லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

2K KIDS: கொரோனா... உறவுகளின் இழப்பு... மனநலம் மீட்பது எப்படி?

மனநலம் மீட்பது எப்படி
பிரீமியம் ஸ்டோரி
News
மனநலம் மீட்பது எப்படி

க.கமலி

கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலை மிகவும் சீற்றம் வாய்ந்ததாக இருக்கிறது. முதல் அலையில் பெரும்பாலும் முதியவர்களையும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களையும் இழந்தோம். ஆனால், இந்த இரண்டாம் அலையில் 20 வயது முதல் 40 வயது வரையில் நாம் சந்தித்துள்ள உயிரிழப்புகள் ஏராளம். கணவரை இழந்து நிற்கும் இளம் மனைவிகள், இளம் மகனை/மகளை இழந்த தவிக்கும் பெற்றோர், பெற்றோர் இருவரையும் இழந்து நிராதரவாக மருகும் பதின்பருவக் குழந்தைகள், நெருங்கிய நண்பரை, தோழியை இழந்த இளம் வயதினர் என்று நாம் பறிகொடுத்திருக்கும் உயிர்களும், பரிதவித்து நிற்கும் உறவுகளும் துயரம்.

பொதுவாக, எல்லா மரணங்களிலும் நமக்கு குறைந்தபட்ச மருந்தாக இருப்பது, அழுகை. உறவுகளைக் கட்டி அழும்போதும், வாய் விட்டுக் கதறி அழும்போதும் மனதின் பெரும் பாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும், கரையும். ஆனால், கொரோனா மரணங்களில், குடும்பத்தாருக்கு இறந்தவர்களின் சடலங் களுக்கு அருகில் செல்லக்கூட அனுமதியில்லை, துக்கம் பகிர இறுதி அஞ்சலிக்கு வழியில்லை, இறுதிச் சடங்குக்கு அவகாசமில்லை என்ற கடுஞ்சூழல் நிலவுகிறது. இப்படி, இந்த முழுமை பெறாத மரணங்கள் உறவுகளின் ஆற்றாமையை நீண்டநாள் ஆறவிடுவதில்லை.

 தரண்யா சேதுபதி
தரண்யா சேதுபதி

முழு ஆரோக்கியத்துடன் இருந்த ஒருவரை, 15 நாள்களில் ஒரு நோய் சுருட்டிச் செல்லும் பேரிழப்பை, மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது ஒருபுறம். அந்தச் சோகத்தை வெளிப்படுத்தவோ, பகிர்ந்துகொள்ளவோ முடியாத தனிமைப்படுத்தல்கள் மறுபுறம். இந்தக் காரணங்களால், கொரோனா சூழலில் உறவை இழந்து நிற்கும் குடும்பத் தினருக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதிலிருந்து சம்பந்தப்பட்டவர்கள் மீளவும், அவர்களின் உறவு, நட்பு அவர்களை அதிலிருந்து மீட்கவும் ஆலோசனைகள் சொல்கிறார், ஈரோட்டைச் சேர்ந்த மனநல ஆலோசகர் தரண்யா சேதுபதி.

துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

‘ஜனனமும் பூமியில் புதியது இல்லை, மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை’ என்ற பாடல் வரிகளை நினைத்துக்கொள்வோம். உறவுகளை இழந்தவர்கள், முதலில் அந்த ஏற்பு நிலைக்கு வர வேண்டும். ‘சரி ஆகும்னுதானே நினைச்சோம்... என்னால ஏத்துக்கவே முடிய லையே...’ என்ற ஆற்றாமை ஏற்படுவது இயல்பு தான். ஆனால், அது சில நாள்களில் ஆறிவிட வேண்டும். அதேபோல, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சோகத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மனம் ஆறும். பிறரிடம் மனம்விட்டுப் பேசும்போது, மனதின் வலி குறையும். ஆறுதல் கிடைக்கும்.

தனிமை சரியா?!

எந்தவோர் இழப்பின்போதும், அதிலிருந்து மீண்டு வர நமக்கு அவகாசம் (Healing Time) தேவைப்படும். உயிர் இழப்பில் அந்த கால அவகாசம் அதிகமாகவே தேவைப்படும். அதனால், இழப்பைச் சந்தித்தவர்கள் தனிமையைத் தேடுவார்கள். அந்தத் தனிமை, அவர்களின் துயரத்தை குறைக்கும் வடிகாலாக இருக்க வேண்டுமே தவிர, அதை அதி கரிப்பதாக இருக்கக் கூடாது. உதாரணமாக, தனிமையில் அவர்கள் இழந்தவர் களின் நினைவு களை ஓர் ஆறுதலாக துணைகொள்ளலாம். ஆனால், அந்தத் தனிமையில் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் புலம்புவது, இறந்தவரை காப்பாற்றாமல் விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வு கொள்வது என்று இருந்தால், அது மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும்.

உறவு, நட்பு, சுற்றம் என்ன செய்ய வேண்டும்?!

உறவை இழந்து வாடுபவர்களுக்குத் தனிமை தேவை என்பதை நாம் புரிந்துகொண்டு, சிறிது நாள்கள் அவர்களைத் தனிமையில் விடலாம். ஆனால், அந்தத் தனிமையில் சுயபச்சாதாபம், குற்ற உணர்வு என்று அவர்கள் தங்களை மூழ்கடித்துக்கொண்டால், அவர்களின் தனிமைப் பொழுதுகளைக் குறைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து அவர்களிடம் அன்புடனும் அக்கறையுடனும் உரையாடி, அவர்கள் மனம்விட்டுப் பேசும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; அவர்களின் வேதனையை வெளிப்படுத்த நம் நேரத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவர்கள் தனிமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதை செய்யக் கூடாது!

பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தை நட்பு, உறவு என அவர்களின் சுற்றம் யாரும் அலட்சியப்படுத்துவது போல பேசக் கூடாது. அவர்களின் உணர்வுகளை சிறுமைப்படுத்துவது போல நடந்துகொள்ளக் கூடாது. அவர்களைத் துக்கத்தில் இருந்து மீட்க நினைத்து, கடும் வார்த்தைகளால் கண்டிப்புடன் பேசக் கூடாது. மாறாக, அவர்களின் துன்பத்தை நாம் புரிந்துகொள்கிறோம் என்பதை வெளிப் படுத்தும் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.

மனநல சிகிச்சைத் தேவைப்படலாம்!

உறவை இழந்தவர் நீண்டகாலமாக மனநலப் பிரச்னைக்கு ஆளாகும்போது, அவருக்கு மனநல சிகிச்சைத் தேவைப்படலாம். தூக்க மின்மை, அன்றாட வேலைகளைச் செய்யாமல் இருப்பது, மற்றவர்களிடம் இயல்பாகப் பழகாமல் இருப்பது, சுயமாகத் தன்னை பார்த்துக்கொள்ள முடியாத நிலை, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, தான் சந்தோஷமாக இருக்கக்கூடாது என்ற குற்ற உணர்வு கொள்வது என, இப்படி மாறுபட்ட செயல்பாடுகளுடன் இருந்தால் அவர்களுக்குக் கவனம் கொடுக்கப்பட வேண்டும். மேலும், ஒரு துன்பகரமான சூழலுக்குப் பின் அதிலிருந்து மீள இயலாதவர்களுக்கு Post Traumatic Disorder மனநலப் பிரச்னை ஏற்படலாம்.

2K KIDS: கொரோனா... உறவுகளின் இழப்பு... மனநலம் மீட்பது எப்படி?

இந்தப் பிரச்னை சில மாதங்கள் முதல் வருடங்கள்வரை நீடிக்கலாம். இழப்பு தொடர் பான துன்ப நினைவுகள் எழும்போது கூடவே உணர்வுரீதியான, உடல்ரீதியான வெளிப் பாடுகளும் காணப்படும். கனவுகள், சோகம், பதற்றம், பயம் எனக் காணப்படுவார்கள்.

மேலே சொன்ன மனநலப் பிரச்னைகளுடன் இருப்பவர்கள், மனநோய்க்கு ஆட்படாமல் தவிர்க்க, தேவையைப் பொறுத்து மனநல ஆலோசனை, சிகிச்சைக்குச் செல்வது மிக அவசியம். தலைவலி, காய்ச்சலுக்கு மருத்துவரைப் பார்க்கச் செல்வதுபோல, மனநலப் பிரச்னைக்கு மருத்துவரை பார்க்கச் செல்வதும் இயல்பானதே என்று சுற்றமும் நட்பும் அவர்களுக்கு எடுத்துக்கூறி, அழைத்துச் செல்ல வேண்டும்.

தற்கொலை எண்ணம் ஏற்பட்டால்..!

சிலருக்கு உயிருக்கு உயிராக இருந்த உறவைப் பிரிந்த வலி, தற்கொலை எண்ணத்தைத் தூண்டலாம். குறிப்பாக, ஒரு வீட்டில் இருந்த இருவரில் ஒருவர் இறந்துவிட, மற்றவர் தாங்கமுடியாத தனிமையில் தள்ளப்படும் போது இந்த எண்ணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்.

இதுபோன்ற சூழலில் உள்ளவர்களுக்கு உறவுகளின் அன்பும், அக்கறையும், நேரமும், வார்த்தைகளும் கொடுக்கப்பட வேண்டும். இந்த உலகில் எல்லா உயிர்களுக்குமே ஒரு கடமை உள்ளது. அந்தக் கடமைகளுக்காக, பாதிக்கப்பட்டவர் தன்னைத் தேற்றி, தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணம் தோன்றினால் மனநல ஆலோசகரை அணுக வேண்டும்.

தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

மீள்வோம்!