Published:Updated:

கோவை விருது விழா... சவால்களைச் சமாளிக்க உங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள்!

ஜி.பழனிச்சாமிக்கு விருது வழங்கும் சி.கே.ரங்கநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.பழனிச்சாமிக்கு விருது வழங்கும் சி.கே.ரங்கநாதன்

டி.ஜே சிறந்த மேலாளர் விருது’ சக்தி ஃபைனான்ஸ் லிமிடெட் இயக்கப் பிரிவு தலைவர் டாக்டர் கே.நடேசனுக்கு வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மேலாண்மை சங்கம் (CMA) சார்பில் ‘தேசிய மேலாண்மை நாள்’ விழா பிப்ரவரி 27-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் மற்றும் மேலாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் துணைத் தலைவரும், கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியபோது, “இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. டிஜிட்டல்மயம் அனைத்து விதங்களிலும் முக்கியப் பங்காற்றும். டிஜிட்டல் வளர்ச்சிப் பரிணாமத்துக்குத் தயாராக இருந்தால் மட்டும்தான் பொருளாதாரத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும். அமேசான் வந்தபோது, அது ஆஃப்லைன் வியாபாரத்துக்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் நம்மை நாம் அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் புதிய விஷயங்களைக் கற்க வேண்டும். எதற்காகவும் கற்பதை நிறுத்தக் கூடாது. உங்களுக்குள்ளேயே முதலீடு செய்யுங்கள்” என்றார்.

டாக்டர் நல்லா ஜி.பழனிச்சாமிக்கு விருது வழங்கும் சி.கே.ரங்கநாதன்
டாக்டர் நல்லா ஜி.பழனிச்சாமிக்கு விருது வழங்கும் சி.கே.ரங்கநாதன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`ரூட்ஸ் சிறந்த தொழில்முனைவோர் விருது’ கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிச்சாமிக்கு வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட அவர், “கொரோனோ வைரஸ் பல்வேறு தரப்புகளில் அச்சத்தை கிளப்பியிருக்கிறது. அமெரிக்கர்கள் பயன்படுத்தும் 90% பொருள்கள் அவர்களின் உற்பத்திதான். எனவே, கொரோனோ தந்த பாடத்தின் மூலம் நமக்கான தேவையை நாமே உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்” என்றார்.

`மஹிந்திரா பம்ப்ஸ் சிறந்த எஸ்.எம்.இ விருது’ டி.எஸ் மகாலிங்கம் அண்ட் சன்ஸ் நிர்வாகப் பங்குதாரர் வி.ஆர்.சந்தருக்கு வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட வி.ஆர்.சந்தர், “மாற்றங்களை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதில்தான் சவால்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றைச் சரியாக செய்ததால்தான் இப்போது இந்த இடத்தில் நான் நிற்கிறேன்’’ என்றார்.

`ஜி.ஆர்.ஜி சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருது’ சம் மோர் ஃபுட்ஸ் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான தீபா முத்துகுமாரசாமிக்கு வழங்கப்பட்டது. எம்.எஸ்.சி., எம்.ஃபில் உணவு மற்றும் ஊட்டச்சத்து படித்து முடித்த தீபா, `சமூகத்துக்கு ஆரோக்கியமான உணவைத் தர வேண்டும்’ என்ற ஆர்வத்தில், `ஃபர்ஸ்ட் ஸ்பூன்’ மற்றும் `சம் மோர் ஃபுட்ஸ்’ ஆகிய இரண்டு நிறுவனங்களைத் தொடங்கினார். ஆஃப்லைன், ஆன்லைன் என 30 ஆயிரம் வாடிக்கையாளர்களை எட்டி, வெற்றி நாட்டியிருக்கிறார் தீபா முத்துகுமாரசாமி. விருதைப் பெற்றுக்கொண்ட அவர், “தன்னம்பிக்கை, விடாமுயற்சி, செயல்திறன் இருந்தால் எந்தத் துறையிலும், யார் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும்” என்றார்.

`குவாட்ரா பெஸ்ட் ஸ்டார்ட்அப் விருது’ மேக்னிக் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. தங்கத்துடன் இரும்பு கலக்கப்படுவதைக் கண்டறியும் மெஷினை 2018-ம் ஆண்டு கண்டுபிடித்தார் கார்த்திகேயன். 2.8 நொடியில் 100% ரிசல்ட்டை இந்த மெஷின் தருவதால், உலகம் முழுவதும் 50,000-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்திவருகின்றனர். விருதைப் பெற்றுக்கொண்ட கார்த்திகேயன், “எவ்வளவு வேகமாக நாம் மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு வேகமாக நம் வளர்ச்சியும் இருக்கும்” என்றார்.

`டி.ஜே சிறந்த மேலாளர் விருது’ சக்தி ஃபைனான்ஸ் லிமிடெட் இயக்கப் பிரிவு தலைவர் டாக்டர் கே.நடேசனுக்கு வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட நடேசன், “ஒரு விஷயம் வெற்றியடைவதும், தோல்வியில் முடிவதும் நம் கைகளில்தான் இருக்கிறது. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்” என்றார். `ஜி.ஆர்.டி சிறந்த மேலாண்மை கல்வியாளர் விருது’ அமிர்தா வணிகவியல் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ஆர்.ஜி.பிரியதர்ஷினிக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மேலாண்மை சங்கத்தின் தலைவர் எஸ்.பிரசாந்த், செயலாளர் என்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். `சவால்களைச் சமாளிக்க நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லித் தந்தது இந்த விருது நிகழ்ச்சி!