Published:Updated:

அம்மாவும் மனைவியும்தான் வெற்றிக்கு காரணம்! - ‘கைலாசா’ புகழ் டெம்பிள் சிட்டி குமார்

#Motivation

பிரீமியம் ஸ்டோரி
``அப்போ 100 மில்லி பால் வாங்கக்கூட வசதி இல்லாம இருந்தது எங்க குடும்பம். இன்னிக்கு நான் தினமும் 1,000 லிட்டர் பாலை தொழிலுக்காக வாங்குற அளவுக்கு என்னை முன்னேற்றியிருக்குறது என் உழைப்புதான். எல்லா கஷ்ட நஷ்டத்திலும் நம்பிக்கையை மட்டுமே கொடுத்து எனக்கு பக்கபலமா இருந்தது எங்கம்மாவும் மனைவியும்தான்'' - எளிமையாகப் பேசுகிறார் குமார். மதுரையின் பிரபல `டெம்பிள் சிட்டி' உணவகங்களின் உரிமையாளர்.

100 வகை தோசை, மாஸ்க் பரோட்டா, கொரோனா போண்டா, நிவர் புயல் பனீர் மசாலா, நித்தியானந்தாவின் `கைலாசா'வில் கடை வைக்க அனுமதிக் கடிதம் என வைரல் கன்டன்ட்கள் கொடுத்துக்கொண்டே இருக்கும் இந்த சுவாரஸ்ய மனிதருடன் ஒரு சந்திப்பு.

``எங்களுக்குப் பூர்வீகம் நெல்லை மாவட்டம் ஆண்டான்குளம். விவசாயத்துல போதிய வருமானம் இல்லாததால, மதுரையில ஹோட்டல் தொழில் செய்யலாம்னு ஐடியா கொடுத்தவங்க... எங்கம்மா. தொழில்ல பல ஏற்ற, இறக்கங்கள். அப்பா, அண்ணன்கள், நான்னு எல்லாரும் தீவிரமா உழைச்சோம். நான் பகல்ல ஹோட்டல் வேலை, மாலை நேரத்துல படிப்புனு என் டிகிரியை முடிச்சிட்டு, தொழில்ல இறங்கினேன்.

மகன், மனைவி, மகளுடன் குமார்...
மகன், மனைவி, மகளுடன் குமார்...

2001-ல மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிர்ல `ஃப்ரீடம் கௌரி பழமுதிர்ச்சோலை'யைத் தொடங்கினேன். தேசியக்கொடி வண்ணத்துல கடையின் ரேக்குகள், ஊழியர்களுக்கு தேசியக் கொடியுடன் அமைந்த தொப்பி, கடையில மிகப்பெரிய பாரதமாதா படம்னு இதெல்லாம் மக்களை ஈர்த்தது. அருகில் இருந்த காலி இடத்தில் முதல் `டெம்பிள் சிட்டி' ஹோட்டலைத் திறந்தேன். 11 வகை காபி, 51 வகை ஐஸ்க்ரீம், 101 வகை தோசை, 201 வகை ஜூஸ்னு கொடுத்த விளம்பரத்துல ஹோட்டல் செம ஹிட்''

- அதிரடியாக விளம்பரம் செய்தவர், அதை செய்தும் காட்டியதால் வெற்றி விரைவாக அவரிடம் வந்து சேர்ந்தது.

பேட் வடிவ டெண்டுல்கர் தோசை, மூலிகை ரசம், கொரோனா போண்டா, மாஸ்க் பரோட்டோ, வெஜ் மீன்பொரியல் என்று தொடர்ந்து அறிமுகப் படுத்திவரும் `வேற மாதிரி' உணவுகளுக்கு மதுரை மக்கள் ரசிகர்கள். தன்னம்பிக்கை பேச்சாள ரான குமார், இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார். நித்யானந்தா உருவாக்கி யுள்ளதாகச் சொல்லப்படும் `கைலாசா' நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கேட்டது, அதற்கு நித்யானந்தாவும் பதில் அளித்தது என மீடியாவுக்கும் இவர் ஜாலி கன்டன்ட்.

``புதுசா என்ன செய்யலாம்னுதான் எப்பவும் யோசிச்சுட்டே இருப்பேன். அதனாலதான் இன்னிக்கு எங்களோட 16 ஹோட்டல்களை நிர்வகிக்கிறேன். மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலை வராக இருக்கேன். இந்தப் பயணத்துல, மறைந்துவிட்ட என் பெற்றோர் மற்றும் என் சகோதரர்கள், தங்கை, மனைவி, ஊழியர்கள்னு எல்லாருமே தூண்களா இருந்திருக்காங்க, இருக்காங்க. எங்கம்மா, ஆரம்பகாலத்துல தன் உழைப்பை எங்களுக்கு முதலீடா கொட்டிக் கொடுத் தாங்க. நாங்க தளர்ந்துடாம தெம்பு கொடுத்துட்டே இருந்தாங்க. அதேபோல, என் தொழில் வெற்றியில பாதி என் மனைவிக்குச் சொந்தம்'' என்கிறார்.

``தினமும் காலை 5 - 10 மணி வரைக்கும் ரெண்டு பேரும் எல்லா கிளைகளுக்கும் போய் உணவின் சுவை, அன்றைய வேலை திட்டங்கள்னு மேற்பார்வை செய்வோம்'' என்று ஆரம்பித்தார் குமாரின் மனைவி ராஜகுமாரி.

``எங்க ஹோட்டல் உணவுல லாபத்துக்காக எந்த சமரசமும் நாங்க செய்றதில்ல. பாக்கெட் மசாலாக்கள், தரம் குறைந்த எண்ணெய்கள், சுவையூட்டிகள்னு இவையெல்லாம் எங்க கிச்சன்ல நாங்க அனுமதிக்கிறதில்ல. குறிப்பா, கலப்பின காய்கறிகளை பயன்படுத்தக் கூடாது என்பதுல உறுதியா இருக்கும் நான், எங்க ஹோட்டலுக்குப் பயன்படுத்துற காய்கறிகளை நானே தோட்டம் அமைச்சு விளைவிக்கிறேன். எங்களோட ஒரு ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாய முறையில எல்லா காய்கறிகளையும் விளைவிக்கிறோம். தினமும் அங்க போயிடுவேன். காலையில காய்கறிகள் அங்கயிருந்து எங்க ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதேபோல, ஹோட்டலுக்குத் தேவையான மசாலா பொருள்களை வீட்டிலேயேதான் தயார்செய்றோம். இது, என் மாமியார் எனக்குச் சொல்லிக்கொடுத்துட்டு போன நல்ல பழக்கம், தொழில் சூத்திரம்'' என்றார் ராஜகுமாரி. இந்தத் தம்பதிக்கு கல்லூரியில் படிக்கும் மகனும், எட்டாம் வகுப்புப் படிக்கும் மகளும் உள்ளனர்.

``என் மனைவி வீட்டுல புதுசு புதுசா உணவு அயிட்டங்கள் செய்து பார்த்து, எங்க ஹோட்டல் மாஸ்டர்கள்கிட்ட அந்த ரெசிப்பியைச் சொல்லி கருத்து கேட்போம். அவங்களும் செய்துபார்த்துட்டு சிறப்பா வந்தா, ஹோட்டல் மெனுவுல அது சேர்ந்துடும். இப்படி, நாங்க குடும்பமா உழைக்கிற தொழில் இது'' என்கிறார் குமார் பெருமையுடன் தன் மனைவியைப் பார்த்தபடி.

வெற்றியின் ரகசியம் புரிகிறது!

வாழைக்காய்வஞ்சிரம் மீன் வறுவல்!

சை
வ உணவுகளை அசைவ ருசியில் வழங்கும் டிஷ்கள் ‘டெம்பிள் சிட்டி’யின் சிறப்பு. அவற்றில் ஒன்றான வாழைக்காய் வஞ்சிரம் மீன் வறுவல் ரெசிப்பி இங்கே!

அம்மாவும் மனைவியும்தான் வெற்றிக்கு காரணம்! - ‘கைலாசா’ புகழ் டெம்பிள் சிட்டி குமார்

தேவையான பொருள்கள்: வாழைக்காய் - 2 அல்லது 3, காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைப் படத்தில் உள்ளபடி நீளவாக்கில் வெட்டி, நடுவில் துளையாக்கி, தண்ணீரில் ஊற வைக்கவும். காய்ந்த மிளகாய், சோம்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, சோள மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்த மசாலாவில் வெட்டிவைத்த மீன் வடிவ வாழைக்காய்களைப் புரட்டி, சிறிது நேரம் வைக்கவும். அடுப்பில் எண்ணெயை சூடாக்கி, அதில் வாழைக்காய்களைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு