Published:Updated:

எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் மூன்றாவது அலையை?

 கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கு மாவட்டங்கள் சார்ந்த உத்தியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறது

எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் மூன்றாவது அலையை?

உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கு மாவட்டங்கள் சார்ந்த உத்தியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறது

Published:Updated:
 கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

பெருந்துயர்ச்சூழலில் கொரோனா இரண்டாம் அலையைக் கடந்தோம். மூன்றாம் அலை ஏற்படுமா? அவ்வாறு ஏற்பட்டால் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும்?

கொரோனாப் பெருந்தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி நம்மிடம் எந்த அளவு இருக்கிறது? இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) நடத்திய நாடு தழுவிய நான்காம் கட்ட ஆய்வின் முடிவில் மூன்றில் இரண்டு இந்தியர்கள் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியுடன் இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

2021 ஜூன், ஜூலை மாதங்களில் செய்யப்பட்ட இந்த ஆய்வின் முடிவு நற்செய்தியாகவே வந்திருக்கிறது. அதிலும் இந்த ஆய்வில் குறிப்பாக 6 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 57.2% மற்றும் 10 முதல் 17 வயது வரை குழந்தைகளில் 61.6% எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பது உண்மையில் நாம் அனைவரும் மகிழ்ச்சிகொள்ளத்தக்க முடிவுகள்தான். ஆயினும் இந்திய மக்கள் தொகையில் இன்னும் 40 முதல் 50 கோடி பேர் ஒரு முறைகூட தொற்றை அடையாமல் இருக்கிறார்கள் என்பதும், அவர்களுக்கு மூன்றாம் அலையில் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.

இந்தியாவின் இரண்டாம் அலையை கொரோனா வைரஸின் ஆல்ஃபா மற்றும் டெல்டா வேரியண்ட்டுகள் நிர்ணயித்தன. மூன்றாம் அலை ஏற்படுவதற்கு எந்த வேரியண்ட் காரணமாக இருக்கப்போகிறது என்பதை இப்போது கணிக்க இயலாது. எனினும், ‘டெல்டா ப்ளஸ் வேரியண்ட் மூலம் மூன்றாம் அலை ஏற்படக்கூடும்’ என்பது தற்போதைய அனுமானமாக இருக்கிறது. நாடெங்கிலும் இரண்டாம் அலை ஓய்ந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று சதவிகிதம் குறையாமல் இருக்கிறது. டெல்டா வேரியண்ட்டே இதற்கான காரணமாக கூறப்படுகிறது. ஆயினும் கேரள மாநிலத்தில் கொரோனாவால் இறப்போர் விகிதம் நாட்டிலேயே மிகவும் குறைவாக 0.5% என்ற அளவிலேயே இருக்கிறது.

எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் மூன்றாவது அலையை?

கடந்த டிசம்பர் மாதம் கேரளாவில் செய்யப்பட்ட ஆய்வில் 11.6% பேருக்கு மட்டுமே எதிர்ப்பு சக்தி இருந்தது. சரிசம காலத்தில் இந்திய அளவில் செய்யப்பட்ட மூன்றாம் கட்ட சீரோ ப்ரிவாலன்ஸ் ஆய்வில் 21.4% பேருக்கு எதிர்ப்பு சக்தி இருந்தது.

மேலும் பரிசோதனைகளின் அடிப்படையில் பார்த்தால், இந்திய அளவில் செய்யப்படும் பரிசோதனைகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக கேரளாவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே கேரளாவில் உயரும் தொற்று எண்ணிக்கையை எச்சரிக்கையுடன் அணுகினால் போதுமானது. அச்சத்துடன் அணுகத் தேவையில்லை.

இதற்கடுத்தபடியாக மக்களின் முக்கியக் கேள்வியாக இருப்பது, ‘பள்ளிகளை எப்போது திறப்பது’ என்பதுதான்.

உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கு மாவட்டங்கள் சார்ந்த உத்தியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறது. அதாவது அந்தந்த மாவட்டத்தின் தொற்றுப்பரவல் நிலை, கண்டறியப்படும் தொற்று சதவிகிதம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பள்ளிகளைத் திறக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஐசிஎம்ஆர் தலைவரும் ஆரம்பப் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கு அவர் கூறும் காரணம், “குழந்தைகளிடம் கொரோனாத் தொற்று பெரியவர்களைவிட பலம் குன்றியதாகவே வெளிப்படுகிறது” என்பது.

குழந்தைகளிடம் பலம் குன்றியதாக இதுவரை கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது உண்மையே. ஆயினும் ‘எதிர்காலத்தில் எத்தகைய வேரியண்ட்டாக கொரோனா உருமாறும்’ என்பதையும், ‘அத்தகைய உருமாறிய வேரியண்ட் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்ளும்’ என்பதையும் நம்மால் இப்போது கணிக்க இயலாது.

இஸ்ரேல் நாட்டின் இரண்டாம் அலை 2020 மே மாதம் பள்ளிகளைத் திறந்த சில வாரங்களில் ஏற்பட்டது. பிறகு அங்கே பள்ளிகள் மூடப்பட்டன. மீண்டும் 2020 செப்டம்பரில் பள்ளிகள் அங்கே திறக்கப்பட்டதும் தொற்று எண்ணிக்கை அதிகமானது. மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தடுப்பூசிகள் மூலம் பாதுகாப்பான நிலையை அடைந்திருப்பதால் இஸ்ரேலில் பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. இதை முன்மாதிரியாகக் கொண்டால், நம்மிடையே தடுப்பூசி மூலம் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியைச் சிறப்பாக ஏற்படுத்திய பிறகே பள்ளிகளைத் திறப்பது சிறந்த முடிவாக இருக்கும் என்பது தெரிகிறது.

கொரோனாப் பெருந்தொற்றுக்கு எதிரான வலிமையான மற்றும் நம்பகமான ஆயுதமாக தடுப்பூசிகள் இருக்கின்றன. கொரோனாவின் டெல்டா வேரியண்ட்டின் அலையைச் சந்தித்துவரும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசிகள் சிறந்த பயனைத் தந்திருப்பதைக் கண்கூடாகக் காண முடிகின்றது.

உலகைப் பொறுத்தவரை 26.8% மக்கள் தொகைக்கு முதல் டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது. 13.8% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் கிடைத்துள்ளது. ஆயினும் இதில் உள்ள பிரச்னை யாதெனில், இந்த அளவானது உலக நாடுகள் தோறும் சரிசமமாக இல்லை. மாறாக, வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் தடுப்பூசி பெற்றோர் சதவிகிதம் அதிகமாகவும், ஏழை நாடுகளில் மிகக்குறைவாகவும் உள்ளது. இது நிச்சயம் கவலையுடன் கவனிக்கத்தக்க விஷயமாகும். உலகெங்கிலும் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் தடுப்பூசி சென்று சேருவதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிடில் தடுப்பூசி முறையாகச் செலுத்தப் படாத மக்களுள் புதிய அச்சுறுத்தல் தரக்கூடிய வேரியண்ட்டுகள் தோன்றக்கூடும். இது மொத்த உலகத்துக்கும் பாதகமாகவே முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 18% மக்கள் தொகைக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 6.35% மக்கள் தொகைக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் கிடைத் துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத் தவரை 1.67 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் , 36 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் கிடைத்துள்ளது. 70-80% மக்கள் தொகைக்கு ஒரு டோஸ் தடுப்பூசியேனும் கிடைக்கச் செய்யும் இலக்கை நாம் அடைய இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

நாடெங்கிலும் தடுப்பூசிக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முன்னெப்போதும் இல்லாத அளவு கூடியிருக்கிறது. எனவே தடுப்பூசி உற்பத்தி மற்றும் கொள்முதலை அரசு தொடர்ந்து அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்நிலையில் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளை எதிர்நோக்கி மேலும் பல தடுப்பூசிகள் நமது பயன்பாட்டை அடையும் நிலையில் உள்ளன.

எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் மூன்றாவது அலையை?

அமெரிக்க நோவாவேக்ஸுடன் இணைந்து சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரிக்கும் கோவோவேக்ஸ் (COVOVAX) தடுப்பூசி, ஹைதராபாத் நிறுவனமான பயாலஜிகல் ஈ தயாரிக்கும் BECOV2A தடுப்பூசி, அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் கேடில்லா நிறுவனம் தயாரிக்கும் சைகோவ்-டி1 (ZYCOV-DI) தடுப்பூசி, புனாவைச் சேர்ந்த ஜெனோவா நிறுவனம் தயாரிக்கும் இந்தியாவின் முதல் மெசஞ்சர் ஆர்என்ஏ தொழில்நுட்பத் தடுப்பூசியான HGC019, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் நாசியில் ஸ்ப்ரே மூலம் செலுத்தும் தடுப்பு மருந்து ஆகியவை வரிசை கட்டி நிற்கின்றன. 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களிடையே பயன்படுத்த ஏதுவாக பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவேக்சின் தடுப்பூசியை ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது. எனவே விரைவில் கோவேக்சின் தடுப்பூசி 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும் கிடைக்கக்கூடும். இதன்மூலம் பள்ளிகளைப் பாதுகாப்பாகத் திறக்கச் சிறந்த வழி ஏற்படக்கூடும்.

இந்தியாவில் மூன்றாம் அலையானது ஆகஸ்ட் மாத இறுதி முதல் செப்டம்பர் தொடக்கத்தில் ஏறுமுகம் கண்டு, செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் உச்சத்தை அடைந்து, பின்பு இறங்கு முகத்தை அடையக்கூடும் என்று கணிப்புகள் சொல்லப்படுகின்றன. நம்மால் எவ்வளவு விரைவாகத் தடுப்பூசி பெற முடியுமோ அவ்வளவு விரைவுடன் தடுப்பூசியைப் பெறவேண்டும்.

இரண்டாம் அலை ஓய்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்திலும் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பேணுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை முறையாக நாம் தொடர வேண்டும். ஆயினும் சமூகத்தில் பெரும்பான்மை மக்களிடம் இந்தக் கொரோனாப் பெருந்தொற்று கால தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் தெரியத்தொடங்கியிருக்கிறது. இதை நாம் உடனே சரிசெய்தாக வேண்டும்.

பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியமற்ற பயணங்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மக்களாகிய நாம் கடைபிடித்தால் மட்டுமே அதன் பலன்களைக் கூட்டாக அனுபவிக்க முடியும். எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொண்டு, நமது முறை வரும்போது தடுப்பூசியைப் பெற்று, பெருந்தொற்று கால தடுப்பு நடவடிக்கைகளைச் சிறப்பான முறையில் மேற்கொண்டு மூன்றாம் அலையின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்திடுவோம்.