அலசல்
Published:Updated:

மீண்டும் கிளம்பும் இந்தி சர்ச்சை!

இந்தி சர்ச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தி சர்ச்சை

அலுவல் மொழிக் குழு இப்படி ஒரு பரிந்துரையைத் தருவது இது முதல்முறையல்ல! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 351-வது பிரிவு இந்தியை மத்திய அரசின் மொழியாக நாடு முழுக்கப் பரப்புவதை வலியுறுத்துகிறது

மொழியைப் போல மனித உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் அம்சம் வேறொன்று இருக்க முடியாது. மொழி உரிமைக்கான போராட்டங்கள் பல நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்திருக்கின்றன. பல மொழி பேசும் மக்கள் ஒற்றை தேசமாக இணைந்திருக்கும்போது, அங்கு பெரும்பான்மை மொழி ஒன்றின் ஆதிக்கம் இயல்பாகவே நிகழும் வாய்ப்பு வந்துவிடும். பாகிஸ்தானில் வங்காளியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த குரலே, அரசியல் உரிமைக்கான போராக மாறியது. அதுவே வங்கதேசம் என்ற நாடு உருவாகக் காரணமானது.

இந்தியாவில் இந்திப் பயன்பாட்டை தீவிரமாக்கும் முயற்சிகளை ஒவ்வொரு முறை மத்திய அரசு எடுக்கும்போதும், இந்திக்கு எதிரான குரல் தென் மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ஓங்கி ஒலிக்கும்.

இப்போது மீண்டும் அதே சூழல், அதே குரல். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தனது 11-வது அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அக்டோபர் 9-ம் தேதி சமர்ப்பித்துள்ளது. 112 பரிந்துரைகளைக் கொண்ட இந்த அறிக்கை, நாடு முழுவதும் இந்தி மொழியைத் திணிக்க முயல்வதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவையிலும் இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த அறிக்கையைக் கண்டித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மீண்டும் கிளம்பும் இந்தி சர்ச்சை!

‘‘இந்திய மாநிலங்கள் தங்களுக்கு இடையேயான தகவல்தொடர்புகளை ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியில் வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இந்தியே இருக்க வேண்டும், ஆங்கிலம் இருக்கக்கூடாது'' என்று அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாக செய்தி வெளியாகியிருந்தது. எதிர்ப்புகளுக்கு இதுவும் காரணம். இந்நிலையில் சில உண்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அலுவல் மொழிக்கான குழு என்பது என்ன?

1963-ம் ஆண்டில் அலுவல் மொழிச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி 1976-ம் ஆண்டு இந்தக் குழு உருவாக்கப்பட்டது. குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைவராக இருப்பார். மக்களவையிலிருந்து 20, மாநிலங்களவையிலிருந்து 10 என 30 எம்.பி-க்கள் இதில் இருப்பார்கள். தற்போதைய அமித் ஷா தலைமையிலான குழுவுக்கு பிஜு ஜனதா தளம் கட்சியின் பர்த்ருஹரி மகதாப் துணைத் தலைவராக இருக்கிறார். பெருமளவு பா.ஜ.க-வின் எம்.பி-க்கள் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து தலா இரண்டு பேர், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா, தெலுங்கு தேசம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகியவற்றிலிருந்து ஒருவர் இருக்கிறார்கள்.

இந்தக் குழுவின் பணியே, அரசு நடைமுறைகளில் இந்தி எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதும், அரசுத் துறைகளிலும் தகவல் தொடர்புகளிலும் இந்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதும்தான்.

நாடாளுமன்றத்தில் பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். அந்தத் துறை சார்ந்த பணிகளை ஆய்வு செய்து அறிக்கைகள் அளிப்பது அந்தக் குழுக்களின் வேலை. இவை நாடாளுமன்றத்தால் அமைக்கப்படும் குழுக்கள் என்பதால், இந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும்.

ஆனால், அலுவல் மொழிக் குழு தனி சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டது. இது தன் அறிக்கையை நேரடியாக ஜனாதிபதிக்கே அனுப்பும். ஜனாதிபதி அதனை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும், மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைப்பது மரபு. இப்போது இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் இருப்பதால், அதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. குழுவின் துணைத் தலைவரான பர்த்ருஹரி மகதாப் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். மற்றபடி, யூகங்களாக வெளிவந்த தகவல்கள் அடிப்படையிலேயே ஆதரவும் எதிர்ப்பும் எழுகின்றன.

என்ன பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன?

இந்தக் குழுவின் நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளில் சர்ச்சையை ஏற்படுத்தியவை சில விஷயங்கள்தான். அலுவல் மற்றும் நிர்வாகத் தொடர்பு மொழியாக இந்தியே இருக்க வேண்டும்... ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்தியே பாடமொழியாக இருக்க வேண்டும்... நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்... இந்தியைப் பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவையே அவை!

‘‘ஆனால் இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது'' என்கிறார், குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மகதாப். ‘‘அலுவல் மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதே, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது. எந்தெந்த மாநிலங்களில் இந்தி அதிகாரபூர்வ மொழியாக இருக்கிறதோ, அங்கு மட்டுமே இந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்'' என்கிறார் அவர்.

மீண்டும் கிளம்பும் இந்தி சர்ச்சை!

இந்தியாவின் மூன்று பிரிவுகள்!

அலுவல் மொழிக் குழுவின் விதிகளின்படி இந்தியா மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், ஹரியானா, இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, அந்தமான் ஆகியவை A பிரிவில் வரும் பிரதேசங்கள். இங்கெல்லாம் அலுவல்களில் இந்திப் பயன்பாடு 100% இருக்க வேண்டும் என்பது பரிந்துரை. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஐ.ஐ.டி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இந்தியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பதும் பரிந்துரை.

உ.பி., உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், பீகார், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கீழ்நிலை நீதிமன்றங்களில் ஏற்கெனவே வழக்காடு மொழியாக இந்தி இருக்கிறது. அதை முழுமையாக்க வேண்டும் என்பதும் ஒரு பரிந்துரை.

குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ யூனியன் பிரதேசங்கள் B பிரிவில் வரும் பிரதேசங்கள். இங்கும் சில பரிந்துரைகள் கட்டாயமாகவும், சில பரிந்துரைகள் படிப்படியாக அமல் செய்யுமாறும் கூறப்பட்டுள்ளன. சில இடங்களில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியோ, அல்லது உள்ளூர் மொழியோ பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு பரிந்துரை.

உதாரணமாக, உ.பி-யில் இருக்கும் கான்பூர் ஐ.ஐ.டி இந்தியில் பாடம் சொல்லித் தர வேண்டும். ஒடிஷாவின் சம்பல்பூரில் இருக்கும் ஐ.ஐ.டி-யில் ஒடியா மொழியில் சொல்லித் தரலாம்.

இந்த இரண்டு பிரிவுகளிலும் வராத பிற மாநிலங்கள் C பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தி பேசுவோர் எண்ணிக்கை 65 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் இந்த மாநிலங்களுக்கு இந்தி கட்டாயமில்லை. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து தென் மாநிலங்களும், அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் இந்தப்பிரிவில்தான் வருகின்றன. எனவே, தமிழகத்தில் இருக்கும் கேந்திரிய வித்யாலாக்களிலோ, உயர்கல்வி நிறுவனங்களிலோ இந்தி கட்டாயமாகும் வாய்ப்பு இல்லை.

என்னென்ன சிக்கல்கள் எழும்?

‘இந்தி பேசும் மாநிலம் ஒன்றில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர் ஒருவர் இந்தியைப் பயன்படுத்தாமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்தினால், அவர் எச்சரிக்கப்படுவார். அவரின் பணித்திறன் அறிக்கையிலும் இது குறிப்பிடப்படும்' என்கிறது அலுவல் மொழிக் குழுவின் பரிந்துரை. அலுவலகக் கடிதங்கள், இமெயில்கள், தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், நிகழ்ச்சிகள் என்று எல்லாமே இந்தியில் நடத்தப்பட வேண்டும்.

இப்போது உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை 100% இந்தியைப் பயன்படுத்துகின்றன. படிப்படியாக மற்ற அமைச்சகங்களும் ஆங்கிலத்தைக் குறைத்துக்கொண்டு இந்தியை அதிகரிக்க வேண்டும் என்பது பரிந்துரை.

இப்படி ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியைக் கொண்டு வரும்போது, இந்தி தெரிந்தால் மட்டுமே மத்திய அரசுப் பணிகளுக்குச் செல்ல முடியும் என்ற நிலை ஏற்படும். வட இந்திய மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியா முழுக்க இருந்து மாணவ, மாணவிகள் சேர்ந்து படிக்கிறார்கள். அங்கு இந்தி பாடமொழியாக மாறினால், தென்னிந்திய மாணவர்கள் படிப்பது சிரமமாகிவிடும். ‘இது ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களில் இருந்தும், இந்தி தெரியாதோரை அப்புறப்படுத்தும் முயற்சி' என்பதே எதிர்ப்புக்குரல் எழுப்புவோரின் கருத்து.

இது முதல்முறை அல்ல!

புதிய தேசியக் கல்விக்கொள்கையானது இந்தியையும், மாநில மொழிகளையும் கல்வி நிலையங்களில் முன்னிறுத்துகிறது. ஒவ்வொரு மொழியிலும் அனைவரும் ஏற்கத்தக்க கலைச்சொற்களை உருவாக்குவது, பாடநூல்களை உருவாக்குவது என்று இதில் நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம். இப்போது இந்தியில் வெளியாகியிருக்கும் மருத்துவ நூல்களில்கூட போதுமான அளவு கலைச்சொற்கள் இல்லாததால் ஆங்கிலத்தையே பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தமிழகத்தில் உயர்கல்வியில் தமிழ்வழிக் கல்வி எப்போதோ அறிமுகம் செய்யப்பட்டாலும், போதுமான பாடநூல்கள் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. நீட் போன்ற தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தமிழில் தரமற்ற மொழிபெயர்ப்புடன்தான் வெளியாகின்றன.

கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளும் பயன்பாடுகளும் உலகம் முழுக்கப் பரவலாகிவிட்ட ஒரு யுகம் இது. இந்தியாவில் ஆங்கிலவழிக் கல்வி பயின்றவர்கள் உலகின் பல நாடுகளில் பணிவாய்ப்பு பெற்று மேம்பட்ட வாழ்க்கைச்சூழலை அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை முன்னிறுத்துவது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அறிவுத்தளத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு முடிவு எட்ட வேண்டிய விஷயம்.

அலுவல் மொழிக் குழு இப்படி ஒரு பரிந்துரையைத் தருவது இது முதல்முறையல்ல! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 351-வது பிரிவு இந்தியை மத்திய அரசின் மொழியாக நாடு முழுக்கப் பரப்புவதை வலியுறுத்துகிறது. அலுவல் மொழிக் குழு இதன் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. 1987-ம் ஆண்டு தொடங்கி அவ்வப்போது இந்தக் குழுவின் பரிந்துரை அறிக்கைகள் வருகின்றன. 2011-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது இப்படி 117 பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை தரப்பட்டது. மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்துடன் இந்தி மொழி வசதியும் கொண்ட கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை அதில் ஒன்று. அப்போதும் இந்தித் திணிப்பு சர்ச்சை தமிழகத்தில் எழுந்தது.

தமிழக எம்.பி-க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சில அமைச்சர்கள் இந்தியில் பதில் தருவது பெரும் சர்ச்சையாக நிலவிவரும் சூழலில், மீண்டும் ஒருமுறை இந்தி தொடர்பான விவாதம் மைய அரங்கிற்கு வந்திருக்கிறது.

இந்தியே பெரிய மொழி!

கொரோனா காரணமாக 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. நம்மிடம் இருப்பது 2011 தகவல்கள் மட்டுமே! அப்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மொழி குறித்த விவரங்களும் எடுக்கப்பட்டன. அதன்படி இந்தியாவில் 121 மொழிகளைத் தாய்மொழியாகப் பேசுவோர் இருப்பதாக புள்ளிவிவரம் அளிக்கப்பட்டது. இவற்றில் அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியல் இடப்பட்டுள்ள 22 மொழிகளும் அடங்கும்.

இந்தக் கணக்கெடுப்பின்படி இந்தியா முழுக்க இந்தியைத் தாய்மொழியாகக் குறிப்பிட்டவர்கள் எண்ணிக்கை 52.8 கோடி. கிட்டத்தட்ட மொத்த மக்கள்தொகையில் 43.6%. இதைத் தவிர 13.9 கோடி பேர் இந்தியை இரண்டாவது மொழியாகப் பேசுவதாகக் குறிப்பிட்டனர். இவர்களையும் கணக்கிட்டால் இந்தியாவில் இந்தியைப் பிரதானமாகப் பயன்படுத்துவோர் 55% பேர்.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்தி பேசுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றில் மக்கள்தொகை அதிகரிப்பது ஒரு காரணம். இன்னொரு சுவாரசியமான காரணத்தைச் சொல்கிறார், இந்திய மக்கள் மொழி ஆய்வு அமைப்பின் (People’s Linguistic Survey of India) தலைவரான டாக்டர் கணேஷ் டேவி.

‘‘2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இந்தியர்கள் பேசுவதாக 1,383 தாய்மொழிகள் தெரிய வந்தன. அவற்றில் நூற்றுக்கணக்கான சிறிய மொழிகளைத் தனித்தனி குழுக்களாக இணைத்து, அந்தப் பகுதியில் பேசப்படும் பிரதான மொழியின் பட்டியலில் அதைச் சேர்த்தனர். இப்படி 65 மொழி பேசும் மக்கள், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகக் கணக்கில் கொண்டு வரப்பட்டனர். உதாரணமாக, போஜ்புரி மொழியை ஐந்து கோடி பேர் பேசுகின்றனர். ஆனால், அவர்கள் இந்தி பேசுவோராகவே கருதப்படுகின்றனர். இப்படி மற்ற மொழிகளைக் கழித்தால், இந்தி பேசுவோர் எண்ணிக்கை 38 கோடியே வரும்'' என்கிறார் கணேஷ் டேவி.