Published:Updated:

வேலை இழப்பு... தப்பிக்கும் வழிகள்! - கொரோனாகால ஆலோசனைகள்..!

ஆட்குறைப்பு செய்யும் சமயங்களில் ‘எனக்கு எல்லாமே தெரியும். எனக்கு வேலை போகாது’ என்ற அதிக நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது.

பிரீமியம் ஸ்டோரி
லகை உலுக்கிவரும் கொரோனாவின் தாக்கம் வேலை இழப்புகளையும் ஏற்படுத்திவருகிறது.

`ஒரு நிறுவனம் ஆட்குறைப்பு செய்யும்போது நீங்கள் கடைசி ஆளாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் பதவி உயர்வுக்குப் பணியாளர்களைப் பரிசீலிக்கும்போது நீங்கள் முதல் ஆளாக இருக்கவேண்டும்’ - இதுதான் ஹெச்.ஆர்-கள் பணியாளர்களுக்குச் சொல்லும் மிக முக்கியமான அறிவுரை. இந்த அறிவுரையின் முக்கியத்துவம் என்ன என்பதை இன்று எல்லாப் பணியாளர்களும் உணரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் முடங்கிப்போயிருக்கின்றன. `அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் பல லட்சம் பேர் வேலையை இழந்திருப்பதைப்போல, இன்னும் கொஞ்சம் நாளில் வேலை இழப்புக்கான அபாய மணி இந்தியாவிலும் ஒலிக்கும்’ என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.

வேலை இழப்பு... தப்பிக்கும் வழிகள்! - கொரோனாகால ஆலோசனைகள்..!

“வழக்கமான நாள்களிலேயே வேலை இழப்பு என்பது பெரும் பொருளாதார நெருக்கடியையும், மனவேதனையையும் கொடுக்கும். கொரோனா பதற்றம் இருக்கும் இந்த நேரத்தில் வேலை இழப்பு என்றால், பணியாளர்கள் உச்சபட்ச வேதனையைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில், மற்ற நாள்களில் வேலை போனால் புதிய வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. அனைத்து நிறுவனங்களும் வேலைநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த நேரத்தில் புதிய வேலையைத் தேடிக் கண்டுபிடிப்பது சவாலான காரியம். அதுமட்டுமல்லாமல் கடந்த இரண்டு மூன்று வருடங்களாகப் புதிய வேலைவாய்ப்பு என்பது குறைந்தே காணப்படுகிறது. எனவே, ஒவ்வொருவரும் இருக்கும் வேலையைத் தக்கவைத்துக்கொள்வதே நல்லது’’ என்று ஆரம்பித்த போலாரிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் (தலைமை) பாலமுருகன், வேலை இழப்பு நடவடிக்கையில் பணியாளர்கள் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார்.

பன்முகத் திறமை!

“வேலை இழப்பு என்ற நெகட்டிவ் சூழ்நிலையில் மட்டுமல்ல, பதவி உயர்வு என்ற பாசிட்டிவ் சூழ்நிலையிலும் உங்களுக்குரிய பலன் கிடைக்க வேண்டுமெனில், பல்வேறு துறைகளில் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதுதான் நல்லது. ஏற்கெனவே செய்துவரும் வேலையின் நுணுக்கங்கள் அனைத்தையும் நாம் கற்றுக் கொண்டுவிட்டோமா என்பதை ஒரு முறைக்கு இரண்டு முறை ஆராய்ந்து பார்த்துவிடுவது நல்லது. ‘இந்த வேலையில்தான் நமக்கு எல்லாம் தெரியுமே’ என்று நினைத்துக்கொண்டு புதிதாக எதுவுமே கற்றுக்கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது.

‘இது நமக்குத் தேவையில்லை’ என்று எந்த விஷயத்தையும் எப்போதுமே ஒதுக்கிவைக்கக் கூடாது. அடுத்தடுத்து புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கிறீர்கள் எனில், தயாரிப்பு தொடர்பான வேலைகளையும் அதிலுள்ள நுணுக்கங்களையும் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம்.

நிறுவனத்துக்கு என்ன லாபம்..?

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கும்போது, அந்த நிறுவனத்தால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று பார்ப்பதைவிட, உங்களால் அந்த நிறுவனத்துக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றுதான் பார்க்க வேண்டும். நிறுவனமும் அந்தக் கோணத்தில்தான் பார்க்கும். ‘இவரால் இரண்டு வேலைகளை ஒருசேரப் பார்க்க முடியுமா, கூடுதலாக என்னென்ன விஷயங்கள் தெரியும்’ என்பதைத்தான் நிறுவனம் பார்க்கும். இப்போது பல நிறுவனங்கள் நிதிச் சிக்கலில் இருக்கின்றன. எனவே, ஒருவருக்கான சம்பளத்தில் இரண்டு பேர் பார்க்கிற வேலையைச் செய்பவர்களையே வேலைக்கு வைத்துக்கொள்ள நிறுவனம் விரும்பும். எனவே, உங்களுக்குக் கூடுதலாகத் தெரியும் விஷயங்கள் அனைத்தையும் நிர்வாகத்துக்கு இந்தச் சமயத்தில் தெரிவித்துவிடுவது நல்லது. நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நீங்கள் தொடர்ந்து நிறைவேற்றி வந்தாலே போதும்; உங்களுக்குள்ள திறமையை நிர்வாகம் தானாகவே புரிந்துகொண்டு, உங்களுக்குப் பதவி உயர்வு தர முன்வரும்.

வேலை இழப்பு... தப்பிக்கும் வழிகள்! - கொரோனாகால ஆலோசனைகள்..!

தொழில்நுட்பத்தில் அக்கறை தேவை!

தொழில்நுட்பங்களை எப்போதுமே விரல்நுனியில் வைத்துக்கொள்வது முக்கியம். பொதுவாக, தொழில்நுட்பங்களில் கைதேர்ந்தவர்களாக இருப்பவர் கள் தங்கள் வேலையை விரைவாகச் செய்து முடித்துவிடுவார்கள். தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தெரியாதவர்களை நிறுவனங்கள் மதிப்பதில்லை. எனவே, நிறுவனத்திலுள்ள தொழில் நுட்பங்களை விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலையா, குறைந்த சம்பளமா?

ஆட்குறைப்பு என்று வரும்போது கடைசியாக வேலைக்குச் சேர்ந்தவர்களை முதலில் வேலையைவிட்டு அனுப்புவதுதான் வழக்கம். சட்டப்படியும் அதுதான் சரி. ஆனால், இன்று அப்படியெல்லாம் நடப்பதில்லை. திறமையற்றவர்களையும், அதிக சம்பளம் வாங்குபவர்களையும்தான் முதலில் வேலையை விட்டு வெளியேற்றுகிறார்கள். எனவே, ஆட்குறைப்பு சமயங்களில் குறைவான சம்பளத்தில் வேலை பார்க்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அத்துடன், நிறுவனத்தின் வேறு கிளையில் அல்லது வேறு பிரிவுகளில் வேலை பார்க்கவும் உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

வேலை இழப்பு
வேலை இழப்பு

நிர்வாகம் தனக்கு எதிராகச் சிந்திப்பவர்களையும், செயல்படுபவர்களையும் வேலையில் வைத்திருக்க விரும்பாது. அதுமாதிரியான நபர்களை ஒழித்துக்கட்ட நிர்வாகத்துக்கு இப்போது நல்ல வாய்ப்பு. எனவே, நிர்வாகத்துக்கு எதிரான கருத்துகளைப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நிறுவனம் மேற்கொள்ளும் புதிய திட்டங்களை ஏற்று, அவற்றைச் செயல்படுத்திக் காட்டுவதில் நீங்கள் முதல் ஆளாக இருக்க வேண்டும்.

ஆட்குறைப்பு செய்யும் சமயங்களில் ‘எனக்கு எல்லாமே தெரியும். எனக்கு வேலை போகாது’ என்ற அதிக நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது.

ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் யாருடைய வேலை வேண்டுமானாலும் போகும் என்பதால், எதற்கும் தயாராக இருப்பதே அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர நமக்கு உதவும்.

தலைமையுடன் நல்ல உறவு!

உயரதிகாரிகளுடன் நெருங்கிய உறவை வைத்திருந்தால், தேவையில்லாத பல வேலைகள் வந்துசேரும் என்று பலரும் நினைக்கிறார்கள். இதனால் உயரதிகாரிகளிடமிருந்து சற்று விலகியே நிற்கிறார்கள். இது தவறான எண்ணம். அலுவலகம் தொடர்பாக உயரதிகாரிகள் சொல்லும் வேலையைச் சரியாகச் செய்து தருவதன் மூலம் உங்கள் திறமையை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே, நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை உங்கள் தலைமைக்கு அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டே இருங்கள். அதே சமயம், உங்களுக்கிருக்கும் நியாயமான பிரச்னைகளையும் நாசூக்காக எடுத்துச் சொல்லுங்கள். கூடுமானவரை உங்கள் தலைமையிடம் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது.

வேலை இழப்பு
வேலை இழப்பு

தவறுகள் கூடாது!

நிறுவனம் உங்களுக்குக் கொடுக்கும் பணியைச் சிறு தவறுகூட ஏற்படாமல், மற்றவர்கள் உங்களைப் பாராட்டும் அளவுக்குக் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தாலும்கூட அவற்றுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். இந்த நேர்மை உங்களுக்கான தொடர் வாய்ப்பையும், பணியையும் உருவாக்கி நிறுவனத்தில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுத் தரும்” என்றார் அவர்.

வேலையைத் தக்கவைத்துக்கொள்ள மேற்சொன்ன இந்த விஷயங்களெல்லாம் முக்கியம். இவற்றை நீங்கள் பின்பற்றி, உங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ளலாம் அல்லது இன்னொரு வேலைக்குப் போன பிறகு இவற்றையெல்லாம் பின்பற்றி, உங்கள் வேலையை இழக்காமல் இருக்கலாம். `உங்கள் வேலை உங்கள் கையில்’ என்பதை மறக்காதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு