Published:Updated:

மலேசியா: `பாடப் புத்தகத்தில் பெரியார் படம் இருக்கக் கூடாது` - இந்து சங்கத்தின் எதிர்ப்பால் சர்ச்சை!

பெரியார்
பெரியார்

தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிறிஸ்தவத் தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள்.

மலேசிய இந்து சங்கம், அங்கிருக்கும் தமிழ்ப் பள்ளிகளில் திராவிடக் கொள்கையைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, பத்திரிக்கைச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து அங்கு வாழும் தமிழர்களில் ஒரு பகுதியினரிடையே சர்ச்சை வெடித்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அது தொடர்பான அறிக்கையை மலேசிய இந்து சங்கம், அதிகாரபூர்வமாக மலேசியத் தமிழ் பத்திரிக்கைகளுக்கு அனுப்பியது.

மலேசிய தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி
மலேசிய தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

குறிப்பிட்ட அறிக்கையில், தமிழ்ப் பள்ளிகளில் இந்து சமயப் புறக்கணிப்பும், திராவிட கொள்கையைப் பரப்பும் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி அமைச்சகத்தின்ன் பாடத்திட்டப் பிரிவின் சில அதிகாரிகள் பள்ளிகளில் திராவிட கொள்கைகளைப் பரப்புவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் கூறியிருந்தது மலேசிய இந்து சங்கம். அதோடு, பள்ளி பாட நூலில் தை மாத முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்ற கருத்து திணிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மறைமுகமாக பள்ளிப்பாட புத்தகங்களில் பெரியாரின் கொள்கைகளும் அவரைப்பற்றிய செய்தி திணிப்பும் மேலோங்கி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அச்சங்கம் மிக கடுமையாக எச்சரித்திருந்தது.

அதிர்ச்சியும் கோபமும்...

இந்து சங்கத்தின் இந்தப் பத்திரிக்கைச் செய்தி, மலேசியத் தமிழ் மக்கள் ஒரு பகுதியினரிடம் அதிர்ச்சியையும் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான எதிர்வினைகளை குறிப்பாக, திராவிடக் கொள்கையைப் பின்பற்றுபவர்களும், பெரியார் ஆதரவாளர்களும், தமிழ்ப் பற்றாளர்களும் இந்து சங்கத்தின் இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிவருகிறார்கள்.

மலேசிய இந்து சங்கத்தின் தலைவரான மோகன் ஷான் வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துக்கு, மலேசிய இந்தியர்களின் தாய்க் கட்சியான ம.இ.கா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. பொங்கல் என்பது பண்பாட்டு விழா என்றும், அதற்கு மதச் சாயம் பூச வேண்டாம் என்றும் அந்தக் கட்சி மலேசிய இந்து சங்கத்திடம் வலியுறுத்தியது. மேலும், இந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தக் கட்சி கூறியிருந்தது. ஆனாலும், ம.இ.கா-வைத் தவிர, எந்த ஒரு மதம் சாரா இயக்கமோ அல்லது திராவிட இயக்கமோ இந்து சங்கத்துக்கு எழுத்துபூர்வமான எதிர்வினையை ஆற்றவில்லை. இருப்பினும், பல தனி மனிதர்கள் இந்து சங்கம் மீதான தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்துவருகின்றனர்.

பெரியார்
பெரியார்

``தமிழருக்கான புத்தாண்டு தை முதல்நாள்தான். தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிறிஸ்தவத் தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள். அதற்கு மதச் சாயத்தைப் பூச வேண்டாம்’’ என சமூக ஊடகங்களில் அவர்கள் வலியுறுத்திவருகிறார்கள். இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக்கொண்டு, மலேசிய நாட்டில் தமிழையும் தமிழனையும் ஒருபோதும் வெல்ல முடியாது என்று வெளிப்படையான கோபத்தையும் பலர் பதிவு செய்துவருகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு

இதனைத் தொடர்ந்து மோகன் ஷான் மற்றுமோர் அறிக்கையைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதில் ``சித்திரை முதல் தேதிதான் தமிழர் புத்தாண்டு. அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. தமது இந்தக் கூற்றோடு இந்து மதம் சார்ந்த 13 இயக்கங்கங்கள் உடன்பட்டிருப்பதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். தவிர, தமது சங்கம் பொங்கலுக்கு மதச் சாயம் பூசுகிறது என்று சிலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது’’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மோகன் ஷானின் இந்த மறு அறிக்கையால் இந்தச் சர்ச்சை அங்கு மேலும் நீடிக்கிறது. இதனால், இந்த விவாதம் தீவிரமடைந்துவருகிறது.

மலேசிய இந்து சங்கத்துக்கு நிலையான ஒரு கருத்து இல்லை என்று மோகன் ஷானின் கருத்தை எதிர்ப்பவர்கள் பதிவு செய்துவருகிறார்கள். சில வருடங்கள் வரையில் அரசு ஆதரவின் கீழ் `ஒரே மலேசியா’ எனும் கோட்பாட்டின் கீழ் பொங்கல் பண்டிகையை மதம்-இனம் சாராமல் மலாய்க்காரர்களும் தமிழர்களோடு சேர்ந்து கொண்டாடினர். 2018-ம் ஆண்டில், `பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை. பள்ளிகளில் அதைச் செய்ய அனுமதிக்கக் கூடாது; மலாய் மாணவர்கள் பொங்கல் பண்டிகளில் ஈடுபடக் கூடாது’ என்ற மலாய் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு இதே இந்து சங்கத்தைச் சேர்ந்த மோகன் ஷான், ` பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை அல்ல, அது பண்பாட்டு விழா` என்று அறிக்கைவிட்டிருந்தார். தான் கூறிய கூற்றுக்கு எதிராக இப்போது அவரே மாற்றிப் பேசுகிறார் என்று பலர் விமர்சிக்கின்றனர்.

பெரியார்
பெரியார்

பாடத்திட்டம்

மலேசிய அரசு பாடத்திட்ட வழக்கப்படி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய பாடப் புத்தகம் தயாரிக்கப்படும். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தில், தமிழர்களுக்குப் பங்காற்றிய மூன்று அறிஞர்கள் குறித்துச் சிறு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது. அதில் 10 வரிகளில் பெரியார் குறித்த அறிமுகம் எழுதப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தப் பாடப்புத்தகம் காலாவதியாகும் நிலையில், பெரியார் குறித்த தகவல்கள் பாடப் புத்தகத்தில் இருப்பது சமயத்துக்கு எதிரானது என்று மலேசிய இந்து சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலைப்பாடு தொடர்பாக மலேசியத் தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்து சங்கத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவித்துவருகிறார்கள். பொங்கல் தமிழர் திருநாள், அது தமிழர்களின் புத்தாண்டு என்று தொடர்ந்து பலர் குரல் எழுப்பிவருகின்றனர். இந்த எதிர்ப்புக் குரல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

``இந்து சங்கம் குற்றம் சுமத்தியிருப்பதுபோல எந்த எதிர்மறைக் கருத்தும் கல்வி பாடத்தில் இல்லை என்றும், அது கூறியிருப்பதுபோல பள்ளிப் பாடப்புத்தகத்தில் பொங்கல்விழா தமிழர்களின் புத்தாண்டு என்ற கருத்தை மாணவர்கள் மத்தியில் திணிப்பது போன்ற எந்தப் பதிவும் இல்லை’’ என்று கல்வியாளர்களும் தங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.

பெரியார், அம்பேத்கரின் முன்னோடி... அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

மோகன் ஷான் கூறுவது என்ன?

``இறையாண்மையைப் போற்றும் மலேசியத் திருநாட்டில் இந்து சமயத்துக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவர்களின் சித்திரத்தையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் பாடத்திட்டத்தில் இணைப்பது என்பது மிகக் கடுமையாகப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம். 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஈ.வெ.ராமசாமி, அன்னை தெரேசா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், காவி உடையில் காட்சியளிக்கும் சுவாமி விவேகானந்தர் வெள்ளை உடையில் இருப்பது போன்று காட்டப்பட்டதன் உள்நோக்கம்தான் என்ன?" என்று மோகன் ஷான் கேள்வி எழுப்புகிறார்.

யோகி சந்துரு, விகடன் இணையதளத்துக்காக மலேசியாவிலிருந்து...

அடுத்த கட்டுரைக்கு