Published:Updated:

சிம்லா ஸ்பெஷல்! - உல்லாசபுரி உருவான வரலாறு

சிம்லா ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
சிம்லா ஸ்பெஷல்!

வரலாறு

சிம்லா ஸ்பெஷல்! - உல்லாசபுரி உருவான வரலாறு

வரலாறு

Published:Updated:
சிம்லா ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
சிம்லா ஸ்பெஷல்!
அதாகப்பட்டது... பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே, சிம்லாவிலே இருந்த ஒரே ஓர் அடையாளம் என்றால், அது அந்த ஆஞ்சநேயர் ஆலயம்தான். ஜக்கு மந்திர் என்று பெயர். அந்த மலையின் பெயர்கூட ஜக்குதான். சஞ்சீவினி மலையைத் தேடிவந்த அனுமன், இந்த இடத்தில் இளைப்பாறிவிட்டுச் சென்றதாகக் கதை உண்டு. கோயிலுக்கு அருகில் இரண்டு, மூன்று குடிசைகள். அந்தப் பசுமையான மலைப்பிரதேசத்துக்குச் சரியான பெயர்கூட வைக்கப்படவில்லை. காளியின் இன்னொரு அவதாரமாகக் கருதப்படும் சியாமளா தேவி, அங்கு உதித்ததாக ஓர் ஐதீகம். ‘சியாமளா’ என்ற பெயரே, பின்னாளில் உருகி, மருகி ‘சிம்லா’ ஆனதாக நம்பப்படுகிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1817-ம் ஆண்டில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சில ராணுவ வீரர்கள் அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். அந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, கூடாரமடித்து சில நாள்கள் தங்கினார்கள். சிம்லாவில் குடியிருப்புகள் தொடங்கியது அப்போதிருந்துதான் என்கின்றன பிரிட்டிஷாரின் ஆவணங்கள்.

சிம்லாவானது எப்படி கிழக்கு இந்திய கம்பெனியாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்ற கதையும் சற்று விசேஷமானதுதான். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நேபாளத்தை ஆண்டு வந்தவர் கூர்க்காக்களின் அரசராகிய பிரித்வி நாராயண் ஷா. எல்லைப் பிரச்னை ஏகத்துக்கும் இருந்தது. டெஹ்ரி கர்வால் என்ற உத்தரப்பிரதேச சமஸ்தானம், கூர்க்காக்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது.

கர்வால் மகாராஜா, கிழக்கிந்திய கம்பெனியாரின் உதவியை நாடினார். கூர்க்காக்களால் பாதிக்கப்பட்ட வேறு சிலரும் கூட்டணியில் சேர்ந்துகொண்டார்கள்.

நாடு பிடிக்க வந்த நயவஞ்சக கம்பெனிக்காரர்கள், பரவசமாகப் படைகளோடு கிளம்பினார்கள். ஆங்கிலேயர்களும் நேபாளியர்களும் மோதிய கூர்க்கா போர் (Anglo-Nepalese War) ஆரம்பமானது. சுமார் இரண்டு வருடங்கள் இழுத்த போரின் இறுதியில் கூர்க்காக்கள் சரணடைந்தார்கள். 1816, மார்ச் 4 அன்று கம்பெனிக்கும் நேபாளத்துக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் (Treaty of Sugauli) ஒன்று கையெழுத்தானது. அதன்படி கூர்க்காக்கள் ஆக்கிரமித்திருந்த கர்வால், சிக்கிம், தராய், குமான் பகுதிகள் எல்லாம் இனி கம்பெனியாருக்குச் சொந்தம். அதற்குரிய நிவாரணத் தொகையை நேபாளத்துக்கு கம்பெனி வழங்கிவிடும். கர்வால் மகாராஜா நொந்துபோய் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டார். அவரது சமஸ்தானத்தின் பெரும்பாலான பகுதிகள் கம்பெனியார் வசமானது. அதில் சிம்லாவும் அடக்கம்.

1819. பிரிட்டிஷ் அரசு துணைத் தூதர் ரோஸ், சிம்லாவுக்கு வந்தார்; பார்வையிட்டார்; மர வீடு ஒன்றைக் கட்டிக் கொஞ்ச மாதங்கள் குளுகுளுவென இருந்துவிட்டுப் போனார். அவரைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு அதே பதவியில் வந்தவர் சார்லஸ் கென்னடி. வந்தவர், முதல் வேலையாக கல்வீடு ஒன்றைக் கட்டிக் கதகதவென வாழ ஆரம்பித்தார். அது கென்னடி ஹவுஸ் என்றழைக்கப்பட்டது.

சிம்லா ஸ்பெஷல்! - உல்லாசபுரி உருவான வரலாறு

சிம்லாவின் ஜிலுஜிலு புகழ் கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டிஷாரிடையே பரவ ஆரம்பித்தது. வெப்ப நகரங்களான கல்கத்தா, மெட்ராஸ், பம்பாயில் தங்கிப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷார் பலருக்கு அந்த சீதோஷ்ண நிலை ஒத்துவரவில்லை. ஏதாவது மலைப்பிரதேசத்துக்குச் சென்று வாழ்க்கையை அனுபவிக்க முடியாதா என்று ஏங்கிக்கிடந்தார்கள். 1830-களில் கோடைக்காலத்தில் சிம்லாவில் பிரிட்டிஷாரின் வரத்து அதிகமானது.

சிம்லாவுக்குள் வளர்ச்சி ஆரம்பமானது. ஆனால், சிம்லாவை வந்தடைய முறையான பாதை என்று எதுவும் இல்லை. பாவப்பட்ட ஏழை கிராம மக்கள்தாம் துரைமார்களைப் பல்லாக்குகளில் தூக்கிக்கொண்டு திரிந்தார்கள். குதிரைகளும் அலைந்தன. 1837-ம் ஆண்டில் பிரிட்டிஷ் குயினாகப் பதவியேற்றிருந்த விக்டோரியாவைக் கௌரவப்படுத்தும் வகையில், கம்பெனியார் சிம்லாவில் நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்தார்கள். அந்தத் தொடர் கலைநிகழ்ச்சிகள் மூலம் திரப்பட்ட நிதி கொண்டு, பிரிட்டிஷார் உள்ளூர்ப் பெண் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். (பின்னாள்களில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.) வேறு சில நற்காரியங்களும் நடந்திருக்கின்றன. கூடவே கேளிக்கைகளின் தலைநகரமாக சிம்லா மாறியதும் அதற்குப் பிறகுதான். வேடிக்கை, விளையாட்டு, வேட்டை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் - சிம்லாவில் பெருகியது.

‘Too Hot Dude! இப்போ சிம்லா போனா, டக்கரான பொண்ணுங்ககூட டேட் பண்ணலாம். லவ் செட் ஆனா, மேரேஜ்கூட பண்ணிக்கலாம். வர்றியா?’ - இப்படித் தங்கள் இணையைத் தேடி வரும் ஐரோப்பிய இளசுகளின் கூட்டம் அதிகரித்தது. அவர்களைக் குறிவைத்து வரும் வியாபாரிகளும் அதிகரித்தார்கள். இந்திய சமஸ்தானங்களின் மாண்புமிகு மகாராஜாக்களும் குடும்பத்தோடோ அல்லது துணைக் குடும்பத்தோடோ அல்லது ஐரோப்பியப் பெண் தோழிகளுடனோ சிம்லா விஜயம் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் கோடையில் சிம்லாவின் மக்கள் தொகை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது.

1857, மே 12. நாடெங்கும் சிப்பாய்கள் கலகத்தில் குதித்த செய்தி சிம்லாவின் காதுகளுக்கும் வந்தடைந்தது. அது கோடை என்பதால் ஐரோப்பியர்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. அங்கே கலகங்கள் ஏதும் வெடிக்கவில்லை. அது பிரிட்டிஷாரை யோசிக்க வைத்தது. ‘அட, ரொம்பப் பாதுகாப்பான இடமாகத் தோன்றுகிறதே. வருடம் முழுவதும் கல்கத்தாவில் அந்த வறட்டு வெயிலில் கிடந்து கஷ்டப்பட வேண்டுமா? இப்போதே பாதிப்பேர் கோடையில் சிம்லாவுக்கு வந்துவிடுகிறார்கள். பேசாமல் சிம்லாவை நமது கோடைக்காலத் தலைநகரமாக மாற்றிக்கொண்டால் என்ன?’ - பல தரப்புகளில் இருந்தும் ஆதரவுக் குரல் கிளம்பியது.

சிம்லா ஸ்பெஷல்! - உல்லாசபுரி உருவான வரலாறு

1864-ம் ஆண்டில் வைஸ்ராயாக இருந்த ஜான் லாரன்ஸ், சிம்லாவை இந்தியாவின் கோடைக்காலத் தலைநகரமாக அறிவித்தார். ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் சிம்லா திருவிழாச் சந்தையாகக் களைகட்ட ஆரம்பித்தது. வைஸ்ராய் முதல் சிறிய அதிகாரி வரை பெட்டியும் மப்ளரும் கட்டிக்கொண்டு சிம்லா வந்திறங்கினார்கள். மகாராஜாக்கள் பலருக்கு குஷியோ குஷி. உத்தியோக நிமித்தமாக உல்லாசபுரிக்குச் செல்ல வேண்டுமென்றால் கசக்குமா என்ன!

கல்காவிலிருந்து சிம்லாவுக்குச் செல்ல மலைப்பாதையானது 1856-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. குதிரையில் அல்லது கழுதையில் செல்லலாம். அல்லது அவை இழுத்துச் செல்லும் சிறிய வண்டிகளில் செல்லலாம். டோலியும் அதைத் தூக்கிச் செல்ல சில கூலியாள்களும் கிடைத்தால், ஜோராக உட்கார்ந்து செல்லலாம். வேறு வழி கிடையாது. ஆள்களுக்குச் சரி, பொருள்களுக்கு? சிம்லாவில் வாழத் தேவையான முக்கால்வாசிப் பொருள்களை கல்காவிலிருந்துதான் கொண்டு செல்ல வேண்டும். ஆக, மலையேற மலையேற பொருள்களின் விலையும் ஏறியது. தபால் வேலைகளுக்காகவே தினமும் இருபதுக்கும் மேற்பட்டவர்களுக்குக் கூலி அழ வேண்டியதிருந்தது.

செலவைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்த பிரிட்டிஷாரின் ஞானக்கண்களில் சட்டெனத் தெரிந்த விஷயம் தண்டவாளம்தான். பல வருடங்களாகத் திட்டமிடப்பட்ட இருப்புப்பாதைப் பணிகளுக்கு, மலைகள் குடைச்சல் கொடுத்தன. பதிலாக மலைகளுக்குக் குடைச்சல் கொடுத்தார்கள். குகைகள் பிறந்தன. அப்படி இப்படி பணிகளையெல்லாம் முடிக்கும்போது 1891 பிறந்திருந்தது கல்கா - சிம்லா ரயில் பாதை. மொத்தம் 60 மைல்கள். 103 குகைகள். முதலில் சரக்கு ரயில் போக்குவரத்து மார்ச் 31 அன்று ஆரம்பமானது. மேற்கொண்டு பல வசதிகளைச் செய்து, வைஸ்ராய் கர்ஸனின் பெருமுயற்சியால் பயணிகள் ரயில் போக்குவரத்தை ஆரம்பித்தார்கள். அந்த தினம் 1903 நவம்பர் 9. பிரிட்டிஷார் இந்தியாவில் அமைத்த மிகப்பழைமையான மலை ரயில் பாதையாக இன்றும் இது திகழ்கிறது – யுனெஸ்கோவின் அங்கீகாரத்துடன்.

சிம்லா ஸ்பெஷல்! - உல்லாசபுரி உருவான வரலாறு

கல்கத்தாவில் இயங்கிக்கொண்டிருந்த ராணுவத் தலைமை முகாம், 1864 முதல் சிம்லாவுக்கு நிரந்தரமாக மாற்றப்பட்டது. சிம்லா வாழ் மக்களுக்கெனத் தனி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. வசதிகள் பெருகப் பெருக சிம்லாவில் ஜன நடமாட்டமும் பண நடமாட்டமும் தானாகப் பெருகியது. பெரிய மகாராஜாக்கள் முதல் குட்டி சமஸ்தான ராஜாக்கள், தங்கள் வசதிக்கேற்ப சிம்லாவில் சொந்த சொகுசு மாளிகைகள் கட்டிக்கொண்டார்கள்.  கைக்குட்டை சைஸ் சமஸ்தான ராஜாகூட சிம்லாவில் பங்களா வைத்திருக்கும்போது, இந்திய ராஜ்ஜியத்தையே கட்டியாளும் மேதகு வைஸ்ராய்க்குச் சொந்தமாக சொகுசு பங்களா இல்லாவிட்டால் கௌரவப் பிரச்னை வரத்தானே செய்யும்.

வைஸ்ராய் டப்ரின் காலத்தில் (1884 - 1888) சிம்லாவில் மாபெரும் மாளிகை ஒன்று எழுப்பப்பட்டது. இதனை வடிவமைத்தவர் ஹென்றி இர்வின். (மைசூர் அரண்மனையின் வடிவமைப்பாளரும் இவரே.) பிரமாண்டமான அறைகள், வண்ணமயமான வரவேற்பறை, பளபள பால்ரூம், உன்னத அழகுடைய உணவு அறை, வியக்கவைக்கும் வராண்டாக்கள், விஸ்தீரணமான தோட்டம், உள்ளேயே ஒரு டென்னிஸ் கோர்ட், மது அருந்தும் அறை என்று அருமையாக எழும்பியது Viceregal Lodge. இந்தியர்கள் அதற்கு வைத்த பெயர் ராஷ்டிரபதி நிவாஸ்.

வைஸ்ராய் மாளிகை கட்டுவதற்கான மொத்தச் செலவு அன்றைய மதிப்பிலேயே முப்பத்தெட்டு லட்சம். ஒவ்வொரு வருடமும் பராமரிப்புச் செலவு மட்டுமே ஒன்றரை லட்சம் பிடித்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் அதுவே.

பலரும் சிம்லாவைக் கோடைக்கால அலுவல் தலைநகரமாக நினைக்காமல், ஓர் உல்லாசபுரியாக நினைத்து, கூடி, குடித்துக் கொட்டமடித்ததை ஐரோப்பியப் பத்திரிகைகளும் அடிக்கடி கடுமையாக விமரிசித்துக்கொண்டிருந்தன. ஆகவே, பிரிட்டிஷ் அரசிடமிருந்து சாட்டை வார்த்தைகள் வந்து விழுந்தன. ‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இனி யாரும் காரண, காரியமில்லாமல் சிம்லாவுக்கு வந்து சீன் போடக் கூடாது. மகாராஜாக்கள், தேவையென்றால் மட்டுமே, அதுவும் அரசிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே சிம்லாவுக்கு வந்துபோக வேண்டும்’ - இப்படி ஒரு கட்டளை மறைமுகமாக விதிக்கப்பட்டது.

Imperial Simla என்ற புத்தகத்தை எழுதிய பமீலா கன்வர் பதிவு செய்திருக்கும் செய்திகள் பலவும் ஒழுக்க விதிகளுக்கு அப்பாற்பட்டவை. ‘சிம்லா என்பது வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்கான இடமாக மட்டும் இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தத்தமது இடங்களில் கட்டிக்காக்கும் கலாசாரத்திலிருந்தும் ஒழுக்கத்திலிருந்தும் தப்பி வாழும் இடமாகவும் இருந்தது’ என்கிறார் பமீலா. இப்படி உல்லாசபுரியாக இருந்த சிம்லாவில் சமத்துவம் நிலவியதா என்றால், நிச்சயம் இல்லை. அப்பட்டமான பிளவுகள் இருக்கவே செய்தன. வைஸ்ராய் பங்களாவும், அரசு மாளிகைகளும், மகாராஜாக்களின் சொகுசு பங்களாக்களும் உயரமான பகுதியில் சுத்தமாக இருந்தன. அதற்குக் கீழே கடைவீதிகளும், ஆங்கிலோ இந்திய மக்கள் வாழும் பகுதிகளும் ஓரளவு நெருக்கடியுடன் இருந்தன. மேலிருந்து ஓடிவரும் கழிவு நீரெல்லாம் சேரும் பகுதியாக ‘Lower Bazaar’ அமைந்திருந்தது. அங்கே சிம்லாவின் பூர்வகுடிகளும், சுமை கூலிகளும், ரிக்‌ஷாவாலாக்களும் துணி துவைப்பவர்களும், இன்னபிற வேலைக்காரர்களும் இந்தியாவின் பிற பகுதிகளில் வாழ்வதுபோலவே இங்கும் வறுமையில் உழன்றுகொண்டிருந்தார்கள்.  

சிம்லா ஸ்பெஷல்! - உல்லாசபுரி உருவான வரலாறு

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இந்தியர்கள் மத்தியில் மேற்கத்திய நாகரிகத்தைப் பரப்பும் தலைநகராகவும் சிம்லா இருந்தது. 1838-ம் ஆண்டு, Messrs Barrett & Co என்ற சிம்லாவின் முதல் ஐரோப்பியக் கடை திறக்கப்பட்டது. ஐரோப்பியர்களுக்குத் தேவையான பல பொருள்களை இறக்குமதி செய்து விற்பனைக்கு வைத்திருந்தார்கள். ஐரோப்பிய பாணி உணவுகள் அங்கே கமகமத்தன. பில்லியர்ட்ஸ் விளையாட வசதி செய்யப்பட்டிருந்தது. ஒயின் அருந்தியபடியே ஆங்கிலப் பத்திரிகைகள் படித்து மகிழ Reading Room வசதி செய்யப்பட்டிருந்தது. கோடைக்காலத் தலைநகரமாக சிம்லா அறிவிக்கப்பட்ட சில வருடங்களிலேயே அங்கே ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் பெருகின. வணிகர்களும் செழித்து வாழ்ந்தார்கள். மால் ரோடு, சிம்லாவின் வணிக வீதியாகப் புகழ்பெற்றது.

ஒரு கட்டத்தில் இந்தியாவின் ‘பேஷன் கேபிடல்’ என்ற சிறப்பும் சிம்லாவுக்கு அமைந்தது. அங்கே ஐரோப்பியர்களின் தையல் கடைகள் பெருகின. எந்நேரமும் பார்ட்டி, கேளிக்கை என்று திளைக்கும் நகரத்தில் அதற்கேற்ப உடைகள் தைத்துக் கொடுப்பவர்கள் இரவு பகல் பாராமல் தையல் மிஷினை ஓட்டிக்கொண்டே இருந்தார்கள். அந்த வெள்ளைக்காரர்களிடம் தொழில் கற்றுக்கொண்ட இந்தியர்களும் தனியே தையல் கடை போட்டார்கள். மேம்சாஹிப்பு

களின் கிழிந்த உடைகளை அவர்களது வீட்டு வராண்டாக்களில் உட்கார்ந்து தைத்துக் கொடுத்தார்கள். அதேசமயம், ஆங்கில பேஷன் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் உடைகளின் புகைப்படத்தை வைத்தே, அதேபோன்ற ஸ்டைலில் இந்தியர்களுக்கு உடைகள் தைத்துக் கொடுக்கும் அளவுக்கு அந்த சிம்லா தையல்காரர்கள் திறமையுடன் திகழ்ந்தார்கள். மேற்கத்திய பாணியுடன், இந்தியக் கலாசாரத்தையும் கலந்து புதிய வடிவில் உடைகளையும் தைத்து அசத்தினார்கள். இன்றைக்கும் இந்தியாவின் பல ஊர்களில் ‘சிம்லா டெய்லர்ஸ்’ என்ற கடைகளைக் காணலாம். அந்தப் பெயரின் பின்னணி வரலாறு இதுவே.

அரைகுறை ஆடை நாகரிகம் செழித்தோங்கிய சிம்லாவுக்கு, அரை ஆடை மனிதர் காந்தி சில முக்கியமான தருணங்களில் வருகை புரிந்திருக்கிறார். 1921-ம் ஆண்டில் தன் மனைவி கஸ்தூரிபாயுடன் சிம்லாவுக்குச் சென்றார் காந்தி. கல்கா – சிம்லா ரயிலில் பயணம் செய்தார். அப்போதைய வைஸ்ராய் ரீடிங்கைச் சந்தித்துப் பேசினார். சுயராஜ்ஜியம் குறித்து வலியுறுத்திப் பேசினார். பலன் இல்லை. ஏழை மக்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு, அவர்களை ஆற்றுப்படுத்திவிட்டுக் கிளம்பினார். 1931-ம் ஆண்டில் காந்திஜி மூன்று முறை சிம்லாவுக்குச் சென்றார். வைஸ்ராய் வில்லிங்டன் உடன் சந்திப்பு. பெரிய அளவில் பலன் இல்லை.

சிம்லா ஸ்பெஷல்! - உல்லாசபுரி உருவான வரலாறு

1945-ம் ஆண்டில் சிம்லா மாநாட்டிலும் காந்தி கலந்துகொண்டார். இந்தியாவுக்கு சுயாட்சி வழங்குவது குறித்த தீர்மானத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், இந்து – முஸ்லிம் ஆகியோருள் ஒருவர் பெரும்பான்மையாக இருக்கும் மாகாணங்களில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பிரிவினைத் தீ கனன்றுகொண்டே இருந்தது.

1946-ம் ஆண்டில் தேர்தல்கள் முடிந்து, புதிய அரசுகள் பதவியேற்ற பின்பு நிகழ்த்தப்பட்ட பேச்சு வார்த்தையிலும் தோல்வியே கிட்டியது. சிம்லாவின் ராஷ்டிரபதி நிவாஸில்தான் 1947-ம் ஆண்டில் இந்திய சுதந்திரத்துக்கான இறுதி முடிவுகளும் எடுக்கப்பட்டன. அங்கேதான் இந்தியப் பிரிவினைக்கான உறுதியான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

1911-ம் ஆண்டில் இந்தியாவின் தலைநகரமாக டெல்லி அறிவிக்கப்பட்டது. ஆனால், சுதந்திரம் வழங்கப்படும் வரை கோடைக்காலத் தலைநகர அந்தஸ்துடன் சிம்லா திகழ்ந்தது. அந்தக் காலத்தில் வாழ்ந்த பெரும்பான்மை பிரிட்டிஷாரின், இந்தியர்களின் பதிவுகளில் சிம்லா குறித்த குளுகுளு நினைவுகளே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், காந்திஜிக்கு சிம்லா எப்போதுமே இதமான நினைவுகளைத் தந்ததில்லை. சிம்லா குறித்த அவரது வார்த்தைகள் வலி மிகுந்தவை.

‘எங்கோ தள்ளி இருக்கும் சிம்லா, எப்போதும் எம் மக்களிடமிருந்து விலகியே இருக்கிறது. உயரத்தில் இருக்கும் சிம்லா, ஒருபோதும் தரையில் வாழும் எளிய மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டதே இல்லை.’

சேலை கட்டிய லேடி கர்ஸன்!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ‘அனுமதி பெற்றுத்தான் சிம்லாவுக்கு வர வேண்டும்’ என்று பிரிட்டிஷார் எல்லா மகாராஜாக்களுக்கும் உத்தரவு போட்டிருந்தனர். ஆனால், பாட்டியாலா மகாராஜா ராஜிந்தர் சிங்குக்கு மட்டும் வேறு மாதிரியான உத்தரவு போடப்பட்டிருந்தது. ‘மவனே, இனிமே நீ சிம்லாவுக்குள்ள காலடி எடுத்து வெச்சே, அவ்வளவுதான்!’

பிரிட்டிஷாரின் இந்தக் கடுகடு கட்டளைக்குப் பின்னால் இருக்கும் உண்மைக் கதையை, பாட்டியாலாவில் அமைச்சராகப் பணியாற்றிய திவான் ஜர்மானி தாஸ் தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

1899-ம் ஆண்டில் வைஸ்ராயாக பம்பாயில் வந்து இறங்கினார் கர்ஸன். வைஸ்ராயைவிட அதிகமாக எல்லோராலும் கவனிக்கப்பட்டவர், அவர் மனைவி மேரி கர்ஸன். கண்டவர் கண்களுக்கெல்லாம் பேரழகியாக ஜொலித்தார்.

கோடைக்காலம். வைஸ்ராய் கர்ஸன் சிம்லாவுக்குப் பெட்டி கட்டினார். ஏற்கெனவே அங்கு தனது உயிர்த் தோழர்களோடு முகாமிட்டிருந்தார், பாட்டியாலா மகாராஜாவான ராஜிந்தர் சிங். ஒருவர் தோல்பூர் மகாராஜா நிஹால் சிங்; இன்னொருவர் கபுர்தலா மகாராஜா ஜெகத்ஜித் சிங். மூவரும் லேடி கர்ஸனுக்காகக் கூட்டணி அமைத்தார்கள். சிம்லாவுக்கு வரும் மேரியோடு தனிப்பட்ட முறையில் நட்பாகி, நெருங்கிப் பழக வேண்டும் என்பதே அவர்களுடைய அஜெண்டா.

கர்ஸன் இல்லாத தருணம் ஒன்றில் மூவேந்தர்களும் மேரியிடம் பேசினார்கள். நட்பு வழிய வழிய உரிமையோடு அழைப்பும் வைத்தார்கள். ‘தங்களுக்கென பிரத்யேகமாக விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். தாங்கள் வந்து கலந்துகொண்டு எங்கள் அழைப்பைக் கௌரவப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.’ மேரி மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

ராஜிந்தர் சிங்குக்கு சிம்லாவில் Ceders, Rookwood, Oakover என்று மூன்று மாளிகைகள் இருந்தன. அதில் ஒன்றில்தான் விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேரி தனியாகத்தான் வந்தார். மூவேந்தர்களின் முகங்களில் குஷி குத்தாட்டம் போட்டது.

‘தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற தைரியத்தில் ஒன்று கேட்கிறேன். தாங்கள் ஒரு சிறந்த அழகி என்பது உலகறிந்த விஷயம். ஆனால், ஓர் இந்தியப் பெண்போல் உடையணிந்தால், பேரழகியாகி விடுவீர்கள் என்பது எங்கள் கருத்து. ஒப்புக்கொள்வீர்களா?’

சிம்லா ஸ்பெஷல்! - உல்லாசபுரி உருவான வரலாறு

வைஸ்ராயின் பெண்டாட்டியாக இருந்தாலென்ன, புகழ்ச்சிக்கு மயங்காத பெண் கிடையாதே. வெட்கப்பட்டார். அந்தச் சமயத்தில் ராஜிந்தர் சிங் கோரிக்கையாகத் தம் உள்ளக்கிடக்கையை வெளியிட்டார். ‘சேலையில் உங்களை தரிசிக்க விரும்புகிறோம்.’ சிநேகிதர்களின் கோரிக்கை. மேரி மறுக்கவில்லை. படாடோப பட்டுச் சேலை ஒன்று தயாராக இருந்தது.

சேலை கட்டிய லேடி கர்ஸன். கோயில் கட்டிக் கும்பிடலாம் போலிருந்தது. மேரியின் முகம் சிவக்கச் சிவக்க வெளிப்படையாகவே வருணித்தார்கள். ‘ஏதோ ஒன்று குறைவது போலிருக்கிறதே?’ - என்று ஆளாளுக்கு நகைப்பெட்டிகளைக் கையில் எடுத்தார்கள். எல்லாம் அவரவர் சமஸ்தானத்தின் பரம்பரை நகைகள். இருக்கட்டுமே. அழகுக்கு அழகு சேர்ப்பதைவிட நகைகளுக்கு வேறென்ன வேலை? சூட்டி மகிழ்ந்தார்கள். சேலை, நகை, நெற்றியில் திலகம் என்று முழு இந்தியப் பெண்ணாக மாறியிருந்தார் மேரி.

‘ஹையோ, எவ்வளவு அபூர்வமான காட்சி. மீண்டும் கிடைக்குமா என்ன? ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?’ - எடுத்தார்கள். சேர்ந்து நின்று எடுத்துக்கொண்டார்கள். மேரிக்கு அளவில்லா மகிழ்ச்சி. விருந்து முடிந்தது; கிளம்பிப் போனாள். இந்த விஷயங்கள் ஏதுமறியாத கர்ஸனுக்கு சில வாரங்கள் கழித்து ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. பிரிட்டன் பத்திரிகை ஒன்று, லேடி கர்ஸனின் இந்தியக் கோலத்தைப் புகைப்படமாக வெளியிட்டிருந்தது. நடந்ததையெல்லாம் விசாரித்து அறிந்த கர்ஸனுக்கோ கடுங்கோபம். கட்டளையிட்டார்.

‘என்ன தைரியம் இருந்தா, என் பொண்டாட்டியை அழைச்சுட்டுப் போயி, சேலை கட்டி விட்டுருப்பீங்க. உங்க பரம்பரை நகையை வேற போட்டு விடுவீங்களா? இதுல போட்டோ வேற! இனிமே நீங்க மூணு பேரும் ஆயுசுக்கும் சிம்லா பக்கம் தலை வெச்சே படுக்கக்கூடாது.’

ராஜிந்தர் சிங்கால் இந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிம்லா இல்லையென்றால் என்ன? நான் எனக்கெனத் தனியாக ஒரு கோடைக்காலத் தலைநகரை உருவாக்கிக்கொள்கிறேன் என்று கிளம்பினார். சய்ல் - சிம்லாவிலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள மலைப்பிரதேசம். அதுவரை அடையாளமின்றிக் கிடந்த அந்த மலைக்கிராமம், பாட்டியாலாவின் கோடைக்காலத் தலைநகரமாக வளர்ந்தது. அதற்குப்பின் ராஜிந்தர் சிங், தம் வாழ்நாளில் சிம்லாவுக்குச் செல்லவில்லை.