Election bannerElection banner
Published:Updated:

அம்பத்தூர்: `மரணத்திலும் இணை பிரியாத தம்பதி’ - மனைவியின் இறுதி ஊர்வலத்தில் கணவரும் உயிரிழந்த சோகம்

மூர்த்தி-ராஜேஸ்வரி தம்பதி
மூர்த்தி-ராஜேஸ்வரி தம்பதி

அம்பத்தூரில் மனைவி இறந்த சோகத்தில் இறுதிச் சடங்குகள் அனைத்தையும் செய்துவிட்டு, கணவரும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூரை அடுத்த முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (75). இவரின் மனைவி பெயர் ராஜேஸ்வரி (68). இந்தத் தம்பதியருக்கு மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருக்கிறார்கள். மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியரான மூர்த்தி, தன் மனைவி மக்களுடன் முகப்பேர் முதலாவது பிளாக்கில் வசித்துவந்தார். மூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரி கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். இந்தநிலையில், ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

மனைவியின் மரணம் மூர்த்தியின் மனதை நொறுக்கிப்போட்டது. அவரின் மகன்களும்ம் மகள்களும் சேர்ந்து ராஜேஸ்வரியின் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் குறைவான அளவிலேயே ராஜேஸ்வரியின் மறைவுக்கு உறவினர்கள் வந்தனர். கிட்டத்தட்ட 50 வருடங்களாகத் தன் அன்புக்குப் பாத்திரமாக விளங்கிய மனைவி ராஜேஸ்வரியின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் பரிதவித்த மூர்த்தி அழுதபடியே இறுதிச் சடங்குகள் அனைத்தையும் மேற்கொண்டார்.

ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

அதைத் தொடர்ந்து, நேற்று மதியம் 12:30 மணியளவில் முகப்பேரை அடுத்த சத்யா நகர் மாநகராட்சி இடுகாட்டுக்கு ராஜேஸ்வரியின் உடல், ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மனைவியின் சடலத்தின் முன்பாக வேதனையுடன் நடந்து சென்ற மூர்த்தி திடீரென்று மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மூர்த்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மூர்த்தி உயிரிழந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேஸ்வரியின் சடலத்தை சத்யா நகர் இடுகாட்டிலேயே வைத்துவிட்டு மூர்த்தியின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து அதே இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு தாய், தந்தை இருவரது உடல்களையும் ஒரே நேரத்தில் அவர்களின் பிள்ளைகள் கதறி அழுதபடி தகனம் செய்தனர்.

மூர்த்தி
மூர்த்தி

சாவிலும் இணை பிரியாத கணவன் - மனைவியின் மரணம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு