதுங்கும் சுற்றுலா பயணிகள்!

வைல்டு ஸ்டே... வைல்டு ட்ரெக்!

வன விலங்குகள் நடமாட்டமுள்ள வனத்தை ஒட்டிய பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் டென்ட் போன்ற கட்டுமானத்தை ஏற்படுத்தி, அவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு, சுற்றுலாப்பயணிகளைச் சிலர் கவர்ந்துவருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் ‘வைல்டு ஸ்டே, வைல்டு ட்ரெக்’ என ஆபத்தான இடங்களில் சுற்றுலாப்பயணிகளைச் சட்டவிரோதமாகத் தங்கவைத்து, அத்துமீறி காட்டைச்‌ சுற்றிக்காட்டிப் பணம் வாங்கும்‌ போக்கும் அதிகரித்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism