Published:Updated:

வரலாறு: ஒரு மாவீரரின் கதை!

வ.உ.சிதம்பரனார்
பிரீமியம் ஸ்டோரி
வ.உ.சிதம்பரனார்

ரெங்கையா முருகன், ஓவியம்: வரதராசன்

வரலாறு: ஒரு மாவீரரின் கதை!

ரெங்கையா முருகன், ஓவியம்: வரதராசன்

Published:Updated:
வ.உ.சிதம்பரனார்
பிரீமியம் ஸ்டோரி
வ.உ.சிதம்பரனார்

.உ.சிதம்பரனார்... இந்தப் பெயரைத் தவிர்த்துவிட்டு எவராலும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதவிட முடியாது. ‘வறுமையினும் வியாதியினும் சகிக்க முடியாதது அடிமைத்தனம்’ என்று ஓங்கி ஒலித்த ஒப்பற்ற குரலுக்குரிய தலைவர் அவர். நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றில் கலந்திருக்கிறது அவர் உயிர். `கப்பலோட்டிய தமிழன்’, `செக்கிழுத்த செம்மல்’, `தென்னாட்டு தீரர்’ என்றெல்லாம் போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் அடுத்த ஆண்டு வரவிருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறையினருக்குத் தவறாமல் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய அவரைப் பற்றிய சில நினைவலைகள்...

வ.உ.சி என்றதுமே நினைவுக்கு வருவது சுதேசியக் கொள்கைதான். தன் இறுதிமூச்சு வரை 100 சதவிகிதம் சுதேசியாக வாழ்ந்துகாட்டினார் அவர். எளிதில் கடந்து செல்லும் அளவுக்கு சாதாரண காரியமல்ல அது. வாத்து இறகைப் பேனாவாக்கி, நாட்டு மைக்கூடு, கரடுமுரடான உள்நாட்டுக் காகிதத்தைப் பயன்படுத்தியே எழுதினார். தான் சிறு வயதில் விளையாடியவற்றை, ‘தமிழர் நாட்டு விளையாட்டுகள்’ என 35-க்கும் மேலான பழந்தமிழர் விளையாட்டுகளாகத் தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார் வ.உ.சி. சுதேசிக் கொள்கையில் பிடிப்புடைய அவர், விளையாட்டுகளில்கூட கிரிக்கெட் உள்ளிட்ட விதேசி விளையாட்டுகளைத் தவிர்த்திருப்பார்.

வ.உ.சிதம்பரனார்
வ.உ.சிதம்பரனார்

வ.உ.சி-க்கு வீர விளையாட்டுகளில் கத்திச் சண்டை, மல்யுத்தம், சிலம்பம், குதிரையேற்றம் போன்ற விளையாட்டுகள் தெரியும். வ.உ.சி-க்கு 60 வயது நடந்துகொண்டிருக்கையில் நடந்த ஒரு நிகழ்வை அவரின் மகன் வ.உ.சி.சுப்பிரமணியம் நினைவுகூர்கிறார். “அம்மன் கோயில் கொடைவிழா. அம்மன் சப்பர ஊர்வலம் முன் இரவில் பவனிவருகிறது. சப்பரத்துக்கு முன்பாக பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மயிலாட்டம் போன்ற கேளிக்கை நடனங்களை ஆடிவருகின்றனர். அவற்றுடன் அம்மன் சப்பரத்துக்கு முன்பாகச் சிலம்ப வீரர்கள் சிலம்பம் ஆடிவருகின்றனர். வழக்கமாக, வ.உ.சி ஐயாவின் வீட்டுக்கு முன்பு சிறிது நேரம் சிலம்பம் ஆடி, அவரிடமிருந்து வெகுமானம் வாங்கிச் செல்வது வழக்கம். ஐயாவின் கையால் வேட்டியும் நேரியலும் வாங்கிச் செல்வதென்றால், சிலம்ப விளையாட்டு வீரர்கள் `பரம் வீர் சக்ரா விருது’ பெறுவதைப்போல பெருமை அடைவார்களாம். சிலம்பம் ஆடும் வீரர்கள் ஐயாவின் வீட்டுக்கு முன்னால் நெடுநேரம் ஆடிக்கொண்டிருந்தனர். கம்பு வீசுவதிலுள்ள அத்தனை திறமைகளையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த அவர், திடீரென தானும் கம்பு சுற்ற இறங்கிவிட்டாராம்.

60 வயதில் சுமார் அரை மணி நேரம், குழுமியிருந்த கூட்டம் வியக்கும்வண்ணம் கம்பு சுற்றி அசத்தியிருக்கிறார்.''

திருச்செந்தூரில் திருக்குறள் மணக்குடவார் உரை அரங்கேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட வ.உ.சி., பரிமேலழகர் உட்பட முன்னோர்களின் உரையிலிருந்து எங்கெல்லாம் மாறுபடுகிறேன் என்பதை விளக்கிக்கொண்டிருந்த வேளையில் ஒரு வித்வான் எழுந்து, ‘‘ஏடுகளின் ஆதாரம் இருக்கிறதா?’' எனக் கேட்கிறார். வ.உ.சி நக்கீரராகச் சீறி, “வள்ளுவன் என் முப்பாட்டன். அவர் உணர்வை நான் அறிவேன். அவரது கருத்துகளை மாற்ற எனக்கு முழு உரிமை உண்டு. அதற்கு ஏடுகளின் ஆதாரம் தேவையில்லை'' எனக் கூறி அந்த வித்வானை ‘‘அமரும்'' என்று தெறிக்கவிட... சபை அப்படியே நிசப்தமாகியிருக்கிறது.

வரலாறு: ஒரு மாவீரரின் கதை!

தூத்துக்குடி வீட்டில் வசித்துக்கொண்டிருந்த சூழலில், சில மாணவர்களுக்குத் திருக்குறள் வகுப்பை எடுத்துவந்தார் வ.உ.சி. திருக்குறள் வகுப்பில் ஒருநாள்... ‘செல்வம் நிலையாமை’ அதிகாரம் பற்றிப் பாடம் எடுத்திருக்கிறார். பல்வேறு உரை மூலமாக அவர் பாடம் நடத்தி வருகையில் ஒரு மாணவன் எழுந்து, ‘செல்வம் நிலையாமை குறித்து தங்களது சொந்தக் கருத்து என்ன?’ எனக் கேட்டான். வசதி மிகுந்த வக்கீல் பரம்பரைக் குடும்பத்தில் பிறந்த வ.உ.சி., சுதேசிய கொள்கைப் பிடிப்பால் வருமானமிழந்து வறுமையான சூழலில் இருக்கும்போது கேட்கப்பட்ட கேள்வி அது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நேரம் வ.உ.சி-யின் மனைவி வீட்டின் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த எரு வரட்டி களைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார். கேள்வி கேட்ட மாணவனைப் பார்த்து, “அம்மா என்ன செய்கிறார் என்று தெரிகிறதா?” என வ.உ.சி கேட்கிறார். மாணவருக்கு அவர் வரட்டியை பிய்த்து எடுத்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. “இன்றைய வீட்டுச் சாப்பாட்டுக்கான பணத்தேவைக்கு விற்பனை செய்வதற்காக அம்மா வரட்டியை எடுத்துக்கொண்டிருக்கிறாள்” என்கிறார் வ.உ.சி. மாணவன் கலங்கிப்போய் அவர் முகத்தைப் பார்க்கிறான். “இதுதானப்பா நீ கேட்ட செல்வம் நிலையாமை குறித்த எனது சொந்தக் கருத்து'' என்றாராம் வ.உ.சி.

தன் இறுதிக்காலத்தில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். ‘சுதந்திர இந்தியாவைக் காண முடியவில்லையே!' என்ற ஏக்கம் வேறு. இறப்பதற்குச் சில நாள்களுக்கு முன்னர் அவரின் நெருங்கிய தோழரான தூத்துக்குடி மாசிலாமணி பிள்ளை, வ.உ.சி-யின் உடல்நலத்தை விசாரிக்க இல்லம் தேடிச் சென்றார். அப்போது வ.உ.சி தன் நண்பரை நோக்கி, “தம்பி மாசிலாமணி... பசியின் கொடுமையை இன்னதென நீ அறிந்திருக் கிறாயா?'' என்று கேட்டார். அதற்கு மாசிலாமணி பிள்ளை, ‘‘அண்ணா அந்த அனுபவம் எனக்குக் கிடையாது’' எனச் சொல்ல, “சரி நான் சொல்கிறேன்” என்று வ.உ.சி பின்வருமாறு கூற ஆரம்பித்தார்.

வரலாறு: ஒரு மாவீரரின் கதை!

“அக்காலத்தில் கம்பர் திக்விஜயம் செய்தபோது ஒரு கிராமத்தில் தங்க நேரிட்டது. அன்று அதிகாலையில் படுக்கையைவிட்டு எழுந்து வெளியே உலாவச் சென்றார் கம்பர். செல்லும் வழியில் ஒரு வீட்டினுள் பெண்ணின் அழுகுரல் கேட்டது. அந்த அழுகையினூடே ஒப்பாரியாக, ‘சில்லென்று பூத்த' என்ற வார்த்தைகள் அவள் வாயினின்றும் வெளிக் கிளம்பியதும், அடுத்த வார்த்தை வெளிவராதவாறு அவள் வாயை யாரோ பொத்தி அழுகையை அடக்கிவிட்டனர். அதை அறிந்த கம்பர் ‘சில்லென்று பூத்த' என்ற சொற்களில் கவிச்சுவை பொருந்தி யிருந்தமையால், அதன் பின்னர் அவள் சொல்ல விரும்பியது எதுவாக இருக்கலாம் என்பதைக் குறித்து அறிய ஆவல்கொண்டார்.

ஆனால், அவரின் கற்பனைக்கு அது எட்டவில்லை. அக்கம்பக்கத்து வீட்டாரிடம் விசாரித்து, அதைத் தெரிந்துகொள்ள என்ன செய்யலாமென்று கேட்டார். அந்த அழுகுரல் சமீபத்தில் தன் கணவனை இழந்த இளம் விதவையினுடையது எனவும், கணவனை இழந்த பெண்கள் அதிகாலையில் விழித்தெழுந்து அழுதுவருவது வழக்கம் எனவும், அங்கனம் அழுவதை நிறுத்துவது பக்கத்திலிருக்கும் வயதான பெண்களின் கடமை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மறுதினமும் கம்பர் அதிகாலையில் அங்கே சென்று அந்த வீட்டின் தெருத் திண்ணையில் தங்கியிருந்தார். வழக்கம்போல அழுகைக் குரல் ஒப்பாரி ஓசையுடன் வெளிக்கிளம்பிற்று. அன்று அதிர்ஷ்டவசமாக அவள் வாயைப் பொத்த ஆட்கள் சற்று பின்தங்க நேரிட்டது. அந்த விதவைப் பெண் தன்னுடைய ஒப்பாரியில் ‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே...' என்று பெருமூச்செறிந்து விம்மி விம்மிப் புலம்பி அழுதாள்.'' இக்கதையைக் கூறி முடித்ததும் வ.உ.சிதம்பரனாருடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. “இதுமாதிரி கண்ணீர் உகுத்து, கதறியழுது, தங்கள் காலத்தைக் கடத்திவரும் குடும்பங்கள் நமது நாட்டில் கோடி கோடியாக மலிந்து வருகின்றனவே! அக்குடும்பங்களின் துயர் என்று தீருமோ!” எனக் கூறி தாங்க முடியாமல் விம்மி அழுதார் வ.உ.சி.

மாசிலாமணி பிள்ளை செய்வதறியாது வ.உ.சி-யின் செயல்கண்டு திடுக்கிட்டு, “அண்ணா! உங்கள் உடல்வலி குறைந்து படுக்கையிலிருக்கும் சமயம் இவ்வாறு கவலைப்படுவது கூடாது” எனத் தேற்றியுள்ளார்.

இறக்கும் தறுவாயிலும் ஏழை மக்கள் படும் பாட்டை நினைத்து நினைத்து கண்ணீர் உகுத்தவர் வ.உ.சி. இப்படி ஒரு மாமனிதர் தமிழகத்தில் அவதரிக்க என்ன மாதவம் நாம் செய்திருந்தோமோ! அந்த மாமனிதரை என்றும் நினைவில்கொள்வோம்.