Published:Updated:

தொல்லியல் மேடு... கம்பநாடு... சடையப்ப வள்ளல் வீடு... கதிராமங்கலம் வரலாற்றுப் பயணம்!

கதிராமங்கலம்
பிரீமியம் ஸ்டோரி
கதிராமங்கலம்

பயணம்

தொல்லியல் மேடு... கம்பநாடு... சடையப்ப வள்ளல் வீடு... கதிராமங்கலம் வரலாற்றுப் பயணம்!

பயணம்

Published:Updated:
கதிராமங்கலம்
பிரீமியம் ஸ்டோரி
கதிராமங்கலம்

கதிராமங்கலம் என்றதுமே ஓ.என்.ஜி.சி., மீத்தேன் திட்டங்களை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டம்தான் நினைவுக்கு வரும். விவசாய நிலங்களைப் பாதுகாக்க, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மக்கள் நடத்திய சமரசமற்ற போராட்டம் நாடறிந்தது. ஆனால், ``கதிராமங்கலம் மண்ணுக்கடியில் வெறும் எரிவாயு வளங்கள் மட்டுமே புதைந்து கிடக்கவில்லை. கம்ப ராமாயணத்தின் 900 ஆண்டு வரலாற்றுத் தடயங்களும் சேர்ந்தே மறைந்துள்ளன. இலக்கியக் கதைகளும், தொல்லியல் மேடுகளுமாக நிரம்பியது கதிராமங்கலம்'' என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். தஞ்சை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில், காவிரியை எல்லையாகக் கொண்ட கதிராமங்கலத்துக்கு ஒரு விசிட் அடித்தோம்.

காவிரி அன்னை, கதிராமங்கலத்தை அடைந்தவுடன் ஏனோ வடக்கு நோக்கி சில தூரம் செல்கிறாள். இந்த ஊரில் அவள் பெயர், வடகாவிரி. அதைக் கடந்து ஊருக்குள் நுழைந்ததும், ஓ.என்.ஜி.சி எரிவளிக் கிணற்றின் இயக்கம் இரைச்சலாகக் கேட்டது. `காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், பழைய கிணறுகள் எப்போதும்போல் இயங்கும்' என்று அரசு அறிவித்துவிட்டதால், முள்வேலிகளுக்குள் முன்பைவிட சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருந்தது அது.

தொல்லியல் மேடு... கம்பநாடு... சடையப்ப வள்ளல் வீடு... கதிராமங்கலம் வரலாற்றுப் பயணம்!

கண்ணகி நடந்த பாதை

கண்ணகி மதுரை நோக்கி நடந்து சென்ற பாதையான பூம்புகார் சாலை, கதிராமங்கலத்தின் பிரதான சாலையாக உள்நுழைகிறது. ஊர்க்காரரான வெங்கடேஷ், “வாங்க, ஒவ்வொரு இடமா கூட்டிட்டுப் போறேன்” என்று அழைத்துச் சென்றார். நாம் போன முதல் இடத்தில், மரத்தடியில் கிடத்திவைக்கப்பட்டிருந்தன இரண்டு சுடுமண் சட்டிகள்.

அழகிய வேலைப்பாடுகள்கொண்ட கலைநயமிக்க பொக்கிஷங்கள் அவை. ஒரு சட்டியில் தலைவிரி கோலமாக, ஆக்ரோஷமாக நடந்துவரும் ஒரு பெண்ணின் உருவம். இன்னொரு சட்டியில், ஒரு கையில் குதிரையும், மறுகையில் ஆயுதமும்கொண்டு, கம்பீரமாக நிற்கும் படைவீரனின் உருவம். பழனிச்சாமி என்பவரின் இடம் அது. ``பத்து வருஷத்துக்கு முன்னாடி செங்கல் சூளை போடுறதுக்காக மண்ணு எடுக்கக் குழி வெட்டினோம். உள்ளருந்து சட்டியும் ஓடுமா வந்துச்சு. நிறுத்திப்புட்டு என்ன ஏதுனு பார்த்தோம். அதுல உடையாம முழுசா இந்த ரெண்டு சட்டிங்க கிடைச்சுது. மண்ணை சுத்தம் பண்ணிட்டுப் பார்த்தோம். எங்க குலசாமியே மண்ணுலருந்து வந்துருக்கு. அதுக்கப்புறம் ஏதேதோ குழிக்குள்ள இருந்துச்சு. ஏதாவது சாமிக்குத்தம் ஆகிடும்னு மண்ணை இழுத்துப்போட்டு மூடிட்டோம். பக்கத்துல மைனா வாய்க்கால்ல நிறைய மண்சட்டிக உடைஞ்சு கெடக்கு. பசங்க சில்லுக்கோடு வெளையாடுவாங்க'' என வெள்ளந்தியாகச் சொன்னார் பழனிச்சாமி.

கதிராமங்கலத்தைப் பற்றி இன்னும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொல்லியல் மேடு... கம்பநாடு... சடையப்ப வள்ளல் வீடு... கதிராமங்கலம் வரலாற்றுப் பயணம்!

சடையப்ப வள்ளலுக்கு விழா

கம்பராமாயணம் என்றதும் நினைவுக்கு வருபவர், சடையப்ப வள்ளல். அவருக்கு இங்கு விழா எடுத்தவர், ஓய்வுபெற்ற ஆசிரியர் ராதாகிருஷ்ணன். சடையப்ப வள்ளல் இலக்கிய நற்பணிமன்றத்தை ஏற்படுத்தி, 1986 முதல் தொடர்ந்து 20 ஆண்டுகள் கோடைவிழா நடத்தியவர்களில் இவரும் ஒருவர். அவரைச் சந்தித்தோம். 85 வயதிலும் நம்மைச் சிரித்து வரவேற்றார்.

``கம்பருக்கு இடம் கொடுத்து, கல்வி கொடுத்து, பண்ணையில வேலை கொடுத்து எல்லாமாகவும் இருந்திருக்கார், சடையப்ப வள்ளல். கம்பருக்குக் கவிபாடும் திறமை இருக்கறதை அறிஞ்சு, அவரை ராமாயணம் எழுத அறிவுறுத்தியதும் வள்ளல்தான். ராமாயணம் எழுதி முடிக்கிற வரைக்கும் எல்லா உதவிகளையும் செஞ்சுருக்கார். அந்த நன்றிக்காகத்தான் கம்பர் தன்னோட ராமாயணத்துல, தன் பெயரை ஒரு இடத்துலகூட பதிவு பண்ணாம, நிறைய பாட்டுல சடையப்ப வள்ளலைச் சம்பந்தப்படுத்தியே புகழ்ந்து எழுதியிருப்பார். ராமாயணத்தை அரங்கேற்றம் பண்ணினதே, இந்த ஊர்ல சடையப்ப வள்ளல் முன்னிலையில்தான்'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தேரழுந்தூரில் பிறந்த கம்பர் எப்படி கதிராமங்கலம் வந்தார்? ``இங்கிருந்து சில மைல் தூரத்துலதான் தேரழுந்தூர் இருக்கு. அந்த ஊர்ல இருக்கும் ஆமருவியப்பன் கோயில் திருவிழாவுக்கு, சடையப்ப வள்ளல் போனப்ப, கோயிலின் கொடிக்கம்பத்துக்கு அடியில, ஆதரவில்லாம ஒரு சிறுவன் படுத்துக் கிடக்குறான். விசாரிச்சதுல, அந்தச் சிறுவனுக்கு பெற்றோர் இல்லைனு தெரியவருது. அதனால இரக்கப்பட்ட சடையப்ப வள்ளல், அந்தச் சிறுவனை இங்கே அழைச்சுட்டு வந்து, தன் ஆதரவுலேயே வளர்க்குறார். அவன்தான் எதிர்காலத்துல, கவிச்சக்கரவர்த்தி கம்பரா ஆனான். கம்பராமாயணம் எனும் பெருங்காவியம் படைச்சான். கம்பர் குடியிருக்க கதிராலே கூரைவேய்ந்த வீட்டை சடையப்ப வள்ளல் கட்டிக்கொடுத்தார். அதனாலதான் திருவெண்ணெய் நல்லூர்ங்கிற இந்த ஊரோட பேரு, `கதிர் வேய்ந்த மங்கலம்' என்றாகி பின்னாடி, கதிராமங்கலம் என மருவியது'' என்கிறார் அவர்.

தொல்லியல் மேடு... கம்பநாடு... சடையப்ப வள்ளல் வீடு... கதிராமங்கலம் வரலாற்றுப் பயணம்!

எது திருவெண்ணெய் நல்லூர்?

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு திருவெண்ணெய் நல்லூர் உள்ளது. சடையப்ப வள்ளலின் வரலாற்றில் அந்த ஊரை இணைக்கிறார்கள் சிலர். ஆனால், ``கதிராமங்கலத்தோட ஆதிப்பெயர்தான், திருவெண்ணெய் நல்லூர். சடையப்ப வள்ளல் பிறந்த ஊரும், கம்பர் வாழ்ந்த ஊரும் இதுதான். இதுதான் திருவெண்ணெய் நல்லூர்னு சொல்ல இந்த மண்ணுல ஏகப்பட்ட ஆதாரங்கள் கொட்டிக்கிடக்குது. கம்பர் வழிபட்ட ‘வயிரபுர காளி’, படைக்குதிரைகள் மேய்ந்த ‘குதிரை மேய்ந்தான் வயல்’, இறந்த குதிரைகளை பாட்டுப்பாடி உயிர்த்தெழவெச்ச ‘எழுமாபள்ளம்’, அரண்மனை இருந்த ‘அரண்மனைத் தெரு’ என பலதும் இங்கேதான் இருக்கு.

முக்கியமா ஓட்டுகா திடல். அங்கேதான் சடையப்ப வள்ளலின் பண்ணை வீடு இருந்தது. படையெடுப்புல எல்லாம் இடிக்கப்பட்ட அப்புறம், அந்த இடமே ஓடும் கல்லுமா கிடந்ததுனால `ஓடுகல்திடல்'னு பெயர் வந்து, பேச்சு வழக்குல `ஓட்டுகா திடல்’னு மாறிட்டுது. இப்போ போனாலும் நீங்க அதைப் பாக்கலாம்'' என்றார் ராதாகிருஷ்ணன். அவர் பட்டியலிட்ட இடங்களை நோக்கி நகர்ந்தோம்.

தொல்லியல் மேடு... கம்பநாடு... சடையப்ப வள்ளல் வீடு... கதிராமங்கலம் வரலாற்றுப் பயணம்!

குதிரை மேய்ந்தானும் எழுமா பள்ளமும்!

அங்கிருந்து பத்து நிமிட நடையில் கம்பர் வழிபட்ட வயிரபுர காளியம்மன் கோயில் இருந்தது. அதன் அருகே நின்று, குதிரைமேய்ந்தான் வயலையும், எழுமா பள்ளத்தையும் பார்த்தோம். ``ஒருமுறை கம்பர் காவல்காத்து வந்த சடையப்ப வள்ளலின் வயலில், பக்கத்து சிற்றரசனான காளிங்கராயனின் படைக் குதிரைகள் மேய்ந்துவிட்டன. வயிரபுர காளி கோயிலில் படுத்திருந்த கம்பர் கோபத்தில், `வாய்த்த வயிரபுர மாகாளியம்மே...' என்று காளியை வேண்டி, `காளிங்கனேறு குதிரை மாளக் கொண்டு போ' என்ற பாடலைப் பாட, குதிரைகள் அனைத்தும் மாண்டுபோயினவாம். இந்த விஷயமறிந்து ஓடோடிவந்த காளிங்கராயன், நீதி கேட்டு சடையப்ப வள்ளலிடம் முறையிட்டான். பின் சடையப்ப வள்ளலின் வேண்டுகோளுக்கிணங்க, கம்பர் அதே பாடலின் கடைசிவரியை மாற்றி `குதிரை மீளக் கொண்டுவா' எனப் பாடி, இறந்த குதிரைகள் உயிர்பெற்றெழச் செய்தாராம்.

குதிரைகள் மேய்ந்த இடம்தான் `குதிரைமேய்ந்தான்' வயல் எனவும், இறந்து உயிர்த்தெழுந்த வயலை `எழுமா பள்ளம்' எனவும் அவ்வூர் மக்கள் இன்றளவும் அழைத்துவருகின்றனர்.

பண்ணைக்குட்டையில் உறங்கும் உறைகிணறு

அருகிலேயே ஒரு வயலில் பண்ணைக்குட்டை இருந்தது. அந்த இடத்தின் உரிமையாளர் ரவி, அதற்குள் புதைந்திருக்கும் வரலாற்றைச் சொன்னார். ``இந்தப் பண்ணைக் குட்டையை வெட்டி ஆறு மாசம் இருக்கும். நாங்க தோண்டும்போது இதுக்குள்ள வளையம் மாதிரி அடுக்கடுக்கா பானைகள் கிடந்துச்சு. இப்பவும் இந்தக் குட்டைக்குள்ளதான் கிடக்கு. தண்ணி நிரம்பிவிட்டதால இப்போ உங்களால பார்க்க முடியாது'' என்றபடியே குட்டையின் மறுகரையைக் காட்டினார்.

பாதி கரைமண்ணில் புதைந்தபடி, மீதி தண்ணீரில் மூழ்கியபடி இருந்தது ஏதோ சுடுமண் பாத்திரம். அருகில் சென்று பார்த்தோம். அது பானை இல்லை, உறைகிணறு. குட்டையில் குதித்த ரவி, நீருக்கடியில் சென்று, உடைந்த உறைகிணறு வளையங்களை எடுத்து மேலே உயர்த்திக் காட்டினார்.

இவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை? இந்த மண்ணின் வரலாற்றைத் தேடி ஆவணப்படுத்திவரும் பரசுராமன், புகழேந்தி இருவரிடமும் பேசினோம்.

``கம்பர் வாழ்ந்து முடிந்த காலமும், மாலிக் கபூர் தென்னிந்தியா மீது படையெடுத்ததும் ஒரே காலகட்டம்தான். தமிழ்நாட்டில் பல கோயில்களைச் சேதப்படுத்தி செல்வங்களைக் கொள்ளையடித்த மாலிக் கபூர், திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குச் செல்லும்போது வழியில் இருந்த கதிராமங்கலத்தின் கோயில்கள், சடையப்ப வள்ளல் அரண்மனை ஆகியவற்றில் இருந்த செல்வங்களைச் சூறையாடியதோடு, முற்றிலுமாகச் சிதைத்தார். அந்த வரலாற்றுக்கால சுவடுகள்தான் கதிராமங்கலத்தின் வயல் வரப்புகளிலும், குளம் குட்டைகளிலும் சிதறிக்கிடக்கின்றன'' என பரசுராமன் தெரிவித்தார்.

தொல்லியல் மேடு... கம்பநாடு... சடையப்ப வள்ளல் வீடு... கதிராமங்கலம் வரலாற்றுப் பயணம்!

ராமாயணம் அரங்கேறிய இடம்

தமிழாசிரியர் புகழேந்தி ஒரு சுவாரசியமான தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“கம்பர் திருவரங்கத்தில்தான் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்ததாகவே பெரும்பாலானோர் கூறுகின்றனர். உண்மையில், கம்பர் தனது ராமாயணத்தை சடையப்ப வள்ளல் முன்னிலையில், திருவெண்ணெய்நல்லூர் ஓட்டுகா திடலில் இருந்த மூல பெருமாள் கோயிலில்தான் அரங்கேற்றினார். இதை, `அறு மாக்கதை சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே' என்ற ராமாயணப் பாடல்வரிகள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். இராசாமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் கலைக்கோவன், `ராமாயணம் திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ததற்கான வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுப் பதிவுகள் இல்லை' என்கிறார். கம்பராமாயணம் உருவானதும் அரங்கேறியதும் கதிராமங்கலத்தில்தான்'' என்றார்.

கம்பருக்கும் சடையப்பருக்கும் சிலை!

அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஓட்டு்கா திடலை அடந்தோம். கடல் நடுவே ஒரு மணல் தீவுபோல, வயல்களின் நடுவே ஒரு மண்திட்டாக இருந்தது இது. சடையப்ப வள்ளலின் பண்ணை வீடு இருந்த இடம் இது என்கிறார்கள். இங்கு நெற்கதிரால் கூரைவேயப்பட்ட மண்டபம் ஒன்றில் நெற்கதிரோடு சடையப்ப வள்ளலும், ஓலைச்சுவடிகளோடு கம்பரும் சிலைகளாக நிற்கின்றனர். அத்தனை தத்ரூபமாக உருவமும் உயிரும் கொடுத்த சிற்பி ராஜேஷும், ஓவியர் சங்கரும் அருகில் இருந்தனர்.

“எங்கள் ஊர் வரலாற்றை மீட்டெடுக்கும் முன்னெடுப்புதான் இது. மண்ணில் புதையுண்டு, காட்டில் மறைந்திருத்த சிலைகளையெல்லாம் ஒவ்வொன்றாக மீட்டெடுத்துவருகிறோம். ஓட்டுகா திடலில் கம்பர் வழிபட்ட மூலப் பெருமாள் சிலைக்கும், சடையப்ப வள்ளல் சமாதியான ஆத்மலிங்கத்துக்கும் சேர்த்து தனியே கோயில் கட்டியிருக்கிறோம். விரைவில் குடமுழுக்கு நடத்தவிருக்கிறோம்” என்றார்கள் நம்மிடம்.

இந்தத் திடலின் இடப்புறமிருக்கும் வயல்பகுதியை `கழனிகுட்டை' என்றும் வலப்புறப்பகுதியை `கஞ்சிகுட்டை' என்றும் அழைக்கிறார்கள். ``ஊருக்கே அன்னப் படையல் வைக்கும் சடையப்ப வள்ளல் வீட்டின் அடுப்பு ஒருபோதும் அணைவதில்லை. அப்படி அனுதினமும் சோறு பொங்குவதற்கு முன்பாக அரிசி களைந்த கழனித் தண்ணீர் ஓடி விளைந்த நிலம் என்பதால், இதற்கு `கழனிகுட்டை' என்றும், சோறுபொங்கிய பிறகு வடித்த கஞ்சி ஓடி விளைந்த நிலம் என்பதால், அதற்கு `கஞ்சிகுட்டை' என்றும் பெயர்'' என விளக்கமளித்தார், அங்கிருந்த செல்லப் பெருமாள்.

``எங்கள் வளத்தைக் கெடுக்கும்விதத்தில் மீத்தேன், எரிவாயுவுக்காக ஊரைத் தோண்டுவதற்கு பதில், எங்கள் வரலாற்றை மீட்டெடுக்கும்விதத்தில் தொல்லியல் ஆய்வுக்காக ஊரைத் தோண்டினால் நன்றாக இருக்கும்!'' என்கிறார் ஸ்தபதி ஜெயராமன்.

கதிராமங்கலத்தில் புதைந்திருக்கும் வரலாற்றை அகழாய்வு செய்ய வேண்டும்.