Published:Updated:

`திருநெல்வேலி எழுச்சி தினம்’ - 113 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் நடந்த நிகழ்வு!

வ.உ.சி உருவச்சிலை

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்தில், சுயராஜ்ய நாள் விழா கொண்டாடியதற்காக வ.உ.சி., சுப்பிரமணிய சிவா கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டம் திருநெல்வேலி எழுச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

`திருநெல்வேலி எழுச்சி தினம்’ - 113 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் நடந்த நிகழ்வு!

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்தில், சுயராஜ்ய நாள் விழா கொண்டாடியதற்காக வ.உ.சி., சுப்பிரமணிய சிவா கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டம் திருநெல்வேலி எழுச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Published:Updated:
வ.உ.சி உருவச்சிலை

சுதந்திரப் போராட்டத்தில் திருநெல்வேலிச் சீமையின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பூலித்தேவன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம் என ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்களின் வரிசையில் வ.உ.சி., பாரதியார், வாஞ்சிநாதன் எனப் பலரும் சுதந்திரப் போராட்டத்துக்கு முக்கியப் பங்காற்றினார்கள்.

நாடு முழுவதும் சுதேசி உணர்வை ஊட்டியதற்காக விபின் சந்திரபால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுதலையான 1908, மார்ச் 8-ம் தேதி சுயராஜ்ய நாளாக சுதந்திரப் போராட்ட வீரர்களால் கொண்டாடப்பட்டது. அதற்காக மார்ச் 9-ம் தேதி தாமிரபரணி ஆற்றின் கரையிலிருந்த தைப்பூச மண்டபத்தின் மீதேறி வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் பேசினார்கள். அந்த உரையை 12,000 பேர் கேட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆங்கிலேய அரசின் தடையை மீறிப் பேசியதற்காக வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் மூவரும் மார்ச் 12-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர். இந்தத் தகவல் பரவியதும், மார்ச் 13-ம் தேதி நெல்லையில் கலவரம் மூண்டது. மாணவர்கள், தொழிலாளர்கள் எனப் பலரும் சாதி, சமய பேதங்களை மறந்து போராட்டத்தில் குதித்தனர்.

தைப்பூச மண்டபம்
தைப்பூச மண்டபம்

போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.தா.இந்து கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மீதும் ஆங்கிலேய அரசின் போலீஸார் தடியடி நடத்தினார்கள். அதனால் கொந்தளித்த போராட்டக்காரர்கள், நகராட்சி அலுவலகத்தைத் தீவைத்துக் கொளுத்தினார்கள். பெட்ரோல் பங்க், காவல் நிலையம் ஆகியவற்றையும் சூறையாடினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஆங்கிலேய அரசு, துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் ஒரு சிறுவன், இஸ்லாமியர், கோயில் பூசாரி என நான்கு பேர் கொல்லப்பட்டனர். அடக்குமுறையால் இந்தக் கலவரம் அடக்கப்பட்டாலும் இந்த விவகாரம் பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த தினத்தை ஆங்கிலேய அரசு `திருநெல்வேலி கிளர்ச்சி’ என வரலாற்றில் பதிவு செய்தது.

வ.உ.சி மணிமண்டபத்தில் உள்ள சிலை
வ.உ.சி மணிமண்டபத்தில் உள்ள சிலை

இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக வ.உ.சி., சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரையும் கைதுசெய்த ஆங்கிலேய அரசு, அனைவருக்கும் மூன்று ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்தது. சுதேசி கப்பலோட்டிய வ.உ.சி., பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக அதிகபட்சமாக 40 வருட சிறைத் தண்டனை பெற்றார்.

திருநெல்வேலி கிளர்ச்சி என ஆங்கிலேய அரசு குறிப்பிட்ட இந்த தினத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த ஏ.எல்.சுப்பிரமணியன், இந்த வரலாற்றுத் தவற்றைச் சரிசெய்யும் வகையில், `திருநெல்வேலி எழுச்சி தினம்’ என மார்ச் 13-ம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்தார். அத்துடன், மாநகராட்சியில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தின் நகலை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கும் அனுப்பிவைத்தார்.

ம.தி.தா பள்ளி மாணவிகள்
ம.தி.தா பள்ளி மாணவிகள்

அதைத் தொடர்ந்து மார்ச் 13-ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் நெல்லையில், திருநெல்வேலி எழுச்சி தினம் நினைவுகூரப்பட்டு வருகிறது. ம.தி.தா இந்து கல்லூரி மேல் நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுச்சி தினம் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

திருநெல்வேலி எழுச்சி தினத்தையொட்டி நெல்லையிலுள்ள வ.உ.சி மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்த வேண்டும் என்பதை எழுத்தாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். இந்த ஆண்டு, வ.உ.சி மணிமண்டபம் சென்ற எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

எழுத்தாளர் நாறும்பூநாதன்
எழுத்தாளர் நாறும்பூநாதன்

இது குறித்துப் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளரும், எழுத்தாளருமான நாறும்பூநாதன், ``ஒவ்போட் ஆண்டும் மார்ச் 13-ம் தேதி நெல்லை பொருட்காட்சித் திடலிலுள்ள வ உ சி மணிமண்டபத்துக்குச் சென்று வ.உ.சி சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், நெல்லை மாவட்டத்தின் மகத்தான பங்கை அறிய மார்ச் 13 சம்பவத்தை அறிவது அவசியம். 113 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும், உள்ளூர் தொழில்கள் நலிவடைந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது திருநெல்வேலி எழுச்சி தினத்தை நினைவுகூர்வது தேவையானது என்றே கருதுகிறேன்.

திருநெல்வேலி எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
திருநெல்வேலி எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்

இன்று காலை நானும் தமுஎகச தோழர்களும் வ.உ.சி மணிமண்டபத்துக்குச் சென்று அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்க முடிவு செய்தோம். அதற்காகச் சென்றபோது அங்கிருந்த அதிகாரி, `தேர்தல் விதிமுறை காரணமாக வ.உ.சி-யையெல்லாம் இப்ப பார்க்க முடியாது’ என மறுத்துவிட்டார்.

மணிமண்டபத்தில் சிலை இருந்த அறையைத் திறக்க முடியாதபடி பெரிய பூட்டைப் போட்டுவிட்டார்கள். என்ன செய்ய? நாங்கள் அரசியல்வாதிகள் கிடையாது, எழுத்தாளர்கள்... அதோடு, வ.உ.சி சிலையைப் பார்க்க அனுமதித்தால் அதன் மூலம் ஓட்டு கிடைத்துவிடும் என நினைப்பதெல்லாம் எந்த வகையில் சரியானது...

செக்குக்கு மாலை அணிவிப்பு
செக்குக்கு மாலை அணிவிப்பு

இன்றைய உலகில் எல்லோரிடமும் செல்போன் இருக்கு. அதில் கிடைக்காத தகவல்களா? சிலைகளையெல்லாம் மூடி வைக்காவிட்டால் மக்கள் அவற்றைப் பார்த்து வாக்களிக்கும் கட்சியை மாற்றிக்கொள்வார்களா? இந்த நடைமுறையே சரியானதல்ல. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதவிருக்கிறேன்.

சரி, வந்தமட்டுக்கும் ஏற்கெனவே வாங்கிட்டு வந்த மாலையை அங்கிருந்த செக்குக்குப் போட்டுருவோம் என நினைத்து அதற்குப் போட்டுட்டு வந்தோம். மண்டப வாசலில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் எங்களைப் பார்த்து ’செக்கையும் சிவலிங்கமாக்கினாயே சொக்கா...’ என உற்சாகமாகப் பாடியதைக் கேட்டுக்கொண்டே வந்துவிட்டோம்” என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism