Published:Updated:

தென்காசி: தமிழகத்தின் மூன்றாவது சிறந்த நகராட்சி! உண்மையில் எப்படி உள்ளது?

தென்காசி

அடிப்படை வசதிகளே இல்லாத தென்காசியை சிறந்த நகராட்சிகளில் ஒன்றாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. விருதுபெறும் அளவுக்கு தென்காசி நகராட்சி சிறப்பானதாக இருக்கவில்லை என்பது அங்கு வாழும் மக்களின் கருத்து.

தென்காசி: தமிழகத்தின் மூன்றாவது சிறந்த நகராட்சி! உண்மையில் எப்படி உள்ளது?

அடிப்படை வசதிகளே இல்லாத தென்காசியை சிறந்த நகராட்சிகளில் ஒன்றாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. விருதுபெறும் அளவுக்கு தென்காசி நகராட்சி சிறப்பானதாக இருக்கவில்லை என்பது அங்கு வாழும் மக்களின் கருத்து.

Published:Updated:
தென்காசி

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. இந்த நிலையில் நாட்டின் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என தேர்வு செய்யப்பட்டு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழக அரசால் மாநிலத்தின் மூன்றாவது சிறந்த நகராட்சியாகத் தென்காசி தேர்வாகியிருக்கிறது.

சுகாதாரமற்ற பகுதி
சுகாதாரமற்ற பகுதி

தென்காசியில் வாழும் மக்களே தமிழக அரசின் இந்த அறிவிப்பைக் கேட்டுச் சிரிக்கிறார்கள். நகரம் முழுவதும் குப்பை கூளத்துடன் இருக்கும் நிலையில், எந்த வகையில் தென்காசி நகராட்சியை தமிழகத்தின் சிறந்த நகராட்சிகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது

இது தொடர்பாக நம்மிடம் பேசியவர்கள், ”எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தென்காசி இருக்கிறது, இது சிறந்த நகராட்சி என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தென்காசி நகரத்தில் எங்கு பார்த்தாலும் குப்பைகளாகக் கிடக்கின்றன. அதனால் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

சாக்கடை சூழ்ந்த பகுதி
சாக்கடை சூழ்ந்த பகுதி

நகரத்தில் எங்கு கால் வைத்தாலும் குப்பைகளாகக் கிடக்கின்றன. பழைய பேருந்து நிலையத்தின் உள்ளே நுழைந்தாலே துர்நாற்றம் வீசுகிறது. அதைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த லட்சணத்தில் இந்த நகராட்சிக்கு பரிசு அறிவித்திருக்கிறார்களா ?” என்று கொந்தளிக்கிறார்கள்.

மங்கம்மா சாலையின் இளங்கோநகர் பகுதி மக்களுக்கு இப்போதும் குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறது, அப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் நம்மிடம் பேசுகையில், “எங்க பகுதிக்கு நகராட்சியில இருந்து இதுவரைக்கும் குடிநீர் வசதி செஞ்சு கொடுக்கவில்லை. தெருவிளக்கு எரியவில்லை என்று புகார் கொடுத்தால் சரிசெய்வாங்க. ஆனால் அடுத்த நாளே மறுபடியும் எரியாமல் இருட்டிலேயே தெருவில் நடக் வேண்டியதிருக்கும்.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடம்
கொசுக்கள் உற்பத்தியாகும் இடம்

இந்தப் பகுதியில் பூங்கா இருப்பதாக நகராட்சியில் கணக்கு இருக்கு. அதை நேர்ல வந்து பாத்தாங்கன்னா கண்டுபிடிக்க முடியாது. செடி, கொடிகள் தான் இருக்கே தவிர பூங்கா எதுவும் இல்லை. அதுவும் முள் செடிகளால் நிறைஞ்சு கிடப்பதால் பாம்புகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய வழியில்லாத தென்காசி நகராட்சிக்குப் பரிசு வேறு கொடுத்திருக்கிறார்களா?” என்று படபடத்தார்.

தென்காசி பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் செந்தில் பேசுகையில், ”இந்த நகரத்தில் போக்குவரத்து நெருக்கடி மிகப்பெரிய பிரச்னை. எல்லா இடத்திலும் சாக்கடையை சுத்தமா தூர்வாரமாட்டாங்க. மேம்பாலத்துக்கு அடியில கட்டுமான கழிவுகள் குவிந்து கிடக்கிறது. தனியார் பேருந்துகளை நிறுத்தி வைக்கும் இடமாக மாறியிருக்கிறது. அதனால் மக்கள் நடமாடவே முடியாத நிலைமையில் உள்ளது.

சாலையில் வழியும் சாக்கடை நீர்
சாலையில் வழியும் சாக்கடை நீர்

சுரங்கப்பாதையில் இருக்கும் விளக்குகளில் பாதி தான் எரியுது. அதனால் அந்தப் பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழையவே அச்சமாக இருக்கிறது. அங்கு சிசிடிவி கேமராவும் இல்லை என்பதால் ஏதாவது குற்றம் நடந்தால் கூட கண்டுபிடிக்க முடியாது. சுரங்கப்பாதையின் அருகில் இருக்கும் வண்ணாங்குளம் பகுதியில இறைச்சிக் கழிவு, குப்பை எல்லாம் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

தென்காசியை மாவட்டமாக அறிவித்து மூன்று வருடமாகியும் இன்னும் அடிப்படை வசதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த வழியாக குற்றாலத்துக்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் சாலை வசதிகள் கிடையாது. இருக்கும் சாலைகளும் குண்டும் குழியுமாகக் கிடக்கிறது. தென்காசி நகரத்துக்குள் எங்கு போனாலும் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கிறது.

பேருந்து நிலைய குடிநீர்த் தொட்டி
பேருந்து நிலைய குடிநீர்த் தொட்டி

மக்களின் அடிபப்டைத் தேவைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத தென்காசிக்கு மூன்றாவது சிறந்த நகராட்சி விருது கொடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. எல்லாக் குறைகளையும் சரிசெய்த பிறகு இந்த விருதை தென்காசி நகராட்சி வாங்க வேண்டும்” என்றார் காட்டமாக

மக்களின் கேள்விகளுக்கு தமிழக அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?