Published:Updated:

`தெலங்கானாவுக்காகப் போராடினோம்; இப்போது எங்களையே மிரட்டுகிறார்' - தகிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்

முதல்வரின் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் எதிர்த்துப் போராடுவோம் என தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் பேசியுள்ளனர்.

 சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

தெலங்கானா சாலை போக்குவரத்துக் கழகத்தை முழுமையாக அரசுடன் இணைப்பது, 2017 ஊதிய சீரமைப்பு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா போக்குவரத்துத் துறை ஊழியர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுதபூஜை, வார விடுமுறை நாள்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். தனியார் ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கினாலும் முழுமையாக பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலையே இருந்தது.

`தெலங்கானாவுக்காகப் போராடினோம்; இப்போது எங்களையே மிரட்டுகிறார்' - தகிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்

போக்குவரத்துத் துறை 1,200 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பண்டிகை நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனே அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என அரசுத் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, குறைந்த அளவிலான ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்.

ஊழியர்கள் பணிக்குத் திரும்பாததையடுத்து போக்குவரத்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசியவர், ``அரசின் எச்சரிக்கைக்குப் பின்னரும் பணிக்குத் திரும்பாத ஊழியர்கள் வேலை இழந்ததாகவே கருதப்படுவர். அவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டப்படமாட்டாது. மேலும், போக்குவரத்துத் துறையை முழுமையாக அரசுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது” என்றார். விரைவில் புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற முதல்வரின் அறிவிப்பு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்
போராட்டம்

இதுகுறித்துப் பேசிய போக்குவரத்து ஊழியர்கள், ``முதலமைச்சரின் இந்தச் செயல் கவலையளிக்கிறது. இதுவரை எங்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. தெலங்கானா மாநிலம் அமைவதற்காக நாங்கள் போராடினோம். இப்போது எங்களையே வேலையை விட்டு தூக்கிடுவோம் என மிரட்டுகிறார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இதை எதிர்த்து சண்டையிட நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் நாங்கள் வீதிகளில் சுற்றிக்கொண்டிருக்கிறோம். தனி தெலங்கானா அமைந்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் அரசுப்பணி என வாக்குறுதி அளித்தார். இப்போது என்ன செய்திருக்கிறார் 50,000 பேர் வேலைகளைப் பறித்துள்ளார். இப்போது 50,000 பேர் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். முதல்வர் செய்தது சரியா?” எனக் கேள்வியெழுப்புகின்றனர்.