Published:Updated:

அக்கா இல்லை; அம்மா!

சுகுணா
பிரீமியம் ஸ்டோரி
சுகுணா

ரெண்டாவது தம்பி தியாகராஜனுக்கும் அதே வயசு வரும்போது கால் இழுத்துக்கிட்டு நடக்கமுடியாமப்போயிடுச்சு

அக்கா இல்லை; அம்மா!

ரெண்டாவது தம்பி தியாகராஜனுக்கும் அதே வயசு வரும்போது கால் இழுத்துக்கிட்டு நடக்கமுடியாமப்போயிடுச்சு

Published:Updated:
சுகுணா
பிரீமியம் ஸ்டோரி
சுகுணா

மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள் என உடன் பிறந்த ஐந்துபேருமே மாற்றுத்திறனாளிகள் என்பதால், திருமணமே செய்துகொள்ளாமல் தாயாக இருந்து 30 வருடங்களாக அவர்களைப் பராமரித்துவருகிறார், சென்னையைச் சேர்ந்த சுகுணா. 50 வயதைக் கடந்துவிட்டாலே இன்னொருவரின் ஆதரவு தேவைப்படும். அப்படியிருக்க, 60 வயதை நெருங்கப்போகும் சுகுணா ஒற்றை மனுஷியாக, மாற்றுத்திறன் கொண்ட சகோதர, சகோதரிகளை எப்படிப் பராமரித்துப் பார்த்துக்கொள்கிறார்?

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதிக்குச் சென்று யாரிடம் கேட்டாலும் ஒருவித பரிதாபத்தோடு வழிகாட்டுகிறார்கள். அந்த அளவிற்கு, சுகுணாவின் வலியும் வேதனையும் அங்குள்ளவர்களின் முகத்திலேயே பிரதிபலிக்கிறது. அந்தக் குறுகலான தெருவுக்குள் சென்றால், எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் பரிதவிப்போடு வரவேற்கிறது அந்த ஹவுசிங் போர்டு கட்டடம்.

தரைத்தளத்தில் உள்ள சுகுணாவின் வீட்டிற்குள் நாம் நுழைந்தோம். ஓர் அறையில் 50 வயது மதிக்கத்தக்க இருவர் கை கால் இழுத்தபடி படுத்திருக்க, இன்னொரு அறையிலிருந்து இருவர் தவழ்ந்தபடியும் அமர்ந்தபடியும் நம்மைப் பார்க்கிறார்கள். உள்ளிருந்து வந்த சுகுணா நம்மை வரவேற்றுவிட்டு, “இருங்க, தம்பிக்கு டயாப்பர் மாற்றிட்டு வர்றேன்” என்றபடி 57 வயது தம்பியை சிரமப்பட்டுத் தூக்கி டயாப்பர் மாற்றிவிட்டு பெருமூச்சுடன் வருகிறார்.

அக்கா இல்லை; அம்மா!

நம்மிடம் பேசத்தொடங்கிய சுகுணா, ``அப்பா பேரு ஆறுமுகம், அம்மா பேரு ஆண்டாள். எங்க வீட்டுல நான்தான் மூத்த பொண்ணு. எனக்கப்புறம்தான் விஸ்வநாதன், சந்திரா, தியாகராஜன், கற்பகம், தெய்வநாயகி, ஜெயராமன். நாங்க ஏழு புள்ளைங்க. அப்பா கார்ப்பரேஷன்ல ஸ்வீப்பர் வேலை பார்த்துக்கிட்டிருந்தாரு. இந்த ஏரியாவுல முதல்ல கடை வச்சிருந்தது எங்கம்மாதான். கொஞ்சம் வசதியாத்தான் வாழ்ந்தோம். அதனாலதான், எங்களை நல்லா படிக்க வெச்சாரு அப்பா. ஆனா, யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல. திடீர்னு என்னுடைய மூத்த தம்பி விஸ்வநாதனுக்கு 18 வயசு இருக்கும்போது கால் இழுத்துக்கிச்சு. உடனே, கெனால் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டுக்கிட்டு போயி காட்டினோம். முதுகுத் தண்டுவடத்துல நீர் சேர்ந்திருக்குன்னு சொல்லி ஏதேதோ டெஸ்ட்லாம் எடுத்துப் பார்த்தாங்க. என்னென்னமோ ட்ரீட்மென்ட்லாம் பண்ணினாங்க. ஆனா, சரியாகல. இப்போ அவனுக்கு 57 வயசு ஆகுது. எழுந்து நடக்கவே முடியாம கஷ்டப்படுறான்” என்று கை காண்பிக்க, படுத்த படுக்கையாகக் கிடக்கிறார் விஸ்வநாதன்.

``ரெண்டாவது தம்பி தியாகராஜனுக்கும் அதே வயசு வரும்போது கால் இழுத்துக்கிட்டு நடக்கமுடியாமப்போயிடுச்சு. இதுக்கும் நடுவுல, கடைசித் தம்பி ஜெயராமன் பொறக்கும்போதே மூளை வளர்ச்சி இல்லாமலேயே பொறந்துட்டான். அவனால, நடக்கவும் முடியாது; பேசவும் முடியாது. நாம சொல்ற எதையுமே புரிஞ்சுக்கவும் முடியாது. எல்லோருமே மனசு ஒடைஞ்சு போயிட்டோம்.

தம்பிங்கதான் இப்படின்னா, என்னோட தங்கச்சிங்க சந்திராவும் கற்பகமும் கிட்டத்தட்ட பதிமூணு, பதினஞ்சு வயசு இருக்கும்போது திடீர்னு கால் இழுத்துக்கிட்டு நடக்கமுடியாமப் போயிடுச்சு. இதுல, சந்திரா பத்து வருஷத்துக்கு முன்னாடி உடம்பு முடியாமலே இறந்துட்டா. இப்படி எங்களோட வாழ்க்கையில இடி மேல இடி விழுந்துக்கிட்டே இருக்கும்னு நாங்க நினைச்சுக்கூடப் பார்க்கல. இதுல ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா, கடைசித் தங்கச்சி தெய்வநாயகியும் நானும் மட்டும்தான் நார்மலா இருக்கோம்.

அக்கா இல்லை; அம்மா!

போகாத ஹாஸ்பிட்டல் இல்ல. பார்க்காத டாக்டர்கள் இல்ல. எல்லோரும் எங்க அப்பா அம்மாவைப் பார்த்துக் கேட்ட ஒரே கேள்வி, `சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?’ என்பதுதான். அதற்கான பதிலில்தான் என் தம்பி தங்கச்சிங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்கான காரணம் புரிய ஆரம்பிச்சது. அப்பாவுக்குச் சொந்த அத்தை பொண்ணுதான் அம்மா.

குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தரும் இப்படி ஆனதால மனசளவுல நொறுங்கிப்போன எங்க குடும்பம், பொருளாதாரத்திலேயும் ரொம்பவே பாதிக்கப்பட்டுடுச்சு. எங்கப்பா இருக்கிறவரைக்கும் கொஞ்சம் துணையா இருந்தது. 24 வருஷத்துக்கு முன்னாடி அப்பாவும் இறந்துட்டாரு. அவரு இறந்துபோன கவலையில சில வருஷங்கள்ல அம்மாவும் இறந்துட்டாங்க” என்று சுகுணா கண்கலங்குகிறார்.

சுவரில் சாய்ந்தபடி இருந்த சுகுணாவின் தங்கை கற்பகம் நம்மிடம், ``அதுக்கப்புறம், அக்காவா மட்டுமல்ல; அப்பாவா, அம்மாவா கூடுதல் பொறுப்போடு எங்க எல்லாரையும் அக்காதான் பார்த்துக்க வேண்டியிருந்துச்சு. வீட்டுக் கஷ்டத்தைப் போக்க, தூய்மைப் பணியாளர் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க. அம்மா, அப்பா இருக்கும்போதே எங்க பெரியக்காதான் எங்களை அன்பா, பாசமா பார்த்துக்குவாங்க. எங்களுக்கு எல்லாமே அவங்கதான். சின்ன வயசிலேர்ந்தே அவங்களுக்கு அவ்வளவு பாசம். எங்களுக்கு இப்படி ஆனதிலிருந்து வெளியுலகம் எங்கயுமே போனதில்ல. இந்த வீட்டிலேயேதான் அடைஞ்சு கிடக்குறோம். இந்த வீடும் எங்க அக்காவும்தான் எங்களுக்கு உலகமே. நிறைய பேரு வந்து எங்கக்காவைப் பொண்ணு கேட்டாங்க. ஆனா, எங்களுக்காக அவங்க கல்யாணம்கூட பண்ணிக்கல.

அக்கம் பக்கத்து வீட்டுல யாரும் பேசமாட்டாங்க. ஆரம்பத்துல அவங்க பேச மாட்றாங்கன்னு ஏக்கம் இருக்கும். இப்போ, அப்படி எதுவும் தோணறதில்ல. அவங்க எல்லாம் பேசாததால நாங்களும் பேசுறதில்ல.

தூய்மைப் பணியிலிருந்து அக்கா இப்போதான் ஓய்வு பெற்றாங்க. அதிலிருந்து முழுக்க முழுக்க எங்ககூடத்தான் இருக்காங்க. சமைக்கிறதுல ஆரம்பிச்சு, துணி துவைக்கிறது, கடைக்குப் போய் காய்கறி வாங்குறது, வீட்டு வேலைகள் வரை எல்லாத்தையும் அக்காதான் செய்றாங்க. இப்படியொரு அக்கா மட்டுமில்லைன்னா நாங்க உசுரோடவே இருந்து இப்போ உங்ககிட்ட பேசியிருக்க மாட்டோம்” என்று கண் கலங்குகிறார் கற்பகம்.

வீட்டின் நடுவே கம்பியால் ஆன கயிறு தொங்குகிறது. அதைப் பிடித்துக்கொண்டுதான் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்ட இன்னொரு தம்பி தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கிறார்.

சுகுணா நம்மிடம், “எல்லோருக்கும் இருக்கிறமாதிரி கல்யாணம் பண்ணி வாழணும்ங்குற ஆசை எனக்கும் இருந்துச்சு. என்னோட தோழிங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கும்போது எனக்கும் எப்படி ஆசை இல்லாமப்போகும்? தம்பி, தங்கச்சிகளுக்கு முன்னால வேறெதுவும் எனக்குப் பெரிசா தெரியல. ஒரே ஆறுதல் என்னோட ஒரு தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணி வெச்சதுதான். குடும்பம் தழைக்கணுமில்லயா? அவளுக்கு ஒரு பொண்ணு, பையன் இருக்காங்க. அதுவே, எங்க வாழ்க்கையில மகிழ்ச்சிதான்.

தெய்வநாயகி
தெய்வநாயகி

இது, காமராஜர் காலத்துல கட்டின அரசு ஹவுசிங் போர்டு வீடு. ரொம்பப் பழசாகிடுச்சு. எப்போ இடிஞ்சு விழும்னு சொல்லவே முடியாது. மேல் வீட்டிலிருந்து தண்ணீர் அப்படியே வீட்டுக்குள்ள கொட்டிக்கிட்டே இருக்கும். இப்போதைக்கு, இவங்க எல்லாருக்கும் 1,000 ரூபாய் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வருது. அதையும் எனக்கு வர்ற பென்ஷனையும் வெச்சுதான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கோம். ரேஷன் அரிசிதான் சாப்பிடுறோம். காலையில சமைக்கிறதில்ல. மதியமும் இரவும் என ரெண்டு வேளைதான் சாப்பிடுவோம். அந்த அளவுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருக்கிறோம்.

வயதாகிட்டதால மருந்து, மாத்திரைக்குக்கூடப் பணமில்லாம கஷ்டப்படுறோம். ஏற்கெனவே, சுனாமி வந்தப்போ ஒரு தம்பி தண்ணியில அடிச்சுக்கிட்டுப் போயிடப் பார்த்தான். அப்போ காப்பாத்திக் கூட்டிக்கிட்டு வந்தோம். ஏதாவது ஒரு ஆபத்துன்னா தூக்கிக்கிட்டு ஓடக்கூட முடியாது. நான் உசுரோட இருக்கிறவரைக்கும்தான் அன்பு, பாசத்தோட இவங்களைப் பார்த்துக்கமுடியும். அதுக்கப்புறம் இவங்களை யாரு பார்த்துப்பான்னு நினைக்கும்போதே ஈரக்கொலையெல்லாம் நடுங்குது. ஒவ்வொரு நாளும் தூக்கம் வரமாட்டேங்குது. தமிழக முதல்வர், நாங்க வாழ்றதுக்கு ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுத்தா போதும். நான் இவங்களைப் பார்த்துப்பேன்” என்ற கோரிக்கையை வைக்கிறார் சுகுணா.

அன்னையாய் தந்தையாய் வாழும் இந்த அக்காவின் குரலை நிச்சயம் அரசு காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism