Published:Updated:

உலகைப் பார்க்கலாம், வா மகளே!

பார்த்தசாரதி - கீதா தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
பார்த்தசாரதி - கீதா தம்பதி

இந்தக் குறுகிய காலம் அடைபட்டுக் கிடந்ததுக்கே இவ்வளவு தவிச்சுப்போனோமே. இத்தனை வருஷம் இப்படியே அன்றாடம் வாழற என் பொண்ணுக்கு எப்படியிருக்கும்?

உலகைப் பார்க்கலாம், வா மகளே!

இந்தக் குறுகிய காலம் அடைபட்டுக் கிடந்ததுக்கே இவ்வளவு தவிச்சுப்போனோமே. இத்தனை வருஷம் இப்படியே அன்றாடம் வாழற என் பொண்ணுக்கு எப்படியிருக்கும்?

Published:Updated:
பார்த்தசாரதி - கீதா தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
பார்த்தசாரதி - கீதா தம்பதி

தாயின் வயிற்றில் கருவாய்த் தோன்றி இவ்வுலகின் முதல் ஒளிக்கீற்றைக் காண ஒரு மனித உயிர் எடுத்துக்கொள்ளும் சராசரி காலம் 40 வாரங்கள். ஆனால் அக்கால அளவினைவிட ஓரிரு வாரம் முன்னே நிகழும் பிறப்பு, வாழ்வின் பல பக்கங்களையும் புரட்டிப்போட்டுவிடுகிறது. அப்படி ஒருவர் தான் ஓசூரைச் சேர்ந்த பிரியவதனா. குறைமாதத்தில் பிறந்த இவர் தான் நினைக்கும் எதையும் செய்ய முடியாது, உணரும் எதையும் வெளிப்படுத்தமுடியாது. ஆனாலும் அவருக்கு இந்த அழகிய உலகைச் சுற்றிக் காட்ட குடும்பத்தோடு 20 நாள்களில் 8,000 கி.மீ-க்கு மேல் காரில் பயணித்திருக்கிறார்கள் அவரின் பெற்றோர்களான பார்த்தசாரதி - கீதா தம்பதியினர்.

உலகைப் பார்க்கலாம், வா மகளே!

முதலில் பேசத் தொடங்கினார் பார்த்தசாரதி, “பிரியவதனா பிறந்து முதல் ஆறு மாசத்துக்கு எந்த ஒரு குழந்தையைப் போலவும் ரொம்ப ஆரோக்கியமாவேதான் இருந்தா. தலை நிக்கிறதுல மட்டும் அவளுக்கு ஒரு பிரச்னை இருந்ததால இதப்பத்தி டாக்டர்கள்கிட்ட விசாரிச்ச போது Developmental Delay-ன்னு சொல்லப்படற தாமத வளர்ச்சி காரணமாத்தான் இந்தப் பிரச்னை இருக்குன்னும், சீக்கிரமாவே சரியாகிடும்னும் சொன்னதால நாங்க நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனா அதுக்கு அப்புறமாதான் என் மகளுக்கு Spastic Cerebral Palsy-ன்னு சொல்லப்படற பெருமூளை வாதக் குறைபாடு இருக்குறது தெரிய வந்தது. இந்தக் குறைபாடு இருக்கறவங்க எல்லாரும் இயல்பா செய்யும் விஷயங்களான நடக்கறது, உட்காருவது, பேசறதுன்னு எதையும் பண்ண முடியாது. இது எல்லாத்துக்கும் மத்தவங்களோட துணை அவங்களுக்கு நிச்சயம் தேவை. பிரியவதனாவைப் பொறுத்தவரை அவளுடைய உணர்வுகளை வெளிப்படுத்த, ஒண்ணு சிரிப்பா, இல்லைனா அழுவா.

இதைக் குணப்படுத்தறதுக்காகப் பல இடத்துக்கும் போனோம். கூடவே வலிப்பு வர்ற பிரச்னையும் இருந்ததால அதற்கான சிகிச்சையையும் சேர்த்துக் கொடுத்துட்டு வந்தோம். அதுமட்டுமல்லாம, பாட்டு போடுறது, சேரில் உட்காரவைத்து சின்னச் சின்ன ஆக்டிவிட்டீஸ் பண்றது மாதிரி செய்வோம். ஆனா எந்த ஒரு தருணத்திலும் நாங்க கலங்கிப்போனது கிடையாது. பிரியவதனா எங்களுடைய மகள். பெத்தவங்களா அவளுக்கு வேண்டிய எல்லாத்தையும் எந்த ஒரு குறையும் இல்லாமச் செய்து தரணும்ன்றது எங்க முதல் கடமை.

அவளுக்கு இப்போ பத்து வயசு ஆகுது. ட்ரீட்மென்ட் அது இதுன்னு வெளி உலகத்தை அவள் பார்த்தது ரொம்பவும் குறைவுதான். அதிகபட்சமா பாட்டி வீடு, ஹாஸ்பிடல் இதுதான் அவள் சென்ற இடங்கள். இப்படி இருக்கையில்தான் கொரோனா காரணமாக நாடே வீட்டுக்குள்ள அடைய வேண்டிய சூழல். முதல்ல வெளியே போகாம வீட்டில் இருக்கறது நல்லா இருந்தாலும் நாள்கள் ஆக ஆக, பழைய மாதிரி எப்போ வெளியே வருவோம்ன்றதுதான் அனைவரின் மனநிலையாகவும் இருந்துச்சு. இதுக்கு நானும் எந்த வகையிலும் விதிவிலக்கில்ல.

உலகைப் பார்க்கலாம், வா மகளே!

அப்போதான் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு. இந்தக் குறுகிய காலம் அடைபட்டுக் கிடந்ததுக்கே இவ்வளவு தவிச்சுப்போனோமே. இத்தனை வருஷம் இப்படியே அன்றாடம் வாழற என் பொண்ணுக்கு எப்படியிருக்கும்? அதனால் இந்தப் பரந்த உலகத்தை அவளுக்குக் காட்ட முடிவெடுத்தேன். கொரோனாப் பரவல் அதிகமா இருந்ததால சரியான நேரத்துக்காகவும் காத்திருந்தோம். முதலில் டெல்லி சென்று அங்கே சுற்றிக் காட்டுவது மட்டும்தான் எங்க திட்டமா இருந்தது. பெரும்பாலான டிராவல் ஏஜென்சிகள் எங்களை முதலில் டெல்லிக்கு வரச் சொல்லி அங்கிருந்து அவங்க பாத்துகிறதா சொன்னாங்க. அது எனக்கு சரியாப்படல. மேலும் விமானம், ரயிலில் என் மகளுக்குத் தேவையான எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போறது கஷ்டம். மொத்த ட்ரிப்பும் கார்லேயே போயிடலாம்ங்கிற யோசனை வந்தது” என்ற பார்த்தசாரதியைத் தொடர்கிறார் அவர் மனைவி கீதா.

“இதுக்கு முன்னாடி வீட்டை விட்டு அதிகமாக வெளிய போனதே கிடையாதுன்றதால இந்த ட்ரிப்ப பிளான் பண்ணினதே சவாலாதான் இருந்தது. ஏன்னா ஒரு சின்ன வலியைக்கூட அவளால வெளிப்படுத்த முடியாது. இதனால அவளைப் பார்த்துக்க நானோ அவங்க அப்பாவோ, இல்ல, எங்க மூத்த பொண்ணு ஸ்ருதியோ எப்பவும் ஒருத்தவர் அவ கூடவே இருப்போம். ரொம்ப நேரம் தூக்கிவச்சிருந்தா அவளுக்கு உடம்பு வலிக்கும். புது இடத்துக்குப் போனா உடம்பு சீக்கிரம் ஒத்துக்காமப்போயிரும். இத்தனை சவால்கள் இருந்தாலும், எப்படியாச்சும் ட்ரிப் போயிரணும்னு எனக்கும் தோணுச்சு. ஏன்னா, எங்க பொண்ணை அதிகமா வெளிய கூட்டிட்டுப் போனதில்லை. வீட்டை விட்டு வெளிய வர்ற சின்னச் சின்னத் தருணங்கள்லகூட அவ்வளவு சந்தோஷப்படுவா. இப்படித்தான் தொடங்குச்சு இந்த ட்ரிப்.”

உலகைப் பார்க்கலாம், வா மகளே!

மீண்டும் தொடர்கிறார் பார்த்தசாரதி, “என் அண்ணன் குடும்பமும் இன்னொரு கார்ல கூடவே கிளம்பினாங்க. நாங்க முதல்ல போன இடம் புனே பக்கத்துல இருக்கும் லோனாவாலா. அங்க இருந்து உதய்ப்பூர். அங்க முடிஞ்சிட்டு ஜெய்ப்பூர், சிம்லா, மணாலின்னு ஹிமாசலப் பிரதேசம் வரை தொட்டுட்டோம். அங்க ரோடாங் பாஸ்ன்ற இடத்துக்குப் போனதுதான் இந்த மொத்த ட்ரிப்போட ஹைலைட். கடல் மட்டத்துல இருந்து 13,000 அடிக்கும் மேல இருக்கிற இடம் அது. எங்க கார் ரெண்டையும் மணாலில நிப்பாட்டிட்டு அங்க இருக்கிற வண்டில மேல போனோம். ட்ரிப்போட முதல் நாள் மட்டும் 800 கி.மீ கிட்ட கவர் பண்ணினோம். அதுக்கு அப்புறம் வழியில இருக்கிற ஒவ்வொரு இடமா சுத்திப் பாத்துட்டுப் போனாலும் சராசரியா 300-லிருந்து 400 கி.மீ வரை பயணிச்சோம்” என்று சொல்ல, கீதா “ட்ரிப் முழுவதுமே சாப்பாட்டுக்குத்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டோம். பிரியாக்கு நாங்க சாதாரணமா அப்டியே சாப்பாடு குடுக்காம அத மிக்ஸில போட்டு அவங்களுக்கு வசதியாதான் குடுத்துட்டு வர்றோம். எங்காவது ஒரு சௌத் இந்தியன் ஹோட்டல் இருக்கும், அத கண்டுபிடிச்சி இவங்களுக்கு ஏத்த மாதிரி காரம் குறைவா மிக்ஸில போட்டுத் தரச் சொல்லி அவளுக்குக் குடுத்தோம்” என்று சொல்ல, “போற வழியில என்ன மாதிரி சாப்பாடு கிடைக்கும்னு தெரியாதுன்றதால முதல் இரண்டு நாளைக்கு வீட்லயே கொஞ்சம் செஞ்சு எடுத்துக்கிட்டோம். அதுக்கு அப்புறம் அங்கங்க என்ன கிடைக்குதோ அதான் எங்களோட அப்போதைய உணவே” என்கிறார் பார்த்தசாரதி.

குடும்பத்துடன்
குடும்பத்துடன்

“தினமும் உதயமாகுற சூரியன பாத்தாலே என் பொண்ணு அவ்வளவு சந்தோசப்படுவா. அத்தனை ஆயிரம் அடி உயரத்துல பனிக் குவியல் மத்தியில் அவ என்ன நினைச்சான்றத அவளால சொல்ல முடியாட்டியும் ஒரு அம்மாவா அவ உணர்வுகள முழுசாப் புரிஞ்சு சந்தோஷப்பட்டேன். இப்படி ஒரு பயணம்லாம் சாத்தியமே இல்லன்னு நினைச்சுக்கிட்டு இருந்தது போய் இத்தனை ஆயிரம் கிலோமீட்டர் போயிட்டு வந்திருக்கோம்ன்றத நம்பவே முடியல.” கீதாவின் வார்த்தைகளில் அத்தனை நெகிழ்ச்சி.

“எந்த ஒரு குழந்தையும் அதனுடைய பெற்றோர்க்கு ஸ்பெஷல்தான். பிரியா எங்களுக்கு இன்னும் ஸ்பெஷல். ஏன்னா மத்த குழந்தைகள் குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் அவங்க அவங்களையே பாத்துப்பாங்க. ஆனா நாங்க பிரியாவை இத்தனை வருஷம் பாத்துக்கிட்டோம். இனிமேலும் பாத்துப்போம்” என்ற அவர்களின் நம்பிக்கை வார்த்தைகள் இன்னும் மனதுக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism