பிரீமியம் ஸ்டோரி

ஆங்கிலேயரை எதிர்த்துக் கலகக்குரல் எழுப்பிய வீரபாண்டிய கட்டபொம்மனைத் தெரியும். அவரின் தம்பி ஊமைத்துரைக்கும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றித் தெரியுமா? அதைத் தெரிந்துகொள்ள, வரலாற்றின் இருநூறு வருடங்களை ரீவைண்ட் செய்ய வேண்டும்...

பாளையங்கோட்டை என்பது பாளையக்காரர்களின் கோட்டை இருந்த இடம். பிற்காலப் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டையில் இப்போது மிச்சம் இருப்பது, அந்தக் கோட்டையின் மேற்கு வாயிலாக இருந்த இடம். அது மேடை போலீஸ் ஸ்டேஷன் என்ற பெயரில் இருக்கிறது. அதேபோல, கோட்டையின் கிழக்கு வாசலாக இருந்த இடம் தற்போது அரசு அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கோட்டையின் கிழக்கு வாசல் அமைந்திருந்த பகுதியைச் சிறைச்சாலையாக மாற்றினர். அதில்தான் ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டார். அந்தத் தனிமைச் சிறையிலிருந்து அவர் 1799 ஜனவரி 1-ம் தேதி தப்பிச் சென்றுள்ளார். பலத்த பாதுகாப்புடன் சிறை வைக்கப்பட்டிருந்த அவர் அங்கிருந்து தப்பிச் சென்றது எப்படி என்பது, அதிசய மர்மமாகவே இருக்கிறது.

வரலாற்றின் வாசலாக இருக்கும் ஊமைத்துரை சிறை!

அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியரான சிவ.சத்தியவள்ளி, கடந்த கால வரலாற்றுச் சம்பவங்கள் பற்றி நம்மிடம் பேசத் தொடங்கினார். “நெல்லையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அதேபோல, வரலாற்றுச் சம்பவங்களின் சாட்சியமாகத் திகழும் இடங்களும் இருக்கின்றன. இந்த அருங்காட்சியகமும் ஒரு வரலாற்றைத் தன்னுள்ளே வைத்திருக்கிறது. இங்குள்ள ஓர் அறையில்தான் ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டிருந்திருக்கிறார். சூரிய வெளிச்சமே வர முடியாத அந்த அறையின் உள்ளே கை விலங்குடன் ஊமைத்துரையை அடைத்திருக்கிறார்கள்.

இப்போதும் அந்த அறையின் உள்ளே சென்றாலே கும்மிருட்டாக இருக்கும். தனிமையில் அந்தச் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஒற்றர்கள் துணையுடன் எப்படியோ தப்பிச் சென்றுள்ளார். கட்டபொம்மனைத் தூக்கிலிட்டதும், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையையும் ஆங்கிலேயர்கள் தகர்த்துவிட்டார்கள். ஆங்கிலேயரின் சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரை, பாஞ்சாலங்குறிச்சியில் மீண்டும் கோட்டையைக் கட்டி எழுப்பினார். அருகில் உள்ள நட்டாத்தி என்ற கிராமத்து மக்களின் உதவியோடு கடுக்காய், பதநீர், கருப்பட்டி போன்றவற்றுடன் மிக உறுதியாக அவர் மீண்டும் கோட்டையைக் கட்டி எழுப்பியதோடு, அண்ணனின் ஆட்சியையும் தொடர்ந்துள்ளார்.

அவரை மீண்டும் கைது செய்ய ஆங்கிலேயர்கள் முயன்றனர். அதில் பல ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவருடன் போரிட்டு மடிந்த ஆங்கிலேயர்களின் கல்லறைகள் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு அருகில் இப்போதும் இருக்கின்றன. அதில், அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களும் இருக்கின்றன.

வரலாற்றின் வாசலாக இருக்கும் ஊமைத்துரை சிறை!

பிரிட்டிஷ் காலனியாதிக்க எதிர்ப்பில் தீவிரம் காட்டிய ஊமைத்துரை, அவர் வாழ்ந்த காலத்தில் சுதந்திர வேட்கையுடன் இருந்த மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, கேரள வர்மா எனப் பலரையும் ஒன்றிணைத்துள்ளார். ஆனாலும், 1801-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரைக் கைது செய்த ஆங்கிலேயர்கள், அவர் மீண்டும் கட்டி எழுப்பியிருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் முன்பாகவே அவரைத் தூக்கிலிட்டதுடன் கோட்டையையும் தகர்த்தனர்.

பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் ஊமைத்துரை சிறைவைக்கப்பட்ட இடம் தவிர, பல்வேறு பொருள்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய பீரங்கிக் குண்டுகள், சுருள்வாள் போன்றவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கிறோம். இந்த இடத்துக்கு வருவோருக்கு ஊமைத்துரையின் வரலாறு தெரியவேண்டும் என்பதற்காக, முப்பரிமாணத்தில் சிறப்பு ஒலி-ஒளிக்காட்சி நடத்தப்படுகிறது” என்றார்.

பழங்காலக் கட்டட பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தின் பல இடங்களில் உள்ள கற்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கிடைத்த தொன்மையான பொருள்கள், சிலைகள், புடைப்புச் சிற்பங்கள், சுடுமண் பொம்மைகள், பழங்கால நாணயங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள், போர்க்கருவிகள், உழவுக் கருவிகள், பழங்குடி மக்களின் இசைக்கருவிகள் என ஏராளமான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், மாவட்டம் முழுவதிலும் கிடைத்த நடுகற்கள், சிலைகள், பாண்டிய நாட்டின் பழங்குடிகள் வேட்டைக்கருவியாகவும் போர்க்கருவியாகவும் பயன்படுத்திய மரி, வளரி ஆகியவற்றையும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

வரலாற்றின் வாசலாக இருக்கும் ஊமைத்துரை சிறை!

அருங்காட்சியகம் அமைந்துள்ள இடத்தில் இருந்து பாளையங்கோட்டையின் மேற்கு வாயிலாக இருந்த மேடை போலீஸ் ஸ்டேஷன் வரையிலும் குகைப்பாதை இருந்ததும் தெரியவந்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி ஊமைத்துரை தப்பியிருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது. இங்குள்ள கிணறு ஒரு காலத்தில் பாளையங்கோட்டை மக்களுக்கான குடிநீர் ஆதாரமாகத் திகழ்ந்தது.

ஆங்கிலேயர்களின் நிர்வாக நகரமாக இருந்த பாளையங்கோட்டையில், கடந்த கால வரலாற்றைத் தன்னுள் சுமந்தபடி கம்பீரமாகக் காட்சியளிக்கும் அரசு அருங்காட்சியகத்துக்கு முன்பெல்லாம் மக்கள் வருவதே இல்லை. இப்போது மாவட்ட நிர்வாகம் இங்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக கேலரி கட்டிக் கொடுத்துள்ளதால், மாலை நேரங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதனால், இப்போது இங்கே பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்கிறார்கள்.

அருங்காட்சியகத்துக்குள் சென்றுவிட்டு வெளியே வரும்போது கால இயந்திரத்தில் ஏறிக் கடந்த காலத்துக்குள் சென்று திரும்பும் உணர்வு ஏற்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு