Published:Updated:

புத்தம் புது காலை : 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் பல நோபல் விருதாளர்களை உருவாக்கியது எப்படி?!

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை

தன்னால் கற்க இயலாத கல்வியின் மீது எப்போதுமே ஏக்கம் இருக்க, தனது உற்ற நண்பர் ஜார்ஜின் உதவியுடன் பால்டிமோரில் நகரெங்கும், வீதிகளெங்கும் பள்ளிகள், நூலகங்களை கட்டியெழுப்பினார்.

நாற்பது நோபல் பரிசு விஞ்ஞானிகளைத் தந்த பல்கலைக்கழகம், அமெரிக்காவின் முதல் ஆராய்ச்சி நிறுவனம், வருடத்திற்கு இரண்டரை பில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே செலவு செய்யும் நிறுவனம், இயற்கைப் பேரிடர்களின் போதெல்லாம் அரசுக்கும் முன்னரே சேவையைத் தொடங்கும் முன்னோடி நிறுவனம், இந்த கோவிட் காலத்தில் தடுப்புமருந்து உட்பட பல்வேறு முக்கிய ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வெற்றி கண்டதுடன், இந்தியாவிலும் ஒரு கிளையைத் துவங்கியிருக்கும் நிறுவனம்... இப்படிப்பட்ட நிறுவனத்ததை தொடங்கியவர் வெறும் ஏழாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்றால் நம்பமுடிகிறதா?


ஆம்... அவர்தான் ஜான்ஸ் ஹாப்கின்ஸ். 1795-ம் ஆண்டு, மே 19-ம் தேதி, அமெரிக்காவின் பால்டிமோர் நகரில், வசதியான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் ஜான்ஸ். அவர் படித்த காலத்தில், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் புகையிலையைப் பயிரிட்டு பராமரித்து வந்தது அவரது குடும்பம். சிறுவயது முதலே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட ஜான்ஸ் ஹாப்கின்ஸ், தொடர்ந்து படிக்கப் பிரியமில்லாமல் 12 வயதில் குடும்பத்தொழிலான தோட்டவேலைக்கே வந்துவிட்டாராம்.

அவரது 17-வது வயதில், நாட்டில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் ஹாப்கின்ஸின் தாய்மாமன் கலந்துகொள்ள நேரிட, அவரது பலசரக்கு அங்காடியை கவனிக்க நகரத்துக்குச் சென்றவர் அதில் மிகுந்த லாபத்தை சம்பாதித்திருக்கிறார். தொடர்ந்து தாய்மாமனுடன் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தும், தான் காதலித்த மாமன் மகள் எலிசபெத்தை மணம் செய்து கொடுக்க தாய்மாமன் மறுத்த கோபத்தில், தனியாக பிசினஸைத் துவங்கிய ஹாப்கின்ஸ் அடுத்து கையிலெடுத்தது ஹோல்சேல் வியாபாரத்தை.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ்

தனது பொருட்களை விற்பனை செய்தபோது, பணத்திற்கு பதிலாக, அப்போதைய பிரபல மதுபானமான கார்ன் விஸ்கியை குறைந்த விலைக்கு வாங்கி, நல்ல விலைக்கு விற்று, லாபம் சம்பாதித்து, அதில் கிடைத்த லாபத்தை பங்குச்சந்தையில் போட, அதில் ஒன்றான பால்டிமோர் ரயில்பாதை கட்டமைப்பில் வாங்கிய பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டித்தந்தது. படிப்படியாக முன்னேறிய ஹாப்கின்ஸ், அமெரிக்காவின் பெரும் பணக்காரராக உருவெடுத்தார்.

வியாபாரிகள் சங்கத் தலைவர், வங்கிகளின் தலைவர் என பதவிகளும் உயர, அடுத்தடுத்த வெற்றிகள் உண்மையில் அவரை பக்குவப்படுத்தின. முதலாளித்துவத்தை ஹாப்கின்ஸ் ஆதரித்தார் என்றாலும், தொழிலாளர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதுதான் அவரை இன்னும் உயர்த்தியது. தன்னால் கற்க இயலாத கல்வியின் மீது எப்போதுமே ஏக்கம் இருக்க, தனது உற்ற நண்பர் ஜார்ஜின் உதவியுடன் பால்டிமோரில் நகரெங்கும், வீதிகளெங்கும் பள்ளிகள், நூலகங்களை கட்டியெழுப்பினார். கருப்பின மக்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து நின்றதோடு, அவர்களுக்கான விடுதிகளையும், குழந்தைகள் காப்பகங்களையும் தொடங்கினார் ஹாப்கின்ஸ்.

இதையெல்லாம் விட, காதலி நினைவாக தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் புரியாமல் இருந்த ஹாப்கின்ஸ், பின்னாளில் தன்னைப் போலவே திருமணமே செய்யாமல் தன்னை நினைத்து வாழ்ந்த தனது மாமன் மகள் எலிசபெத்திற்கு, தனிவீடு ஒன்றைப் பரிசளிக்க, தனது இறுதிநாட்கள் வரை எலிசபெத் அங்கேயேதான் வாழ்ந்தார் என்பது இன்னொரு ஈரமான பக்கம்.


உள்நாட்டுப் போர் ஒன்றின்போது, பால்டிமோர் மாகாணத்தில் போரில் இறந்தவர்களைக் காட்டிலும் அதிகமான மக்கள் காலரா நோய் மற்றும் மஞ்சள் காய்ச்சலில் இறக்க நேரிட, பால்டிமோரில் இலவச மருத்துவமனை ஒன்றைத் தொடங்க எண்ணினார் ஹாப்கின்ஸ். ஆனால், தனது மூச்சிறைப்பையே குணப்படுத்த முடியாத நிலையில்தான் மருத்துவம் இருக்கிறது என்பதை உணர்ந்த அவர், மருத்துவமனையை விட, மருத்துவ ஆராய்ச்சிகள் தான் முக்கியம் என்று எண்ணி, தனது வருமானத்தின் பெரும்பகுதியை, அதாவது ஏழு மில்லியன் அமெரிக்க டாலர்களை, (இன்றைய மதிப்பீட்டில் ஆயிரம் கோடி ரூபாய்) மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கென ஒதுக்கீடு செய்து,அன்றைய அரசே வியக்குமளவு ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்க முடிவு செய்தார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ்

அதற்கு முதற்கட்ட நடவடிக்கையாக, தான் தொடங்கிய கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் இணைத்து, அப்போது புகழ் பெற்றிருந்த ஜெர்மனியின் ஹீடல்பெர்க் பல்கலைக்கழகம் போல, பால்டிமோரில் ஒரு பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் துவங்கப்பட வேண்டும் என்ற அவரது கனவு, அவரது இறப்பிற்குப் பிறகுதான் சாத்தியமாயிற்று.


1873-ம் ஆண்டு, தீவிர ஆஸ்துமா நோயால் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மரணமடைய, நாடே துக்கத்தில் மூழ்கியது என்றாலும், அவரது கனவை நனவாக்க உழைத்துக் கொண்டிருத்தது அவரது நண்பர் டேனியல் கில்மேன் தலைமையிலான குழு.


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்!


"கட்டடங்களுக்குப் பதிலாக மனித மனங்களைக் கட்டமைக்க வேண்டும்" என்று அடிக்கடி சொல்லும் ஜான்ஸ் ஹாப்கின்ஸின் சொற்களை நினைவில் கொண்டு, அவர் நினைத்தது போலவே செய்துகாட்டிய டேனியல் கில்மேன், ஹாப்கின்ஸ் மறைந்த மூன்றாம் ஆண்டு, அதாவது 1876-ம் ஆண்டில் அவரது கனவு பல்கலைக்கழகத்தை நிறுவினார்.


கிட்டத்தட்ட 145 ஆண்டுகளுக்கு முன்பு, பல ஆராய்ச்சி சாலைகளுடன் பால்டிமோரில் பெரிதாகத் துவங்கப்பட்ட 'ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்' இப்போது அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும், இத்தாலி, சீனா, சிங்கப்பூர் உட்பட இன்னும் சில நாடுகளிலும் தனது கிளைகளைப் பரப்பி... அவர் நினைத்தபடியே இன்றுவரை கட்டடங்களைத் தாண்டி, அதனுள்ளே மனிதர்களையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் கட்டமைத்துக் கொண்டேயிருக்கிறது.


எத்தனையோ பட்டதாரிகளை, மருத்துவர்களை, செவிலியர்களை, விஞ்ஞானிகளை, ஆராய்ச்சியாளர்களை இன்றுவரை உருவாக்கித் தந்திருக்கும் இந்த நிறுவனம், இதுவரை நாற்பது நோபல் வெற்றியாளர்களையும் உருவாக்கித் தந்திருக்கிறது.
ஹாப்கின்ஸ் அவர்களது கனவுப் பல்கலைக்கழகத்தின் முகப்பில் ஒளிர்கின்றன இந்த வரிகள்.

Veritas vos liberabit ... ''உண்மை உனக்கு விடுதலையைத் தரும்!'' -

உண்மைதானே!

அடுத்த கட்டுரைக்கு