Published:Updated:

மனிதத்தின் அடையாளம் நஞ்சப்பா சத்திரம்!

நஞ்சப்பா சத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நஞ்சப்பா சத்திரம்

நம்ம ஊர்ல இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துருச்சி. எப்படியாவது அவங்க உயிரைக் காப்பாத்தணும்’கிறது மட்டும்தான் எங்க எல்லார் மனசுலயும் இருந்துச்சு.

இந்தச் சம்பவத்துக்கு முன்பு நீலகிரி மாவட்டத்திலேயே பலருக்கு நஞ்சப்பா சத்திரம் கிராமத்தைத் தெரிந்திருக்காது. நாட்டையே பேரதிர்ச்சியில் உறைய வைத்த கோரமான ஒரு ஹெலிகாப்டர் விபத்து, இந்தியா முழுக்க விமானப்படை முதல் காவல்துறை வரை அந்த கிராமம் குறித்துப் பேசவைத்துவிட்டது. முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் மரத்தில் மோதிச் சிதறியது, அரசுத் துறைகளுக்கு முன்பு நஞ்சப்பா சத்திரம் மக்களுக்குத்தான் தெரிந்தது. அந்த ஊரில்தான் அது விழுந்து நொறுங்கியது.

விபத்து நடந்த அன்றைய தினம் குன்னூர் சுற்றுவட்டாரங்களில் கடுமையான பனிப்பொழிவு. இரவு நேரத்தில் ஏற்பட்ட கடும் குளிர், நரம்புகள் வரை ஊடுருவி நடுங்க வைத்தது. ஆனால், நஞ்சப்பா சத்திரம் மக்கள் குளிரைப் பற்றி யோசிக்கவில்லை. தங்களது கம்பளிகளை மீட்புப் பணிகளுக்கு வாரி வழங்கினர். முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரும் அந்த மக்களின் கம்பளி மூலம்தான் தூக்கி வரப்பட்டனர். அந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாள்கள் கழித்துதான், காவல்துறையினரும், ராணுவத்தினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் அந்த கிராமத்துக்குச் சென்று கம்பளி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வழங்கி நன்றி தெரிவித்தனர். எந்தப் பிரதிபலனும் யோசிக்காமல் அந்த மக்கள் செய்த உதவிதான், இந்தத் துயரத்திலும் நஞ்சப்பா சத்திரத்தின் பெருமையைப் பேச வைத்திருக்கிறது.

மனிதத்தின் அடையாளம் நஞ்சப்பா சத்திரம்!

நஞ்சப்பா சத்திரம் கிராமத்துக்கு அவ்வளவு எளிதில் சென்றுவிட முடியாது. தேயிலைத் தோட்டங்களும் காட்டு மரங்களும் நிறைந்த குன்னூர் மலைச்சரிவின் காட்டேரிப் பண்ணை அருகில் அமைந்திருக்கிறது அந்த கிராமம். மீட்புப் பணிக்குச் சென்ற ஆம்புலன்ஸ், காவல்துறை, தீயணைப்புத்துறை வாகனங்கள்கூடத் திணறின. கீழே இருந்து சரிவில் ஏறி நடந்து சென்றால் மூச்சுத் தள்ளும். மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் அடிக்கடி மேலும் கீழும் சென்றுகொண்டிருந்ததால் ரொம்பவே தடுமாறினர்.

ஹெலிகாப்டர் விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத முதியவரான நஞ்சப்பா சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையாவிடம் பேசினோம். ‘‘ஹெலிகாப்டர்ல இருந்தது இவ்ளோ பெரிய அதிகாரிமாருங்கன்னு அப்புறமாதான் எங்களுக்குத் தெரிஞ்சது. அந்த நேரத்துல நாங்க எதப்பத்தியும் யோசிக்கல. ‘நம்ம ஊர்ல இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துருச்சி. எப்படியாவது அவங்க உயிரைக் காப்பாத்தணும்’கிறது மட்டும்தான் எங்க எல்லார் மனசுலயும் இருந்துச்சு. ஹெலிகாப்டர் எரியிற சூட்டுல பச்ச மரமே பத்தி எரிஞ்சது. 40 அடி உயரத்துக்கு ஹெலிகாப்டர் கொழுந்து விட்டு அனல் கக்க ஆரம்பிச்சது. அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்த உடனே, ஊர்ல இருந்த ஆம்பள, பொம்பள எல்லாம் ஆளாளுக்கு வீட்டுல இருந்து குடம், பக்கெட்னு கையில கெடைக்கிற பாத்திரத்துல தண்ணிய கொண்டு வந்து ஊத்துனோம். அனல் சூட்டுக்குப் பக்கத்துல நெருங்க முடியல. தீயில புழுவாத் துடிக்கிற மனுசங்களப் பாத்தபோது, எங்களுக்கு எந்தச் சூடும் அந்த நேரத்துல பெருசாத் தெரியல.

மனிதத்தின் அடையாளம் நஞ்சப்பா சத்திரம்!

நெருப்புல வெந்து துள்ளித் துடிச்சவங்களை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போக வீட்டுல இருந்த கம்பளி, போர்வை எல்லாத்தையும் கொண்டுவந்து தொட்டில் கட்டினோம். ரொம்ப மோசமா கருகி இறந்துபோனவங்க உடம்ப மறைச்சுக் கொண்டு போக ஒவ்வொரு உடம்புக்கும் நான்கைந்து கம்பளிகள் தேவைப்பட்டுச்சு. இருந்த கம்பளியெல்லாம் குடுத்துட்டதால அன்னைக்கு ராத்திரி ஊர்ல பாதி வீட்டுல குளிர்லதான் கெடந்தாங்க. வீட்டுல சோறு சமைக்க வச்சிருந்த விறகையெல்லாம் அன்னைக்கு நைட்டு குளிர்ல நடுங்குன மிலிட்டரிகாரவுங்க தீ மூட்டிக் குளிர்காயக் கொடுத்துட்டோம். இந்த ஒரு வாரமா யாரும் வீட்டுக் கதவையும் அடைக்கறதில்ல. எந்த நேரத்துல யார் எதை வந்து கேட்டாலும் இருக்கிறத இல்லைன்னு சொல்லாமக் குடுத்துட்டு இருக்கோம்’’ என்றார்.

தனது வீட்டு வாசலில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தால் தற்காலிகமாக வீட்டை ராணுவ அதிகாரிகள் வசம் ஒப்படைத்துவிட்டு உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் ஜெய்சங்கரிடம் பேசினோம்.

‘‘குன்னூர்ல வேலை செஞ்சிட்டு இருந்தேன். காட்டேரிகிட்ட ஹெலிகாப்டர் விழுந்துருச்சின்னு முதலாளி செல்போன்ல போட்டோ காட்டுனாரு. உத்துப் பாத்தபோது என்னோட வீட்டுப் பக்கத்துலன்னு தெரிஞ்சது. பதறியடிச்சி ஓடிவந்தேன். வாசல்ல இருந்து நாலு அடிலதான் விழுந்து கெடந்தது. வீட்டுக்கு பெருசா ஒண்ணும் பாதிப்பு ஆகலை. ஒண்ணு ரெண்டு பொருள் வெடிச்சி வீட்டு மேல சிதறியிருக்கு. அதிகாரிங்க பயன்படுத்திக்க வீட்டுக் கதவைத் தெறந்து விட்டுட்டேன். எனக்கு வெவரம் தெரிஞ்சி எங்க ஊர்ப் பக்கம் ஓட்டு கேக்கக்கூட குறிப்பிட்ட சிலர்தான் வருவாங்க. ஆனா, இந்தச் சம்பவத்துக்குப் பின்னாடி ஒட்டுமொத்த நாட்டு அதிகாரிகளும் இங்கதான் இருக்காங்க. எல்லா வசதியும் ஊருக்குச் செஞ்சி கொடுக்குறோம்னு சொல்றாங்க.வீட்டோட தகரக் கூரைய மாத்திக் கொடுக்குறேன்னு மிலிட்டரி ஆபீசருங்க சொல்லியிருக்காங்க’’ என்றார்.

மனிதத்தின் அடையாளம் நஞ்சப்பா சத்திரம்!

இந்த விபத்து பனிமூட்டத்தால் நடந்ததா, தொழில்நுட்பக் கோளாறா என்பது தெரியவில்லை. ஆனால், அந்த நேரத்தில் அங்கு கடுமையான பனிமூட்டம் இருந்தது என்பதை உணர்த்தும் ஒரே ஆதாரம், சுற்றுலாப் பயணிகள் எடுத்த வீடியோ. விபத்து நடப்பதற்குச் சில நொடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த வீடியோ மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது.

வீடியோவை எடுத்த நண்பர்களான ஜோபால் மற்றும் நாசரிடம் பேசினோம். “குடும்பத்தோட ஊட்டி போனோம். மேட்டுப்பாளையம் தாண்டி, காட்டேரிகிட்ட ரயில்வே டிராக்ல போட்டோ எடுத்துட்டிருந்தோம். அப்ப ஒரு ஹெலிகாப்டர் வித்தியாசமான சத்தத்தோட போயிட்டு இருந்துச்சு. அதனால வீடியோ எடுத்தோம். மேகத்துக்குள்ள போன சில விநாடில ஹெலிகாப்டர் மரத்துல மோதி, டமார்னு கீழ விழுற சத்தம் கேட்டுச்சு. எங்களுக்குப் பதற்றம் ஆகிடுச்சு. என்னாச்சுன்னு பார்க்கப் போனோம். எதிர்ல போலீஸ்காரங்க, தீயணைப்புத்துறைலாம் வந்தாங்க. கேட்டப்ப, ஹெலிகாப்டர் ஆக்ஸிடென்ட்னு சொன்னாங்க. அவங்கள ஃபாலோ பண்ணிப் போகலாம்னு முயற்சி பண்ணுனோம். எங்கக் குழந்தைங்க கால்கள்ல அட்டைப் பூச்சி ஏறிடுச்சு. அதனால முடியல. வீட்டுக்கு போன் பண்ணிக் கேட்டப்ப டி.வி பார்த்துட்டு, ‘நாலு பேர் இறந்துட்டாங்க, ஒருத்தர் உயிரோட இருக்கார்’னு சொன்னாங்க. முப்படைத் தளபதி எவ்வளவு பெரிய அதிகாரி. ஆனா, அவர் இறந்தாருன்னு சாயங்காலம் 6 மணிக்கு மேலதான் தெரிஞ்சுது. கூடலூர் போயிட்டு கேக்கறப்ப 13 பேர் இறந்துட்டாங்கன்னு சொன்னாங்க. டி.வில என்னென்னமோ சொன்னாங்க. பார்த்துட்டு இன்னும் கஷ்டமாகிடுச்சு.

சின்னையா, ஜோபால், ஜெய்சங்கர், நாசர்
சின்னையா, ஜோபால், ஜெய்சங்கர், நாசர்

இந்த வீடியோவை அதிகாரிகள் கிட்ட கொடுக்கணும்னு முடிவு பண்ணினோம். ஊட்டில கலெக்டர் ஆபீஸுக்குப் போனோம். அவங்க போலீஸ் ஸ்டேஷன் போகச் சொன்னாங்க. அங்க போனப்ப, போலீஸ்காரங்க ஸ்பாட்டுக்குப் போகச் சொன்னாங்க. ஸ்பாட்டுக்குப் போய், ஒரு போலீஸ்காரர்கிட்ட வீடியோ கொடுத்துட்டு வந்துட்டோம். அதுக்கப்பறம்கூட எங்களைத் தேடறாங்க அப்படி இப்படின்னு செய்திகள் வந்துச்சு. அப்புறம், கோவை கமிஷனர் ஆபீஸுக்குப் போய் எங்களோட விவரங்களைச் சொன்னோம். அவங்க எஸ்.பி ஆபீஸ் போகச் சொன்னாங்க. ‘தயவுசெஞ்சு நீங்களே குறிச்சு வெச்சுக்கோங்க’ன்னு எல்லா விவரத்தையும் சொல்லிட்டு வந்தோம். இது சம்பந்தமா, யார் எப்போ விசாரணைக்குக் கூப்பிட்டாலும் நாங்க சப்போர்ட் பண்ணுவோம்” என்றனர் உறுதியான குரலில்.

ஒவ்வொரு இயற்கைச் சீற்றமும், கோர விபத்தும் மனிதத்தின் மகத்துவத்தை உணர வைக்கும். இந்த ஹெலிகாப்டர் விபத்து அப்படி ஏராளமான நல்ல உள்ளங்களை அடையாளப்படுத்தியுள்ளது.