அரசியல்
அலசல்
Published:Updated:

‘என்கவுன்ட்டர்’ வெள்ளத்துரை... குட்டுவைத்த மனித உரிமை ஆணையம்!

‘என்கவுன்ட்டர்’
பிரீமியம் ஸ்டோரி
News
‘என்கவுன்ட்டர்’

அனைத்து என்கவுன்ட்டர் வழக்குகளையும் மறுவிசாரணை செய்ய வேண்டும். என்கவுன்ட்டர் செய்யும் அதிகாரிக்கு டபுள், டிரிபுள் புரொமோஷன் கொடுக்கும் போக்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்

‘தமிழக காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை தலைமையிலான போலீஸாரால், 12 வருடங்களுக்கு முன்பு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இருவரின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்ற அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம்!

மதுரையைச் சேர்ந்த கவியரசு, கல்லுமண்டையன் என்ற முருகன் ஆகியோர் கடந்த 2010-ம் ஆண்டில், மதுரையில் செல்வாக்குமிக்க அரசியல்வாதி ஒருவரின் உறவினரை மிரட்டி பணம் கேட்டதாகப் புகார் எழுந்தது. ஏற்கெனவே இவர்கள்மீது திருட்டு வழக்குகள் இருந்ததால், அப்போது மதுரையில் உதவி கமிஷனராக இருந்த வெள்ளத்துரை தலைமையிலான போலீஸ் டீம், இருவரையும் என்கவுன்ட்டர் செய்தது.

வெள்ளத்துரை
வெள்ளத்துரை

‘இது போலி மோதல் சாவு, முன்பே பிடித்துச் சென்று சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றுவிட்டார்கள்’ என்று முருகனின் தாயார் குருவம்மாள் தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி, ‘தற்காப்புக்காகத்தான் வெள்ளத்துரை சுட்டார்’ என்று வழக்கை முடித்துவைத்தார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், மாநில மனித உரிமை ஆணையத்தில் ‘மக்கள் கண்காணிப்பகம்’ சட்டப் போராட்டம் நடத்திய நிலையில், இழப்பீடு வழங்குமாறு உத்தரவு வந்திருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய ‘மக்கள் கண்காணிப்பகம்’ ஹென்றி டிபேன், ‘‘அயோத்திகுப்பம் வீரமணி, திருச்சியில் கோசி, வீரப்பன், மணல்மேடு சங்கர், மதுரையில் கவியரசு, கல்லுமண்டையன் என போலி மோதல் சாவுகளை ஏற்படுத்திய வெள்ளத்துரைக்கு இரட்டைப் பதவி உயர்வு கொடுத்து என்கவுன்ட்டர்களைத் தொடர்ந்து நடத்த ஊக்குவித்தது காவல்துறை. குற்றவாளிகள்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் சுட்டுக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது தவறென்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவு வந்திருக்கிறது. ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்ற இந்த உத்தரவே, தமிழக அரசு இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதற்கான அடிப்படைதான். எனவே, என்கவுன்ட்டரில் ஈடுபட்ட வெள்ளத்துரை உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து என்கவுன்ட்டர் வழக்குகளையும் மறுவிசாரணை செய்ய வேண்டும். என்கவுன்ட்டர் செய்யும் அதிகாரிக்கு டபுள், டிரிபுள் புரொமோஷன் கொடுக்கும் போக்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஹென்றி டிபேன்
ஹென்றி டிபேன்

தற்போது சென்னையில் ஏ.டி.எஸ்.பி-யாகப் பணியாற்றிவரும் வெள்ளத்துரையிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்காக அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது, சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இதையடுத்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் பேசியபோது, “மனித உரிமை ஆணையத்தின் உத்தரவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆய்வுசெய்துவிட்டுச் சொல்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்துக்கொண்டார்.